scorecardresearch

1960-களில் இருந்து பூமியின் மிகக் குறுகிய நாள் பதிவு; பூமி ஏன் வேகமாகச் சுற்றுகிறது? என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஜூன் 29 ஆம் தேதி பூமி தனது வழக்கமான 24 மணிநேரத்தை விட 1.59 மில்லி விநாடிகள் முன்னதாக ஒரு முழு சுழற்சியை முடித்து ஒரு நாளை நிறைவு செய்தது.

Earth shortest day June 29 since 1960, Earth rotation speed, பூமியின் மிகக் குறுகிய நாள்; பூமி ஏன் வேகமாகச் சுற்றுகிறது, என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், Earth movement, NASA, Earth space news, Space news, Earth shortest day, Tamil Indian Express

நேரம் வேகமாக பறக்கிறது என்று சொல்வது உண்டு. சமீபத்திய சான்றுகளில் இது உண்மையாகத் தெரிகிறது – உண்மையில், இப்போதெல்லாம், நாளை என்பது வேகமாக வருகிறது – அது ஒரு நொடி நேரம் முன்னதாக இருந்தாலும் வேகமாகத்தானே வந்துள்ளது. ஜூன் 29 ஆம் தேதி பூமி தனது வழக்கமான 24 மணிநேரத்தைவிட 1.59 மில்லி விநாடிகளில் ஒரு முழு சுழற்சியை முடித்து ஒரு நாளை நிறைவு செய்தது. பூமியின் சுழற்சி வேகத்தை அளவிட விஞ்ஞானிகள் முதன்முதலில் துல்லியமான அணுக் கடிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிய 1960 களில் இருந்து பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாள் இது.

இப்போதெல்லாம் இது மிகவும் அடிக்கடி நிகழ்கிறது – சமீபத்திய ஆண்டுகளில், பூமி எப்போதும் சற்று வேகமாக சுழன்று வருகிறது. ஜூலை 26 ஆம் தேதி அன்று பூமியின் முழு சுழற்சியான ஒரு நாள் 1.50 மில்லி விநாடிகளுக்கு முன்னதாக முடிந்தது. மிகக் குறுகிய நேரம் கொண்ட நாள் என்று பூமி செய்த சாதனையை ஜூன் 29 ஆம் தேதி அதுவே முறியடித்தது.

மேலும், 2020 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, ​​​​பூமி அதன் மிகக் குறுகிய நாளை பதிவு செய்தது என்பது 28 நாட்களைத் தாண்டியது என்று timeanddate.com என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் பதிவான மிகக் குறுகிய நேரம் கொண்ட நாட்களில் ஜூலை 19 ஆம் தேதி மிகக் குறுகிய நாளாக 1.47 மில்லி வினாடிகள் வேகமாக முடிவடைந்து பதிவானது.

ஒரு மில்லி விநாடி என்பது ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு. இந்த கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, ஒருமுறை கண் சிமிட்டுவது ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு, அதாவது 100 மில்லி விநாடிகளுக்கு நீடிக்கும். 1984 லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக்கில் பி.டி. உஷா வெண்கலப் பதக்கத்தை ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு வித்தியாசத்தில் தவறவிட்டார். 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் உஷா 55.42 வினாடிகளில் ஓடினார். வெண்கலப் பதக்கம் வென்ற ருமேனியாவின் கிறிஸ்டியானா கோஜோகாரு 55.41 வினாடிகளில் முடித்தார். 5வது இடத்தில் உள்ள ஸ்வீடனின் ஆன் லூயிஸ் ஸ்கோக்லண்ட் 55.43 வினாடிகளில் ஓடி முடித்தார்.

பூமி வேகமாக இருப்பது புதிய விஷயமா?

உண்மையில் அப்படி இல்லை. சமீப ஆண்டுகளில், பூமி அதன் சுழற்சியை வேகமாக முடித்துக்கொண்டிருக்கும் வேளையில், மிக நீண்ட காலமாக பார்க்கும் போது, ​​நமது கிரகம் உண்மையில் மெதுவாக சுழல்கிறது.

ஒவ்வொரு நூற்றாண்டிலும், பூமி ஒரு சுழற்சியை முடிக்க சில மில்லி விநாடிகள் அதிக நேரம் எடுக்கும் – சராசரியாக, நாட்கள் உண்மையில் நீளமாகி வருகின்றன. எனவே, 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் 19 மணி நேரத்திற்குள் முடிந்திருக்கும் என்று தி கார்டியன் 2018 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் கட்டுரையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. பூமியின் மெதுவான சுழற்சியின் பெரிய போக்கு பெரும்பாலும் சந்திரனின் ஈர்ப்பு விசைக்குக் காரணம், இது அலை உராய்வை ஏற்படுத்துகிறது மற்றும் பூமியின் சுழற்சியைக் குறைக்கிறது.

பிறகு ஏன் இப்போதெல்லாம் நாட்களின் நேரம் குறைகிறது?

விஞ்ஞானிகள் இந்த விஷயத்தில் முற்றிலும் உறுதியாக இல்லை. இது நிச்சயமாக வித்தியாசமானது என்று டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாட் கிங் ஏபிசி நியூஸிடம் கூறினார். “1970களில் துல்லியமான வானொலி வானியல் தொடங்கியதிலிருந்து நாம் பாக்காத வகையில் ஏதோ மாறிவிட்டது” என்று கூறினார்.

காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட மேற்பரப்பு மாறுபாடுகள், பூமி சுழலும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் அனுமானித்தார். இந்த மேற்பரப்பு மாறுபாடுகளில் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் உருகுதல், கடல் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களும் அடங்கும்.

“பூமியின் சுழற்சியின் முடுக்கத்திற்கான காரணம் எங்களுக்குத் தெரியாது. எங்களிடம் கருதுகோள் மட்டுமே உள்ளது…” என்று சர்வதேச வானியல் மையத்தில் உள்ள பாரிஸ் ஆய்வகத்தின் கிறிஸ்டியன் பைஸார்ட் சீன தொலைக்காட்சி CGTN நெட்வொர்க் இடம் கூறினார். “இதற்கான காரணம் பூமியின் உள் மற்றும் பூமியின் மையத்தின் இயக்கத்தில் உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் கூறினார்.

பூமியின் வேகத்தை பாதிக்கும் பல செயல்முறைகளில் கிரகத்தின் உள்ளே மையத்தின் இயக்கங்கள், நில அதிர்வு செயல்பாடு, காற்றின் வேகம் மற்றும் வளிமண்டல வாயுக்களை மாற்றுவது ஆகியவை அடங்கும் என்று தி கார்டியன் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு தனி செய்தியில் தெரிவித்துள்ளது. பூமியின் மையத்தை நோக்கி மாஸ் தள்ளும் செயல்பாடுகள் கிரகத்தின் சுழற்சியை விரைவுபடுத்தும், அதே நேரத்தில் மாஸ் வெளிப்புறமாகத் தள்ளும் எதுவும் சுழற்சியைக் குறைக்கும் என்று அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு நாளின் நீளத்தை சுறுக்குவது, பூமியின் புவியியல் துருவங்களின் இயக்கத்தில் சிறிய விலகலைக் குறிக்கும் ஒரு நிகழ்வான ‘சாண்ட்லர் தள்ளாட்டத்துடன்’ தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். லோமோனோசோவ் மாஸ்கோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஸ்டெர்ன்பெர்க் வானியல் நிறுவனத்தின் டாக்டர் லியோனிட் சோடோவின் கருத்துப்படி, இந்த தள்ளாட்டம் சமீபத்தில் குறைந்துள்ளது. இது குறைவான நேரம் கொண்ட நாட்களுக்கு காரணமாக இருக்கலாம். ‘சாண்ட்லர் தள்ளாட்டத்தின் இயல்பான வீச்சு பூமியின் மேற்பரப்பில் சுமார் மூன்று முதல் நான்கு மீட்டர்கள் ஆகும். ஆனால், 2017 முதல் 2020 வரை அது மறைந்து விட்டது என்று டாக்டர் ஜோடோவ் timeanddate.com இடம் கூறினார்.

நாசாவின் கருத்துப்படி, “சுற்றும் பூமி பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. இதில் காற்று வீசும் விதத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது கடலில் உள்ள நீரோட்டங்கள் உட்பட காரணிகளாக உள்ளன. இந்த காரணிகளில் சில கிரகத்தை வேகப்படுத்த செயல்பட முடியும், மற்றவை உண்மையில் அதன் வேகத்தை குறைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

பூமி தொடர்ந்து வேகமாகச் சுற்றினால் என்ன நடக்கும்?

கடிகார நேரம் பூமியின் சுழற்சியின் வேகத்துடன் பொருந்துகிறது என்பதை உறுதிப்படுத்த, 1970 களில் இருந்து லீப் விநாடிகளின் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள கடிகாரங்களை ஒத்திசைக்கப் பயன்படுத்தப்படும் நேரத் தரமான ஒருங்கிணைந்த யுனிவர்சல் டைமுக்கு (UTC) ஒரு நொடி சரிசெய்தல் இதில் அடங்கும். கிரகத்தின் சுழற்சியில் நீண்ட கால மந்தநிலை காரணமாக, UTC இல் 27 லீப் வினாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பூமி தொடர்ந்து வேகமாகச் சுழன்று, நாட்களின் நேரம் குறைந்தால், விஞ்ஞானிகள் முதன்முதலில் எதிர்மறை லீப் வினாடியை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும், இதில் கடிகாரங்களிலிருந்து ஒரு வினாடி கழிக்கும் நடவடிக்கையும் அடங்கும்.

மெட்டா இன்ஜினியரிங்கில் ஜூலை 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு வலைப்பதிவில், “லீப் வினாடிகள் விஞ்ஞானிகளுக்கும் வானியலாளர்களுக்கும் பயனளிக்கும் அதே வேளையில், வன்பொருள் உள்கட்டமைப்புகளை நிர்வகிப்பவர்களுக்கு இது கடினமானதாக இருக்கும் என்று வாதிட்டது. 2012-இல் ஒரு லீப் செகண்ட் சேர்த்தால், ரெடிட் இணையதளத்தை 30 முதல் 40 நிமிடங்கள் அணுக முடியவில்லை என்றும் எதிர்மறையான லீப் வினாடி பெரிய அளவில் சோதனை செய்யப்படவில்லை என்பதால், இது டைமர்கள் அல்லது திட்டமிடுபவர்களை நம்பியிருக்கும் மென்பொருளில் பேரழிவு விளைவை ஏற்படுத்தக்கூடும்” என்று தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: The earth recorded its shortest day since the 1960s why spinning faster and what impact