Advertisment

ஆட்கொல்லிப் புலிகளைப் பிடிக்க உதவும் மூங்கில் குழந்தைகள்!

இந்திய அளவில் சோளிகரே, புலிகள் சரணாலயத்தின் உள்பகுதியில் வாழ்வதற்கான உரிமையையும் வனவுரிமையையும் சட்டரீதியாக முதலில் பெற்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
children of bamboo

children of bamboo

 Arathi Menon

Advertisment

children of bamboo : கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் ஒரு பயங்கரமான புலி கடந்த மாதம் பிடிபட்டது. பிடிபடுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன் அது தன் வழியைத் தவறவிட்டுவிட்டது. நான்கு வயதுள்ள அந்தப் புலி, புலிகள் பந்திப்பூர் சரணாலயப் பகுதியில் இரண்டு மனிதர்களையும் 12 பசுமாடுகளையும் கொன்றுவிட்டது. எனவே, இதைப் பிடிப்பதற்காக கர்நாடக வனத்துறையானது பயிற்சிபெற்ற ஏழு யானைகளையும் 60 வனச்சரகர்களையும் 5 கால்நடைமருத்துவர்களையும் ஈடுபடுத்தியது. வனப்பகுதிக்கான பிரத்யேகமான படப்பதிவுக்கருவிகளையும் பயன்படுத்தியது. மூன்று நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனத் தெரிந்தது. இறுதியாக தங்களின் இரகசிய ஆயுதமாக உள்ள நீலகிரி உயிர்க்கோள சரகத்தின் பழங்குடியினரான சோளிகர்களைக் களத்தில் இறக்கியது. இரண்டே நாள்களுக்குள் சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சோளிகர்களான கலாலகௌடா, கலமலகௌடா, பட்ஜகௌடா, சிவண்ணாகௌடா ஆகியோர் புலியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அதைப் பிடிக்கச்செய்தனர்.

சோளிகர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்படி வனத்துறையினர் கேட்டுக்கொள்வதன்படி புலிகளைப் பிடிப்பதற்கு உதவிசெய்வது ஒன்றும் புதியது அன்று. பெலகாவி மாவட்டத்தின் கானாபூர் வட்டத்தில், 2014-ல் மனித உண்ணியான ஒரு புலியைப் பிடிப்பதற்கான ஒரு நெருக்கடியான நடவடிக்கையின்போது, வனம், விலங்குகளைப் பற்றி குறிப்பாக புலிகளைப் பற்றிய சோளிகரின் அறிவானது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது.

புலிகளின் பாதையை அவற்றின் வாசனை, காலடித்தடம், மரங்களிலுள்ள நகக்கீறல்கள், சிதறல்கள் ஆகியவற்றைக் கொண்டு, சோளிகர்கள் அறிந்துகொள்வார்கள். பறவைகளின் எச்சரிக்கை ஒலிகள், அணிலின் நடத்தையைக் கொண்டே புலிகளை பிடித்துவிடக்கூடிய அளவுக்கு வல்லமை படைத்தவர்கள்” என்கின்றனர், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சிக்கான அசோகா டிரஸ்ட்டின் ஆராய்ச்சியாளரும் ஜில்லா புடகட்டு கிரிஜன அபிவிரித்தி சங்கத்தின் செயலாளருமான மாதேகௌடா.

சோளிகர் அல்லது சோளகர் எனும் இப்பழங்குடியினரின் பூர்வீக காலம் கி.மு. 800-2000 காலத்தவர் எனக் கணக்கிடப்படுகிறது. சோளிகர் என்றால் மூங்கிலின் குழந்தைகள் என்று பொருள். தென்பகுதி மலைப்பகுதியில் புல்வெளிகளால் தனித்துப் பிரிக்கப்பட்டுள்ள வெப்பமண்டல வனக் காடுகளைச் சேர்ந்தவர்கள்,சோளகர்கள் என அழைக்கப்படுகின்றனர். சிவனின் அவதாரமான மாதேசுவரனின் மாணவன் காரய்யாவின் வழித்தோன்றல்களே சோளிகர்கள் என்றும் நம்பப்படுகிறது. காரய்யாவின் பசுமாடு ஒன்று பால் கொடுக்க மறுத்து காட்டுக்குள் ஓடியபோது, அதை அவர் பின் தொடர்ந்துபோனார். அப்போது, அந்த மாடு தன் பால் முழுவதையும் அங்குள்ள ஒரு புற்றுக்கு ஊற்றிக்கொண்டிருப்பதை அவர் பார்த்தாராம்.

