Advertisment

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாய உத்தரவு; உற்பத்தியாளர்களின் கோரிக்கை என்ன?

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை; காரணம் என்ன? உற்பத்தியாளர்கள் கூறுவது என்ன?

author-image
WebDesk
New Update
கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாய உத்தரவு; உற்பத்தியாளர்களின் கோரிக்கை என்ன?

Anil Sasi 

Advertisment

Explained: The case for six airbags: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனையில் சரிவை எதிர்கொண்டுள்ள பட்ஜெட் விலை கார் பிரிவில் அதன் தாக்கத்தை காரணம் காட்டி, பயணிகள் வாகனங்களில் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் குறிப்பிடத்தக்க சந்தை இருப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார், தனது புதிய சாண்ட்ரோ மாடலின் விற்பனை சரிவு மற்றும் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் இந்த ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அந்த புதிய சான்ட்ரோ மாடலின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு, மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி பார்கவா இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆறு ஏர்பேக்குகளுடன் இந்த சாண்ட்ரோ மாடலை மறுகட்டமைக்க தேவையான மாற்றங்கள் சாத்தியமற்றதாகக் கருதப்பட்டது.

புதிய பாதுகாப்பு விதிமுறைகள் என்ன?

இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்வீட் செய்ததாவது: “8 பேர் வரை பயணிக்கும் மோட்டார் வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்குவதற்கான வரைவு ஜிஎஸ்ஆர் அறிவிப்பிற்கு இப்போது ஒப்புதல் அளித்துள்ளேன். ”

அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு ட்வீட் செய்தபோது காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதின் கட்கரி இந்தியாவில் உள்ள அனைத்து வாகன உற்பத்தியாளர்களையும் அனைத்து மாடல்களின் அனைத்து வகைகளிலும் நிலையான உபகரணங்களாக குறைந்தது ஆறு ஏர்பேக்குகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த ஜனவரியில் அனைத்து வாகனங்களிலும் இரட்டை ஏர்பேக்குகள் (ஓட்டுனர் மற்றும் பயணிகள்) கட்டாயமாக்கப்பட்டது. ஜூலை 1, 2019 முதல் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் ஓட்டுனர் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆறு ஏர்பேக்குகளில் முன்மொழியப்பட்ட ஆணையின் கீழ் எந்த வகையான வாகனங்கள் வருகின்றன?

முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கு "முன் மற்றும் பக்கவாட்டு மோதல்களின்" தாக்கத்தை குறைக்கும் நோக்கத்துடன், 'M1' வகை வாகனங்களில் கூடுதல் காற்றுப்பைகள் (ஏர்பேக்குகள்) இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. முன்மொழிவின்படி, இரண்டு பக்க அல்லது பக்கவாட்டு ஏர்பேக்குகள் மற்றும் அனைத்து பயணிகளையும் உள்ளடக்கிய இரண்டு பக்க திரைச்சீலை அல்லது குழாய் ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

‘எம்1’ வாகனம் என்றால் என்ன?

அரசாங்கத்தின் ஹோமோலோகேஷன் விதிகளின் கீழ், வாகனங்கள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் குறைந்தபட்சம் நான்கு சக்கரங்களைக் கொண்ட மோட்டார் வாகனங்களை ‘வகை எம்’ என குறிப்பிடப்படுகிறது. துணை வகை 'M1' என்பது "ஓட்டுனர் இருக்கை தவிர கூடுதலாக எட்டு இருக்கைகளை உள்ளடக்கிய, பயணிகள் மோட்டார் வாகனம்" என்று வரையறுக்கப்படுகிறது.

இந்த வகையிலான பெரும்பாலான பயணிகள் வாகனங்கள் இந்தியாவின் சாலைகளில் தற்போது இயங்கி வருகின்றன. அவற்றில் சுஸுகி ஆல்டோ அல்லது ஹூண்டாய் சான்ட்ரோ போன்ற நுழைவு-நிலை கார்கள் முதல் டொயோட்டா இன்னோவா அல்லது கியா கார்னிவல் போன்ற பல பயன்பாட்டு வாகனங்கள் வரை உள்ளன. இந்த வாகனங்கள் பெரும்பாலும் தனியார் பயன்பாட்டிற்காகவும், சில வணிக பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஹோமோலோகேஷன் என்றால் என்ன?

