மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வியூகம் பலிக்கவில்லை என்ற கருத்து பா.ஜ. கட்சியினரை பெரும்கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. நண்பகல் நிலவரப்படி, பா.ஜ. 122 இடங்களில் முன்னணி பெற்றுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் 122 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முன்னணி நிலவரமே, அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பா.ஜ. கட்சியின் செயல்திட்டத்தின்படி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாதியளவிற்காவது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த பா.ஜ.,வினருக்கு இந்த முன்னணி நிலவர தகவல்கள் பெரும்சோகத்தையே ஏற்படுத்தியுள்ளன.
இந்த தேர்தல் முடிவுகள், முதல்வர் பட்னாவிஸிற்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. மாநிலத்திவன் வளர்ச்சி குறித்த வாக்குறுதிகளை தேர்தலின்போது அளிக்காமல், நாட்டின் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட விஷயங்களிலேயே, பா.ஜ. தலைமை அதிக முக்கியத்துவம் அளித்ததும், இந்த பின்னடைவிற்கு காரணமாக கருதப்படுகிறது.
பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை விவகாரங்கள் நாடுமுழுவதும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க, பா.ஜ. கட்சி அதை கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த மக்கள், தங்களது பதிலை, இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
மற்ற கட்சி தலைவர்களை, பா.ஜ. கட்சிக்குள் சேர்ப்பதன் மூலம், வெற்றியை எளிதாக ஈட்டிவிட முடியும் என்ற அக்கட்சியின் கணிப்பு தவறாய்ப்போனது. இது மக்களிடையே எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியிருந்தது எனலாம். சத்தாரா தொகுதி லோக்சபா எம்.பியான உதயணா ராஜே போஸ்லே, தனது பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ. கட்சியில் சமீபத்தில் சேர்ந்தார். பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ., வின் இந்த பின்னடைவு, சிவசேனா கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. நண்பகல் நிலவரப்படி, சிவசேனா கட்சி 63 இடங்களில் முன்னணியில் உள்ளது. இனிவரும் காலங்களில், சிவசேனா கட்சி, பா.ஜ. கட்சிக்கு பெரும் குடைச்சலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.