அதற்குள் மாதேசுவரன் தியானம்செய்துகொண்டிருப்பதை அறியாமல், காரய்யா அந்தப் புற்றை மரக்கட்டையால் உடைத்து, தன் குருவையே அடிக்கவும்செய்துவிட்டாராம். குற்றவுணர்வால் சஞ்சலமான அவர், காட்டுக்குள் ஓடி, ஒரு மூங்கில் மரத்தின் வேர்களுக்குள் அடைக்கலமானாராம். இப்படித்தான் அவரின் வழித்தோன்றல்களுக்கு மூங்கிலின் குழந்தைகள் என்ற பெயர் வந்துள்ளது. இப்போதும் அதிகமான சோளிகர் குடியிருப்புகள் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், மாதேசுவரன் மலைப்பகுதியில் உள்ள பிரபல மாதேசுவரன் கோயிலுக்கு அருகில்தான் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

மாதேசுவரன் புலி மீது அமர்ந்து சவாரிசெய்வதாக சித்தரிக்கப்படுவதால், புலியும்கூட ஹூலிவீரப்பா(புலி என்றால் கன்னடத்தில் ஹூலி) என வழிபடப்படுகிறது. ” வனத்தைப் பற்றிய அறிவானது தலைமுறை தலைமுறையாகக் கொண்டுசேர்க்கப்படுகிறது” என்கிறார், கர்நாடகத்தின் பிலிகிரிரங்கா மலைப்பகுதியின் சோளிகரான மாதேகௌடா. இவர்கள், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொட்ட மரம், சூரியன், மழை மற்றும் தேவாரு கரடி ஆகியவற்றை வழிபடுகின்றனர்.

இவ்வட்டாரத்தின் பிற பழங்குடியினரைப் போலவே, சோளிகர்களுக்கும் காடு எனும் அச்சை மையமாகக்கொண்டுதான் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது. காடுதான் இவர்களின் முதன்மையான வாழ்வாதாரம் ஆகும். ஒவ்வொரு சோளிகர் குழந்தையும் வனத்தின் ரகசியங்களை அறிந்தபடியே வளர்கிறார்கள். ” எங்கள் குடும்பங்களின் ஒரு குழந்தைகூட குறைந்தது 200 மூலிகைகள், மருந்துத் தாவரங்கள், வேர்களைப் பற்றித் தெரிந்துவைத்திருக்கும்.” என்கிறார், பிலிகிரிரங்கா மலை, முட்டுகுடகாடு கிராமவாசியான கரணகேத்தகௌடா.

இந்தப் பழமையான உறவுதான் சோளிகர்களுக்கு காடு குறித்தும் அதில் வாழும் விலங்குகள் குறித்தும் மதிப்பிடவியலாத அறிவை வழங்கியிருக்கிறது. ” மரங்கொத்திப் பறவை போன்றவை எழுப்பும் குறிப்பிட்ட ஒலிகூட சோளிகருக்கு மழைவருவதைத் தெரியப்படுத்தும் நல்ல அறிகுறியாகும். குருவி பறப்பதில் ஏற்படும் மாற்றங்களை வைத்து மழைப்பொழிவின் அளவை இவர்களால் சொல்லிவிடமுடியும்” எனக் கூறுகிறார், குடகு பகுதியில் உள்ள பொன்னம்பேட்டை, வனவியல் கல்லூரியின் இணைப்பேராசிரியர் ஜாதேகௌடா.

கடந்த மாதம் புலியைப் பிடித்தபோது நடந்த செய்தியாளர் சந்திப்பில், புலியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அதைத் தாக்கிப் பிடிப்பதில் சோளிகர் திறன்வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர் என்று முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய் மோகன் குறிப்பிட்டார். ஆனால், தங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கு அவர்கள் மலைக்குமேல் போராடிவருகிறார்கள். 1974-ல் அதற்கு முந்தைய இரண்டாம் ஆண்டான 72-ல் கொண்டுவரப்பட்ட வனவுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம், கர்நாடக அரசானது பிலிகிரிரங்கா மலையை பிஆர்டி வனவுயிரினப் பாதுகாப்பு சரணாலயமாக அறிவித்தது. சோளிகரின் பயிர்செய்கை மாற்றத்தை அவர்கள் தடைசெய்தனர். அவர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சோளிகர்களின் முதன்மையான வாழ்வாதாரமாக விளங்கிய மரம்தவிர்த்த வனவிளைபொருள்கள் முழுவதும் 2006-ல் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

2008-ல் சாம்ராஜ்நகர் மாவட்ட நீதிமன்றத்தை சோளிகர் தரப்பில் அணுகினர். 2006 வனவுரிமைச் சட்டத்தின்படி தங்களின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என அவர்கள் கோரினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

2011 ஜனவரியில் இந்த சரணாலயப் பகுதியானது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. மரம்தவிர்த்த வனவிளைபொருள்கள் சேகரிப்பதற்கு எதிராக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபரில் அவ்வழக்கைத் தள்ளுபடிசெய்த நீதிமன்றம், நிலத்தின் மீதான சோளிகரின் உரிமைகளை நிலைநிறுத்தியது. இதன் மூலம், இந்திய அளவில் பழங்குடியினரில் சோளிகரே, புலிகள் சரணாலயத்தின் மையமான உள்பகுதியில் வாழ்வதற்கான உரிமையையும் வனவுரிமையையும் சட்டரீதியாக முதலில் பெற்றுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ‘காட்டுக்குள் வீட்டில்’ எனும் தலைப்பில் முன்னர் வெளியானது, இக்கட்டுரை. 

தமிழாக்கம் : இர.இரா.தமிழ்க்கனல்

Mudumalai Tiger Reserve
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment