Advertisment

புதிய கட்சி தொடக்கம்... தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா தளபதி விஜய்?

2024 மக்களவைத் தேர்தலில் தனது கட்சிக்கு போட்டியிடப் போவதில்லை என்று கூறிய விஜய், அதற்குப் பதிலாக 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Will Thalapathy Vijay disrupt Tamil Nadu politics Explained in tamil

விஜய்யின் அரசியல் பயணத்தின் கதை இன்னும் எழுதப்படவில்லை. ஆனால் அவர் தமிழக அரசியலையே அதிர வைக்கும் சூழல் இப்போது உருவாகியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Vijay | Tamilaga Vettri Kazhagam: 'தளபதி' என்று அன்புடன் அழைக்கப்படும் விஜய், தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) தொடங்குவதாக அறிவித்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த பலரும் அரசியலில் களமிறங்கி இருந்தாலும், உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.ஜி ராமச்சந்திரனுக்கு (எம்.ஜி.ஆர்) பிறகு இந்த மாற்றத்தை ஏற்படுத்திய இரண்டாவது உச்ச நட்சத்திரமாக 'விஜய்' உள்ளார். ஆனால், தமிழக அரசியல் சூழலுக்கு அவரால் சவால் விட முடியுமா? என்கிற தொடக்க கேள்வி முதல் ஆரம்பிக்கலாம். 

Advertisment

முதலில், மாநிலத்தின் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் 

தமிழ்நாட்டின் அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) ஆகிய இரு பெரும் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவற்றின் கூட்டணிகளுடன் 70 முதல் 80 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளன. எஞ்சிய 20 முதல் 30 சதவீத வாக்குகள் கைப்பற்றப்பட வேண்டியுள்ளன. விஜய் இலக்கு வைக்கும் இடம் இதுதான். அவருக்கு முன் பலரும் அதனைக் குறித்து வைத்து கடந்த முப்பது ஆண்டுகளாக மேலாக களமிறங்கியினர். 

1996 ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். இதன்பிறகு, 2005ல் ‘கேப்டன்’ விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார். சினிமா நட்சத்திரமான விஜயகாந் குறிப்பிடத்தக்க வகையில் மாநில அரசியலில் தனக்கென ஒரு அடையாளத்தை குறுகிய காலத்தில் உருவாக்கினார்.

இதற்கிடையில், திரைப்பட இயக்குனரான சீமான் 2009 ஆம் ஆண்டு தனது தமிழ் தேசியவாத கட்சியான நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். அவர் மாநிலத்தில் குறைந்தபட்ச ஆனால் நிலையான இருப்பை வெளிக்காட்டி வருகிறார். 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவருமான அன்புமணி ராமதாஸ், தன்னை 'அடுத்த முதல்வர்' என்று முன்னிறுத்தினார். ஆனால் தி.மு.க-அ.தி.மு.க என்கிற இரு பெரும் கட்சிகளை அவரால் முந்திச் செல்ல முடியவில்லை. 

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2018 இல் "ஊழல்" செய்யும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-விற்கு மாற்றாக தொடங்கப்பட்டது. ஆனால், தேர்தல் களத்தில் கமல்ஹாசன் வாக்குகளை குவிக்க தவறிவிட்டார். மேலும் இப்போது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் 2024 பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் ஒரு மக்களவை தொகுதியையாவது பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க-வின் அண்ணாமலை, ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து, அரசியல்வாதியாக மாறியவர். 2021ல் தமிழக அரசியலில் அடுத்த வரவிருக்கும் முகமாக உருவெடுத்துள்ளார்.  இருப்பினும், மேற்கூறிய அனைத்து புள்ளிவிவரங்களிலும், விஜய்யின் அந்தஸ்து இணையற்றது. 

விஜய்யின் அதீத வேண்டுகோள் முக்கியமானது

எம்.ஜி.ஆரைப் போலவே, விஜய் அரசியலுக்கு வருவதே அவருக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். அவர் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால், பிற்படுத்தப்பட்ட உடையார் சமூகத்தில் அவருக்கான ஆதரவைப் பெற முடியும். தமிழக அரசியல் பார்வையாளர்கள் விஜய்யின் வேண்டுகோள் சாதி, இனம், மதம் மற்றும் மாநிலத்திற்கு அப்பாற்பட்டது என்று நம்புகிறார்கள்.

விஜயகாந்த் "பி மற்றும் சி கிளாஸ் தியேட்டர்களின் ராஜா" -வாக திகழ்ந்தார். இதனால் கிராமப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள விருத்தாசலம் தொகுதியை தேர்ந்தெடுத்தார். மறுபுறம், கமல், படித்த, நகர்ப்புற மக்கள்தொகை காரணமாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் விஜய்யின் ரசிகர்கள், மல்டிபிளக்ஸ் முதல் சி கிளாஸ் வரை என எல்லாத் திரையரங்குகளில் ஒரே மாதிரியாக குவிகிறார்கள். 

