The tussle for the Christian vote in Kerala : தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் மத்திய கேரளாவில் வசிக்கும் கிறித்துவர்களின் வாக்குகள் தற்போது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கேரளத்தின் மக்கள் தொகையில் 18.38% பேர் கிறித்துவர்கள். எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், மற்றும் பத்தினம்திட்டா பகுதிகளில் இருக்கும் 33 தொகுதிகளில் இவர்கள் அதிகமாக உள்ளனர். ஆரம்ப காலத்தில் அவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களாக கருதப்பட்ட போதும் தற்போது இடதுசாரி மற்றும் பாஜகவினருக்கும் ஆதரவாக இருக்கின்றனர்.
இடதுசாரிகளின் முயற்சி
கேரளத்தின் மிகப்பெரிய கிறித்துவ கட்சியான கேரள காங்கிரஸ் (எம்) அதிகாரப்பூர்வமாக பிரிந்த நிலையில் நடைபெறும் தேர்தல் இது. கேரள காங்கிரஸ் (எம்) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் 40 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. தற்போது இக்கட்சியை கே.எம். மணியின் மகன் ஜோஷ் கே மணி நடத்தி வருகிறார். இக்கட்சி தற்போது சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி முன்னணியில் இணைந்துள்ளது. கிறித்துவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் 13 இடங்களில் போட்டியிட இக்கட்சிக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது கே.சி.(எம்). கட்சி தொண்டர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் சி.பி.எம். கட்சி ரன்னி மற்றும் பத்தினம்திட்டா போன்ற ஆதரவு அதிகம் இருக்கும் தொகுதிகளை கே.சி.எம்.ற்கு கொடுத்துள்ளது.
கே.சி.எம். கட்சிக்கு எதிராக, பிரிந்த பி.ஜே. ஜோசப் தலைமையிலான அணி ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா போன்ற மாவட்டங்களில் இருந்து 9 முதல் 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பினை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவாலய பிரச்சனை
ஜாக்கோபைட் தேவாலயங்கள் பலவற்றின் கட்டுப்பாட்டை நேரடியாக ஆர்த்தோடக்ஸ் கீழே கொண்டு வர 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு நடத்தப்படும் முதல் தேர்தல் இதுவாகும். தங்களின் தேவாலயங்களை இழந்த ஜாக்கோபைட்கள் 8 முதல் 10 தொகுதி வரையிலான முடிவுகளில் பெரும் தாக்கத்தை உருவாக்கலாம்.
சமீபத்திய உள்ளாட்சி தேர்தலில், மாநில அரசு இரண்டு பிரிவினரும் ஒரே மயானத்தை பயன்படுத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஜாக்கோபைட்டுகள் இடதுசாரி முன்னணியினருக்கு வாக்களித்தனர். ஆனால் அவர்களின் நலன்களை காக்க அரசு தவறிவிட்டது என்று எண்ணி அவர்கள் சி.பி.எம். அரசிடம் இருந்து விலகியுள்ளனர்.
நீண்டகாலமாக நிலவி வரும் சர்ச்சைக்கு தீர்வு காண, பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஆர்.எஸ்.எஸ்-பாஜக தலைவர்களுடன் ஜாக்கோபைட் பிரிவு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. திருச்சபையின் ஆயர், பாஜகவுக்கு தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தால், எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். புதன்கிழமை கட்சியில் இருந்து விலகிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிசி சாக்கோ, இதே பிரிவைச் சேர்ந்தவர்.
மறுபுறம், ஆர்த்தடாக்ஸ் பிரிவு, சர்ச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கான எந்தவொரு புதிய சட்டத்தையும் கடுமையாக எதிர்த்தது. தவிர, ஆர்த்தடாக்ஸ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகரான காங்கிரசின் உம்மன் சாண்டிக்கு கேரள தேர்தல்களின் பொறுப்பு வழங்கப்பட்டதிலிருந்து, சர்ச் தலைமை கோபம் அடைந்துள்ளது.
சுவாரஸ்யமாக, தற்போது சிபிஎம் வசம் உள்ள செங்கனூர் தொகுதியில் பாஜகவுக்கு ஆதரவாக ஆர்த்தடாக்ஸ் சமூகத்தினர் முன்வந்துள்ளனர், பாஜக-ஆர்எஸ்எஸ் தலையீட்டினால் 1,000 ஆண்டுகள் பழமையான ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் இடிப்பதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் செங்கனூரில் பாஜக 16% வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்து மற்றும் கிறித்துவர்களின் வாக்குகள் இலக்கு
கிறித்துவ வாக்களர்களை கவருவதற்காக சி.பி.எம். மற்றும் பாஜக கட்சியினர் ஐக்கிய ஜனநாயக முன்னணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் யு.டி.எஃப்-ஐ வலதுசாரி அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பை இனைக்கும் பாலமாக ஐ.யு.எம்.எல். இருக்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளது. பாஜக, இஸ்லாமிய பயங்கரவாதத்தை சுட்டிக்காட்டின் கிறித்துவர்கள் மற்றும் உயர்சாதி இந்துக்களின் வாக்குகளை பெற முயற்சித்து வருகிறது.
பாஜக மேலும், லவ் ஜிகாத் பிரச்சனையும் முன்வைக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கேரள உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு கிறித்துவர்களின் ஆதரவு தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”