ஹோமோலோகேஷன் என்பது ஒரு குறிப்பிட்ட வாகனம் செல்லத் தகுதியானது என்று சான்றளிக்கும் செயல்முறையாகும், இதில் இந்தியாவிற்குள் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவுகோல்கள் பொருந்த வேண்டும். மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி, உமிழ்வுகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் சாலைத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய சந்தையின் தேவைகளுடன் வாகனம் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த சோதனைகள் செய்யப்படுகின்றன.

வாகனங்களுக்கு ஏன் அதிக ஏர்பேக்குகள் தேவை?

ஸ்டீயரிங் வீல், டாஷ்போர்டு, முன் கண்ணாடி மற்றும் ஆட்டோமொபைலின் பிற பகுதிகளுடன் பயணிகளின் மோதலின் தாக்கத்தை ஏர்பேக்குகள் மென்மையாக்குகிறது.

ஏர்பேக்குகள் உண்மையில் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய கேள்வியை உள்ளடக்கியது: அமெரிக்க அரசாங்க நிறுவனமான தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) 1987 முதல் 2017 வரை, அந்த நாட்டில் முன் இருக்கை ஏர்பேக்குகள் மட்டும் 50,457 உயிர்களைக் காப்பாற்றியதாக மதிப்பிட்டுள்ளது.

சாலைப் பாதுகாப்பில் இந்தியாவின் நிலை உலகிலேயே மிகவும் மோசமானதாக உள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதில் இந்திய கார்கள் வெகுவாக பின்தங்கி உள்ளன. இந்தியாவில் இயங்கும் கார் தயாரிப்பாளர்கள் உட்பட, பிற உலகளாவிய சந்தைகளில் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் மாடல்களுடன் ஒப்பிடும்போது இந்த பின் தங்கிய நிலை குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது.

உலகளாவிய சந்தைகளில் அதே கார் மாடலை விற்கும் நிறுவனங்கள், இந்தியாவின் பட்ஜெட் விலை சந்தையில் அறிமுகப்படுத்தும்போது சில முக்கிய பாதுகாப்பு அம்சங்களைக் குறைக்கின்றன.

முன்மொழியப்பட்ட ஆணையை செயல்படுத்துவதில் என்ன சவால்கள் இருக்க முடியும்?

விலை நிர்ணயம் ஒரு முக்கிய சவாலாக இருக்கும்: நிலையான உபகரணங்களாக அதிக காற்றுப்பைகள் பொருத்த வேண்டியதால், சந்தையின் பட்ஜெட் கார்கள் உட்பட வாகனங்களின் விலையை அதிகரிக்கும்.

நுழைவு நிலை காரில் முன்பக்க ஏர்பேக்கின் விலை பொதுவாக ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை இருக்கும், மேலும் பக்கவாட்டு மற்றும் திரைச்சீலை ஏர்பேக்குகளின் விலை இருமடங்கு அதிகமாகும். இந்தியாவில் பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் டாப்-எண்ட் மாடல்களிலும், ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள வகைகளிலும் மட்டுமே ஆறு ஏர்பேக்குகளை வழங்குகிறார்கள்.

பல நுழைவு-நிலை மாடல்கள் இந்தியா போன்ற சந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், கூடுதல் ஏர்பேக்குகளை நிறுவுவது, பாடி ஷெல் மற்றும் உள் பெட்டியில் மாற்றங்களைச் செய்வது உட்பட கணிசமான மறு-பொறியியலை உள்ளடக்கியது என்றும் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது சான்ட்ரோ காரில் ஒரு தடையாக பார்க்கப்படுகிறது.

தற்போது இதற்கு கால அவகாசம் உள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது கடுமையான BS6 உமிழ்வு விதிமுறைகளுக்கு மாறுகிறது, மேலும் புதிய கார்ப்பரேட் சராசரி எரிபொருள் பொருளாதாரம் அல்லது CAFE விதிமுறைகளை செயல்படுத்துகிறது, இவை இரண்டும் செலவு தாக்கங்களைக் கொண்டுள்ளன.

எனவே இங்கு கார் உற்பத்தியாளர்களின் வாதம் என்ன?

நுகர்வோர் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப வசதிகளைப் பெறுகிறார்கள் என்று உற்பத்தியாளர்கள் வாதிடுகின்றனர், மேலும் பட்ஜெட் பிரிவில் வாங்கும் மிகச் சிலரே பாதுகாப்பான காருக்காக அதிகம் செலவிட விரும்புகிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

மாருதி சுஸுகி இந்திய கார் வாங்குபவர்களின் விருப்பங்களை பட்டியலிட்டது. இந்த கருத்துக்கள் விற்பனை செய்யப்பட்டபோது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டவை. அதில், ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம்) மற்றும் ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் எட்டாவது இடத்தைப் பிடித்தன. அதேநேரம் ஏர் கண்டிஷனிங், பவர் ஜன்னல்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் போன்றவை முன்னிலைப் பெற்றன.