"கிராமப்புறங்களில் அவர் இன்னும் உயர்ந்த அளவில் இருக்கிறார் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். அவருக்கு [தேர்தலில் போட்டியிட] நாங்கள் பரிந்துரைக்கும் இடமாக மதுரை இருக்கலாம். ஏன்னென்றால், மதுரை மட்டுமே பாதி-நகராக உள்ளது. ”என்று விஜய்யின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

விஜய்க்கு ஒத்திசைவான சித்தாந்தம் இருக்க வேண்டும்

ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிபெற பிரபலம் மட்டும் போதாது. ஒரு ஒத்திசைவான சித்தாந்தமும் வேண்டும். விஜயகாந்தின் குறுகிய கால வெற்றியும், கமல்ஹாசனின் போராட்டங்களும் இந்த உண்மைக்கு சாட்சி. திராவிட இயக்கத்தில் ஆழமாக வேரூன்றிய அரசியலால் உச்ச நட்சத்திரம் என்று பாராட்டப்பட்ட மறைந்த எம்.ஜி.ஆரின் வெற்றியும் அப்படித்தான்.

விஜய்யின் உதவியாளர் பேசுகையில், விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்தது அவரது சித்தாந்தத்தை திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறது. இது தமிழ் உரையான திருக்குறளில் இருந்து பின்வரும் வரியுடன் தொடங்குகிறது: "பிறப்போக்கும் எல்லா உயிருக்கும்..."

"இது அனைத்து உயிரினங்களுக்கிடையில் ஒரு உலகளாவிய உறவை பரிந்துரைக்கிறது, அல்லது ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரே பிறப்பு சுழற்சியால் பிணைக்கப்பட்டுள்ளது, கருணை, அகிம்சை மற்றும் வாழ்க்கைக்கு மரியாதை போன்ற நல்லொழுக்கங்களில் கவனம் செலுத்துகிறது. அதுதான் எங்களின் சித்தாந்தம்” என்று அவர்  கூறினார்.

விஜய் வெளியிட்ட அந்த அறிக்கையில் மூன்றாவது பத்தியில், “தற்போதைய அரசியல் சூழ்நிலையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஒரு பக்கம், 'ஊழல் கறை படிந்த அரசியல் கலாச்சாரம்' மற்றும் நிர்வாக முறைகேடு உள்ளது, மறுபுறம், ஜாதி மற்றும் மத வேறுபாடுகளால் நம் மக்களை துண்டாட துடிக்கும் 'பிளவு அரசியல் கலாச்சாரம்' உள்ளது. இவைதான் நமது ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கிறது” என்றார்.

பிரபலமான முகங்கள், கூச்ச சுபாவம் சவாலாக இருக்கும்

விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாக கட்சியில் பிரபலமான முகங்கள் இல்லாததுதான். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலத்தில் பழம்பெரும் அரசியல்வாதியான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் அவருக்கு உதவி செய்தாலும், விஜய்க்கு அப்படி இல்லை. குறைந்தபட்சம், இன்னும் இல்லை.

விஜய்யின் கட்சியில் உள்ள பெயரை வெளியிட விரும்பாத நிர்வாகி ஒருவர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், விஜய் ஏற்கனவே சில முக்கிய முகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர். அவர்களில் 1991 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி எம்.ரவி, சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழக டி.ஜி.பி சி.சைலேந்திர பாபு, மதுரை சுரங்க முறைகேடுகள் உட்பட பல சமயங்களில் மாநில அரசுடன் முரண்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் ஆகியோர் அடங்குவர். 

சினிமா உலகில் இருந்து பலரைப் போலல்லாமல், திரைக்கு வெளியே, விஜய் கூச்ச சுபாவமுள்ள மற்றும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நபர் இருப்பது, வழக்கமான அரசியல்வாதியைப் போல் இல்லாமல் இருப்பது சில ரசிகர்களை கவலையில் ஆழ்த்துகிறது. இதுபற்றி கேட்டபோது, ​"அப்படிப்பட்டவர்கள் மிகவும் ஆக்ரோஷமான முகத்தையும் கொண்டிருக்கலாம், இல்லையா?" என்று விஜய்க்கு நெருக்கமான நண்பர் கூறுகிறார். 

தமிழக அரசியலில் விஜய் தாக்கத்தை ஏற்பதும் காட்சி

விஜய்யின் அரசியல் பயணத்தின் கதை இன்னும் எழுதப்படவில்லை. ஆனால் அவர் தமிழக அரசியலையே அதிர வைக்கும் சூழல் இப்போது உருவாகியுள்ளது. 

2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க குறுகிய வட்டத்தில் சுருங்கி வருகிறது. ஜெயலலிதாவின் கவர்ச்சியான தலைமை இல்லாமல், மாநிலத்தில் பிரமாண்டமான அரசியல் கட்சி மற்றும் பெரும் தொண்டர் படை கொண்ட கட்சி என்று அவர்கள் இன்னும் பெருமையாகக் கூறிக்கொண்டிருக்கும் அதே வேளையில், கட்சி உட்பூசல் மற்றும் தீராத நெருக்கடிகளால் கட்சி சிக்கித் தவிக்கிறது.

ஜூன் 2023 இல் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் முதன்முதலில் வெளிப்பட்டதிலிருந்து, பா.ஜ.க மற்றும் ஆளும் தி.மு.க உட்பட கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வினை கருத்து தெரிவிக்காமல் அமைதியாகவும், உன்னிப்பாகவும் கவனித்து வருகிறார்கள். 

இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் தனது கட்சிக்கு போட்டியிடப் போவதில்லை என்று கூறிய விஜய், அதற்குப் பதிலாக 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Will Thalapathy Vijay disrupt Tamil Nadu politics?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Tamilaga Vettri Kazhagam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment