கோட்லா மைதானத்தை எழுப்பிய மன்னர் ஃபிரோஸ் ஷாவின் மகத்துவம்

The legacy of Firoz Shah: கடந்த மாதம் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானதையடுத்து, டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா விளையாட்டு அரங்கத்துக்கு அருண் ஜேட்லி ஸ்டேடியம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த கோட்டையைக் கட்டிய ஃபிரோஸ் ஷாவின் மகத்துவம் என்ன?

By: September 2, 2019, 2:58:44 PM

சோம்யா லக்கானி, கட்டுரையாளர்
The legacy of King Firoz Shah: கடந்த மாதம் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானதையடுத்து, டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா விளையாட்டு அரங்கத்துக்கு அருண் ஜேட்லி ஸ்டேடியம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த அரங்கம் 14 ஆம் நூற்றாண்டின் கோட்டையிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. இந்த கோட்டையை கட்டிய ஃபிரோஸ் ஷாவின் மகத்துவம் என்ன?

தனது சுயசரிதையான ஃபுதுஹத்-இ-ஃபிரோஸ்ஷாஹியில், ஃபிரோஸ் ஷா துக்ளக் தன்னைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார் “கடவுள் எனக்கு அளித்த பல பரிசுகளில், அவருடைய தாழ்மையான வேலைக்காரனாக பொதுக் கட்டடங்களை எழுப்புவதற்கான விருப்பம்தான். எனவே, நான் பல மசூதிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் மடங்களை கட்டினேன்… காலப்போக்கில் சிதைந்துபோன முன்னாள் மன்னர்கள் மற்றும் பண்டைய பிரபுக்களின் மாளிகைகள் மற்றும் கட்டமைப்புகளை சரிசெய்யவும் புனரமைக்கவும் நான் வழிநடத்தப்பட்டேன். ” என்று குறிபிடுகிறார்.

எனவே, அவர் ஃபெரோஸ் ஷா கோட்லாவை (கோட்லா என்றால் கோட்டை) கட்டினார். டெல்லி முழுவதும் தோட்டங்களை உருவாக்கினார். கால்வாய்களை கட்டினார். வேட்டை தங்கும் விடுதிகளைக் கட்டினார். குதுப்மினாரைப் புதுப்பித்தார். ஹவ்ஸ் காஸ் (அரசு குளம்) மற்றும் சூரஜ்குந்த் (சூரியனின் ஏரி) ஆகியவற்றை தூர்வாரி புதுப்பித்தார். இருப்பினும், இந்த 21 ஆம் நூற்றாண்டில், சூரஜ்குந்த் பெரும்பாலும் அதன் வருடாந்திர கைவினைப்பொருட்களுக்காகவும் ஹவ்ஸ் காஸ் அதன் பார்கள் மற்றும் உணவகங்களுக்காகவும் அறியப்படுகிறது. பகதூர் ஷா ஜாபர் மார்க் சாலையில் ஃபெரோஸ் ஷா கோட்லாவுக்கு செல்லும் ஒரு ஆட்டோ சவாரி வழக்கமாக அதற்கு அடுத்த மைதானத்தில் முடிவடைகிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியின் இணை பேராசிரியர் ஷாமா மித்ரா செனாய் கூறுகையில், “யமுனா நதிக்கு அருகில் ஒரு கோட்டையை கட்டிய முதல் ஆட்சியாளர் ஃபிரோஸ் ஷா ஆவார். அது ஒரு நகரமாக பரவலாக்கப்பட்டது.
பெர்சிவல் ஸ்பியரின் 1943 ஆம் ஆண்டு புத்தகம், டெல்லி: அதன் நினைவுச் சின்னங்கள் மற்றும் வரலாறு, வரலாற்றாசிரியர் நாராயணி குப்தா மற்றும் எழுத்தாளர் லாரா சைக்ஸ் ஆகியோரால் புதுப்பிக்கப்பட்டு சிறுகுறிப்பும் எழுதப்பட்டுள்ளது. அதில் லாரா சைக்ஸ் ஃபிரோஸ் ஷாவை “இடைக்காலத்தின் ஒரு மேலாண்மை குரு ” என்று அழைக்கிறார்.

ஒரு இந்து இளவரசிக்கு பிறந்த ஃபிரோஸ் ஷா 1351-இல் ஆட்சிக்கு வந்து 1388-இல் இறந்தார். அவர் யமுனா நதிக்கரையில் ஃபெரோஸ் ஷா கோட்லா என்ற கோட்டையை கட்டி அதை ஃபிரோசாபாத் என்று அழைத்தார். அவரைப் பற்றி லாரா சைக்ஸ் எழுதுகிறார் “சைக்ஸ் எழுதுகிறார், “ஒரு பழைய பழமொழியின் படி, மூன்று விஷயங்கள் அவசியமானவை: தரியா, பாதல், பட்ஷா (ஆறு, மழைமேகங்கள் மற்றும் ஆட்சியாளர்). ஆட்சியாளர் தயாராக நின்றார். மழைமேகங்களை நம்பலாம். நிச்சயமாக நதி யமுனாவின் வடிவத்தில் காத்திருந்தது: அவர் நதியை அடிப்படையாகக் கொண்ட டெல்லியை முதலில் கட்டினார் ” என்று குறிப்பிடுகிறார்.

உண்மையில், கிமு 250 இல் அம்பாலா அருகே அமைக்கப்பட்ட பேரரசர் அசோகாவின் தூண் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு ஃபிரோசாபாத்தில் வைக்கப்பட்டது. ஸ்பியர் எழுதுகையில், “வேட்டையாடும்போது அவர் அதைக் கண்டுபிடித்தார், பழைய நினைவுச்சின்னங்களை விரும்பியதால், 42 சக்கரங்களுடன் ஒரு பெரிய வண்டியில் டெல்லிக்கு கொண்டு சென்றார்.”என்று எழுதியுள்ளார்.

வடக்கு டெல்லியில் உள்ள ரிட்ஜில் இந்து ராவ் மருத்துவமனைக்கு அருகில் மற்றொரு அசோகன் தூண் உள்ளது. அது அளவில் சிறியது. அதை மீரட்டில் இருந்து டெல்லிக்கு ஃபிரோஸ் ஷா மாற்றினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபர்ஹத் ஹசன் கூறுகையில், தனது ஆட்சிக் காலத்தில், ஃபிரோஸ் ஷா பொது கட்டுமான நடவடிக்கைகளை பெரிய அளவில் செய்தார் என்று கூறினார். “நலத்திட்டங்கள் – தோட்டங்கள், செராய் (சத்திரம்), நீர் வழங்கல் – அவருடைய முன்னுரிமையாக இருந்தது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், உணவு தானியங்களின் விலையையும் குறைக்க அவர் உதவினார். ஹரியானாவின் நீர்ப்பாசன அமைப்புகள் அவரது காலத்தைச் சேர்ந்தது என்பது தெரிந்த உண்மை”என்று ஹசன் கூறினார்.

டெல்லியின் சதர் பஜாரில் அமைந்துள்ள தர்கா கதம் ஷெரீப்பையும் ஃபிரோஸ் ஷா கட்டினார் என்று பேராசிரியர் செனாய் கூறினார். மேலும், அவர் கூறுகையில், “அந்த கதை என்னவென்றால், அவருடைய ஆட்சிக் காலத்தில் மதீனாவுக்குச் சென்ற ஒரு துறவி இருந்தார். அங்குள்ள மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள். அவர்கள் அவருக்கு நபி கால்தடத்துடன் ஒரு கல்லைக் கொடுத்தார்கள். அந்த கல் ஆட்சியாளரின் பேரனின் கல்லறையில் உள்ளது. அவரது மற்றொரு பெரிய பங்களிப்பு பல அழகான ஷிகர்கா (வேட்டை தங்கும் விடுதிகள்) மற்றும் ஹைட்ராலிக் கட்டமைப்புகள் ஆகும். ” என்று கூறினார்.

