நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே, நேற்று முன்தினம்(டிசம்பர் 3) அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஆகஸ்ட் 2019இல் நிறைவேறியது. அதனை தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. எதிர்கட்சிகள் இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்களது எதிர்ப்பையும் மீறி அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
அணை பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?
நாடு முழுவதும் உள்ள அணைகளை ஒரே சீராக பாதுகாப்பது பற்றியது அணை பாதுகாப்பு மசோதாவாகும். இந்த மசோதாவில் குறிப்பிட்ட அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு, சோதனை, செயல்முறை,பராமரிப்பு வழங்குதல் மற்றும் அவற்றின் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான நிறுவன திட்டமிடுதலை வழங்குதல் அடங்கும்.
இந்த மசோதாவின்படி, மூன்றாண்டு பதவிக்காலம் கொண்ட அணைப் பாதுகாப்பு தேசியக் குழு அமைக்கப்படும். அந்த குழுவில் மத்திய நீர் ஆணையத்தின் தலைவர்,இணைச் செயலாளர் ரேங்கில் மத்திய அரசில் பணியாற்றும் 10 பிரதிநிதிகள், மாநில அரசின் 7 பிரதிநிதிகள், மூன்று நிபுணர்கள் இடம்பெறுவார்கள்.
அதே சமயம், அணை பாதுகாப்புக்கு பொறுப்பான மாநில அணை பாதுகாப்பு அமைப்பும் உருவாக்கப்படும். அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் துணைக் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பழுதுபார்ப்பு மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை முறையான மதிப்பாய்வு செய்யும் அதிகாரம் இந்த குழுவிற்கு இருக்கும்.
தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம், மாநில அணை பாதுகாப்பு அமைப்பானது, அணை பழுது போன்ற நிகழ்வுகளைப் புகாரளிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு குறிப்பிட்ட அணையின் முக்கிய நிகழ்வுகளின் பதிவுகளை முறையாக பராமரித்து வைக்க வேண்டும்.
தேசிய அணை பாதுகாப்பு ஆணையம், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். அணைப் பொறியியல் மற்றும் அணைப் பாதுகாப்பு மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிக்க மத்திய அரசின் கூடுதல் செயலர் பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியின் தலைமையில் இந்த அமைப்பு செயல்படும்.
மசோதாவில் இடம்பெற்றுள்ள தகவல் என்ன?
இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணைகள் மாநிலங்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன, சில பெரிய அணைகள் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் அல்லது பக்ரா-நாங்கல் திட்டத்தின் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்ற தன்னாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன
இந்தியாவில் 5,200 பெரிய அணைகள் மற்றும் தற்போது 450 அணைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் தான், அணை பாதுகாப்பு மசோதா 2018ஐ மத்திய அரசு தாக்கல் செய்தது.
அப்போது, மசோதா மீதான விவாதத்தில், இந்தியாவில் அணை பாதுகாப்பிற்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பு இல்லாததால், அணை பாதுகாப்பு கவலைக்குரிய பிரச்சினையாக உள்ளது.பாதுகாப்பற்ற அணைகள் பேரழிவை ஏற்படுத்தலாம்.பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டது.
இருப்பினும், 2016 ஆம் ஆண்டில், இந்த மசோதா குறித்து மாநிலங்களிடமிருந்து கருத்துக்களை சேகரிப்பதற்காக மத்திய அரசு நடத்திய விவாதத்தின் போது, அப்போதைய தமிழ்நாடு முன்னாள முதல்வர் ஜெ.ஜெயலலிதா தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் எதிர்ப்பு ஏன்?
அணை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.
அதில், இந்த மசோதா அரசியல் சாசனம் புனிதமாக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இந்த நடவடிக்கை சர்வாதிகாரம் தான் வேறு ஒன்றும் இல்லை. இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மாநில அரசாங்கங்களின் உரிமைகளைப் பறிப்பது ஆகும்.இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும், பெரும்பான்மையை பயன்படுத்தி மாநில நலன்களுக்கு எதிராக சட்டம் இயற்றினாலும் மத்திய அரசு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார்.
இந்த மசோதாவுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டை அதிமுகவும் ஆதரித்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னதாக அணை பாதுகாப்பு மசோதா குறித்து முடிவெடுப்பதற்கு முன் மாநிலங்களுடன் முறையான ஆலோசனை நடத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசியல் கட்சிகளும், மாநில அரசும் பல்வேறு காரணங்களுக்காக மசோதாவை எதிர்க்கின்றன. குறிப்பாக அண்டை மாநிலங்களில் கட்டப்பட்ட அணைகள் தொடர்பான மாநில உரிமைகளை பறிப்பதுஆகும். இது அணையின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும் என குற்றச்சாட்டுகின்றனர்.
அணை, தன்னாட்சி, சொத்துகள் மீதான உரிமை போன்ற விவகாரங்களில் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவது மாநிலங்களுக்கு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான அணைகளை மாநில அரசுகள்தான் கட்டியுள்ளன. அதை இயக்கும், பராமரிக்கும் உரிமையும் மாநில அரசுகளிடம் தான் உள்ளது. தற்போது, நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் தாக்கத்தை, நீண்ட கால சச்சரவு மீண்டும் எழும்போதுதான் பார்க்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.