கடந்த வாரம், உள் துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தை விட இந்தியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதே நேரத்தில் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இந்தி இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ மொழிக் குழு கூட்டத்தில் பேசிய ஷா , வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்திய மொழியில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இது இந்தி திணிப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், வடகிழக்கில், அசாம் சாகித்ய சபா மற்றும் வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு போன்றவை, அப்பகுதியின் மாநில பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்கும் ஷாவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தியாவில் இந்தி எவ்வளவு பரவலாக பேசப்படுகிறது?
2011 மொழிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகள் உட்பட 121 தாய்மொழிகள் உள்ளன. 52.8 கோடி தனிநபர்கள் அல்லது 43.6% மக்கள் இந்தி மொழியைத் தங்கள் தாய் மொழியாக கூறுகிறார்கள். அடுத்த அதிகபட்சம் பெங்காலி மொழியை தாய்மொழியாக 97 லட்சம் பேர் அதாவது 8 சதவீத மக்கள் கூறுகிறார்கள். இது, இந்தி மொழி எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகும்.
இந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அதன் எண்ணிக்கை நாட்டின் பாதிக்கும் மேலாக உள்ளது. ஏறக்குறைய 13.9 கோடி (11% க்கும் அதிகமானோர்) இந்தியை இரண்டாவது மொழியாக கருதுகின்றனர். அதனால், கிட்டத்தட்ட 55% மக்கள்தொகையில் தாய்மொழி அல்லது இரண்டாவது மொழியாக இந்தி உள்ளது.
எந்தளவு பரவலாக இருக்கிறது?
இந்தி பல தசாப்தங்களாக இந்தியாவின் முக்கிய தாய்மொழியாக திகழ்கிறது. அடுத்தடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் அதன் பங்கு அதிகரித்து வருகிறது. 1971 இல், 37% இந்தியர்கள் இந்தி மொழியைத் தங்கள் தாய் மொழியாக அறிவித்தனர். பின்னர், அடுத்து எடுக்கப்பட்ட நான்கு மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் இந்தியை தாய்மொழியாக சொல்பவர்கள் எண்ணிக்கை முறையே 38.7%, 39.2%, 41% and 43.6% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியின் பங்கு உயர்ந்துள்ளதால், மற்ற தாய்மொழிகளின் பங்கு குறைந்துவிட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. ஹிந்தியைத் தவிர பல தாய்மொழிகள் பங்கு அடிப்படையில் சரிவைச் சந்தித்துள்ளன.
எடுத்துக்காட்டாக, மக்கள்தொகையில் பெங்காலி தாய்மொழியாக கொண்டவர்களின் பங்கு 1971 இல் 8.17% ஆக இருந்த நிலையில், 2011 கணக்கெடுப்பில் 8.03% ஆக மாறியுள்ளது. மொத்தம் 0.14 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில், மலையாளம் 1.12% சதவீத புள்ளிகள், உருது 1.03% புள்ளிகள் என 2011 இல் குறைந்தபட்சம் 1 கோடி பேரின் தாய்மொழிகள் சரிவைக் சந்தித்துள்ளன. அதே சமயம், பஞ்சாபியின் தாய்மொழி எண்ணிக்கை நேர்மாறாக 2.57% லிருந்து 2.74% ஆக உயர்ந்துள்ளது.
1971 மற்றும் 2011 க்கு இடையில், தங்கள் தாய்மொழியை இந்தி என்று அறிவித்த தனிநபர்களின் எண்ணிக்கை 2.6 மடங்கு அதிகரித்து 20.2 கோடியில் இருந்து 52.8 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை பஞ்சாபி, மைதிலி, பெங்காலி, குஜராத்தி மற்றும் கன்னடம் ஆகியவற்றுக்கு இருமடங்கிற்கு அதிகமாகவும், மராத்தியில் கிட்டத்தட்ட இருமடங்காகவும் அதிகரித்துள்ளது.
மலையாளம் பொறுத்தவரை நான்கு தசாப்தங்களில் அவற்றின் எண்ணிக்கை 59%க்கும் மட்டுமே அதிகரித்தது. 22 மொழிகள் பட்டியலில், கடைசி இடத்தில் உள்ளது. அதேபோல், அசாம் மொழிகள் 71%க்கு மேல் உயர்ந்துள்ளன.
ஹிந்தியின் அதிக எண்ணிக்கை சொல்வது என்ன?
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட சில மாநிலங்களில், இந்தி முதன்மையான மொழியாக இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களால் ஹிந்தியின் கீழ் பல மொழிகள் அடைப்புக்குறிக்குள் வைக்கப்பட்டுள்ளன என்று இந்திய மக்கள் மொழியியல் ஆய்வின் தலைவர் டாக்டர் கணேஷ் தேவி கூறுகிறார், இது நாட்டின் மொழிகளை வரைபடமாக்குவதற்கான தற்போதைய திட்டமாகும்.
அவர் கூறியதாவது, 2011 ஆம் ஆண்டில், 1,383 தாய்மொழிகள் மக்களால் அறிவிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மொழிகள் நீக்கப்பட்டன. இந்த தாய்மொழிகள் பின்னர் மொழிகளாக தொகுக்கப்பட்டன. ஹிந்தியின் கீழ், அவர்கள் கிட்டத்தட்ட 65 தாய்மொழிகளைப் பட்டியலிட்டிருப்பதை காண முடியும். அதில், போஜ்புரியும் உள்ளது. 5 கோடி மக்கள் போஜ்புரியை தாய் மொழியாக அறிவித்துள்ளனர், ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் போஜ்புரி இந்தி என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியுடன் இணைந்த மற்ற மொழிகளை ஒருவர் வெளியேற்றினால், மொத்த எண்ணிக்கை 38 கோடியாகக் குறையும் என தெரிவித்தார்.
ஆங்கிலம் எவ்வளவு பரவலாக பேசப்படுகிறது?
ஆங்கிலம், ஹிந்தியுடன் சேர்த்து மத்திய அரசின் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இருந்தாலும், 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் அது இடம்பெறவில்லை. இது 99 திட்டமிடப்படாத மொழிகளில் ஒன்றாகும். தாய்மொழியைப் பொறுத்தவரை, 2011 இல் இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள்வெறும் 2.6 லட்சம் மட்டுமே இருந்தனர். இது, மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்பட்ட 121 கோடி மக்களில் ஒரு சிறிய பகுதியே ஆகும்.ஆங்கிலம் எந்த அளவிற்கு பேசப்படுகிறது என்பதை அது பிரதிபலிக்கவில்லை.
2011 ஆம் ஆண்டில் 8.3 கோடி பேரின் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருந்தது. இது இந்திக்கு அடுத்தப்படி தான். ஏனென்றால், சுமார் 13.9 பேர் மக்கள் இந்தியை தேர்ந்தெடுத்திருந்தனர்.
Dr Devy கூறுகையில், எண்ணிக்கை நிச்சயம் அதிகமாக இருக்க வேண்டும். இந்தியாவில் 2.6 லட்சம் பேர் மட்டுமே ஆங்கிலத்தை முதன்மை மொழியாக பேசுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? டெல்லி, கொல்கத்தா, சென்னையில் வெள்ளைக் காலர் வேலைக்காக இடம் பெயர்ந்த குடும்பங்களுக்காக மிக விரைவான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நீங்கள் எடுக்கிறீர்கள்.அன்றாட விவகாரங்களுக்கு ஆங்கிலம் அவர்களின் மொழி என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். ஆனாலும் அரசாங்கத்தின் பார்வையில் அது அந்நிய மொழியாகவே காணப்படுகின்றது. இந்தியாவில் அது இன்னும் திட்டமிடப்பட்ட மொழியாக இல்லை, அது எப்போது இருக்கும் என கேள்வி எழுப்பினார்.
ஆங்கிலம் எங்கு அதிகமாக பேசப்படுகிறது?
தாய் மொழியாக, 2.6 லட்சம் ஆங்கிலம் பேசுபவர்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் மகாராஷ்டிராவில் உள்ளனர். இரண்டாவது மொழியாக, வடகிழக்கு பகுதிகளில் ஹிந்தியை விட ஆங்கிலம் விரும்பப்படுகிறது. 2011 இல் மணிப்பூரியை தாய் மொழியாகக் கொண்ட 17.6 லட்சம் பேரில், 4.8 லட்சம் பேர் தங்கள் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை அறிவித்தனர். அங்கு, இந்தியை 2ஆவது மொழியாக அறிவித்தவர்களின் எண்ணிக்கை1.8 லட்சமாகவே இருந்தது.
வடகிழக்கில் பேசப்படும் திட்டமிடப்படாத மொழிகளில், மேகாலயாவில் முதன்மையான மொழியாக காசி உள்ளது. அது, 14.3 லட்சம் பேரின் தாய் மொழியாகும். அவர்களில் 2.4 லட்சம் பேர் தங்கள் இரண்டாவது மொழி ஆங்கிலம் என்றும், 54,000 பேர் இந்தி என்றும் அறிவித்தனர். இதே போக்குதான், மிசோ, நாகாலாந்தில் பேசப்படும் ஆவோ, அங்கமி மற்றும் ரெங்மா உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கும் இருந்தது.
வடகிழக்கு மொழிகளைத் தாண்டி, காஷ்மீரியைத் தாய் மொழியாகக் கொண்ட 68 லட்சம் பேரில், 2.2 லட்சம் பேர் ஹிந்தியை 2 ஆவது மொழியாக அறிவித்ததோடு ஒப்பிடும்போது, 2.8 லட்சம் பேர் 2வது மொழியாக ஆங்கிலத்தை அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.