ஸ்பியரின் புத்தகத்தில் லாரா சைக்ஸ் எழுதுகிறார், “ஃபிரோஸ் ஷா டெல்லி பழமைவாத சமூகத்தின் கௌரவ நிறுவனத் தலைவராகக் கருதப்படுகிறார். அவர் கட்டிய பல தோட்டங்கள் மற்றும் கால்வாய்கள் காரணமாக ஆங்கிலேயர்கள் அவரை ‘நீர்ப்பாசனத் துறையின் தந்தை’ என்று அழைத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் குப்தா குறிப்பிடுகையில் “ஃபிரோஸ் ஷாவின் ஆட்சிக் காலத்தில் மெஹ்ராலி மற்றும் ஃபிரோசாபாத் இடையே குறைந்தது 1,200 தோட்டங்கள் இருந்தன.” என்று கூறியுள்ளார். அவர் வடக்கு டெல்லியின் ரிட்ஜ் பகுதியில் வேட்டை தங்கும் விடுதிகளைக் கட்டினார், ஒன்று பாலம் பகுதியிலும் மற்ற மூன்றும் தீன் மூர்த்தி வளாகத்திற்குள் அமைந்துள்ள குஷாக் மஹால் என்று அழைக்கப்பட்டது.

தனது சொந்த கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபடுவதைத் தவிர, பழுதுபார்ப்பு தேவைப்படும் பழைய கட்டமைப்புகள் குறித்து ஃபிரோஸ் ஷா தனது பொறுப்புணர்வை உணர்ந்தார். அவற்றில் குதுப் மினார், ஹுவாஸ் காஸ் மற்றும் சூரஜ்குந்த் ஆகியவை தனித்து நின்றன. ஸ்பியர் எழுதுகிறார், “அவரது ஆட்சியில், ஒரு பூகம்பம் குதுப் மினாரின் இரண்டு மேல் மாடிகளை சேதப்படுத்தியது. அவர் மினாரை பழுதுபார்த்து, மேலே ஒரு சிறிய பெவிலியனைச் சேர்த்தார். இருப்பினும், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மற்றொரு சுற்று பழுதுபார்ப்பின் போது, மேஜர் ஸ்மித் என்ற பொறியியலாளர் அதை தனது சொந்த பெவிலியனாக மாற்றினார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்பியர் எழுதுகிறார், “(ஃபிரோஸ் ஷா) துக்ளக் கட்டிய இரண்டு மாடிகளை நீங்கள் காணலாம், ஏனெனில் அவை வெள்ளை பளிங்குகளால் கட்டப்பட்டவை மற்றும் மிகவும் மென்மையானவை. கீழ் உள்ள மூன்று மாடிகள் குத்புதீன் மற்றும் இல்டுட்மிஷ் கட்டியவை. சிவப்பு மணற்கல்.” என்று குறிப்பிடுகிறார்.

13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அலாவுதீன் கல்ஜி ஆட்சியில் கட்டப்பட்ட அரசு குளமான ஹவ்ஸ் காஸையும் ஃபிரோஸ் ஷா சரிசெய்தார். ஃபிரோஸ் ஷா அதன் கரையில் ஒரு மதரஸாவைக் கட்டியதாக ஸ்பியர் குறிப்பிடுகிறார். அங்கே கல்லூரி இருந்த இடத்தின் மூலையில் அவருடைய கல்லறை அமைந்துள்ளது. “தைமூரின் படையெடுப்பால் கல்லூரி பாழடைந்தது” என்று ஸ்பியர் எழுதுகிறார். இதேபோன்ற பழுதுபார்க்கும் பணிகள் சூரஜ்குந்த்திலும் செய்யப்பட்டன.

பேராசிரியர் ஹசன் கூறுகையில், “புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதையும் பழையவற்றை மீட்டெடுப்பதையும் தவிர, கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பல்வேறு மொழியியல் சமூகங்களுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் ஃபிரோஸ் ஷா ஒரு பல மொழி, பல கலாச்சார வெளியை உருவாக்க முடிந்தது” என்று தெரிவித்தார். மேலும், “அவரது ஆதரவின் கீழ், அவதி மொழியில் எழுதப்பட்ட சூஃபி கவிதைகளான பிரேமாக்யன் வளர்ந்தது. இது ஒரு புதிய வகை இலக்கியமாகும். அவர் இசைக்கலைஞர்கள் மற்றும் கவிஞர்களுக்காகவும் பல நிறுவனங்களை கட்டினார். ” என்று ஹசன் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:The legacy of firoz shahruler who built kotla in delhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X