வேகன்-ஆர் காரின் டாப் வேரியண்டில் டிரைவர்-சீட் ஏர்பேக்குகள் வழங்கப்பட்டன, ஆனால் நுகர்வோர் மத்தியில் ஆர்வம் இல்லாததால் மாடலை திரும்பப் பெற வேண்டியிருந்தது என்று நிறுவனத்தின் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

எதிர் வாதம் என்ன?

ட்வின் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் பின் துடைப்பான்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் காரின் விலையில் ரூ.25,000 வரை மட்டுமே சேர்க்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், மற்ற அம்சங்களுடன் சேர்த்து, கார்களின் டாப்-எண்ட் வெர்ஷன்களில் மட்டுமே இந்த அம்சங்களை உற்பத்தியாளர்கள் வழங்குகிறார்கள். இதனால் வாகனத்தின் விலை சுமார் ரூ.1.20 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாகிறது.

உண்மையில், இது இந்திய கார் வாங்குபவர்களுக்கு இந்த அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வகைகள் கிடைப்பதை தடுக்கிறது.

உலகில் மற்ற இடங்களில் ஏர்பேக்குகள் பற்றிய விதிகள் என்ன?

யுனைடெட் ஸ்டேட்ஸில், அனைத்து கார்களிலும் சட்டப்படி முன் ஏர்பேக்குகள் தேவை. ஆனால் பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் மாடலைப் பொறுத்து ஆறு முதல் 10 ஏர்பேக்குகளை வழங்குகிறார்கள், ஏனெனில் NHTSA மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான தனியார் இலாப நோக்கற்ற காப்பீட்டு நிறுவனம் (IIHS) போன்ற ஏஜென்சிகளின் விபத்து சோதனை முடிவுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக அதிக ஏர்பேக்குகளை வழங்குகிறார்கள். தலையைப் பாதுகாக்கும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் இல்லாத எந்த வாகனமும் IIHS இன் பக்க விபத்து சோதனையில் சிறந்த மதிப்பீட்டைப் பெற்றதில்லை.

1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட கார்களில், டிரைவருக்கு ஏர்பேக் அல்லது சீட் பெல்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் 1984 ஆம் ஆண்டில் அதன் ஃபெடரல் மோட்டார் வாகன பாதுகாப்பு தரநிலை 208 (FMVSS 208) ஐத் திருத்தியது.

இதையும் படியுங்கள்: அச்சுறுத்தும் குரங்கு அம்மை… இவை தான் முக்கிய அறிகுறிகள்!

ஏர்பேக் அறிமுகம் NHTSA ஆல் வலியுறுத்தப்பட்டது, பின்னர் 1997 இல் பயணிகள் வாகனங்கள் மற்றும் இலகுரக டிரக்குகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டில், எஃப்எம்விஎஸ்எஸ் 208 ஆனது இரட்டை முன் ஏர்பேக்குகள் தேவை என்று திருத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து, இரண்டாம் தலைமுறை ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டன.

வட அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சில நாடுகள் அமெரிக்க தரநிலைகளுக்கு பதிலாக சர்வதேசமயமாக்கப்பட்ட ஐரோப்பிய ECE வாகனம் மற்றும் உபகரண விதிமுறைகளை கடைபிடிக்கின்றன. ECE ஏர்பேக்குகள் பொதுவாக சிறியதாக இருக்கும் மற்றும் அமெரிக்காவில் வழங்கப்படும் ஏர்பேக்குகளை விட குறைவான சக்தியுடன் உயர்த்தப்படுகின்றன, ஏனெனில் ECE விவரக்குறிப்புகள் பெல்ட் கிராஷ் டெஸ்ட் டம்மீஸ் அடிப்படையிலானவை.

ஐரோப்பாவில் விற்கப்படும் ஒவ்வொரு புதிய காரும் முன் மற்றும் பக்க ஏர்பேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனைடெட் கிங்டமில், புதிய கார்கள் ஏர்பேக்குகளைக் கொண்டிருக்க நேரடி சட்டத் தேவை இல்லை. ஆனால் மீண்டும், பெரும்பாலான மாறுபாடுகளில் குறைந்தது 4-6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, இவை முதன்மையாக க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு இணங்கவும், பாதுகாப்பு எண்ணிக்கையில் அதிக மதிப்பெண் பெறவும் செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Car
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment