The UAEs decision to stop censoring films : டிசம்பர் 19ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் திரையரங்குகளில் வெளியிடப்படும் படங்களுக்கு தணிக்கை செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த பிராந்தியத்தில் போட்டியான துறையாக சினிமாவை மாற்றுவதற்கும் குறிப்பாக பரந்த மனப்பான்மையுடன் செயல்படும் தோற்றத்தை வெளிநாட்டினருக்கு ஏற்படுத்துவதற்கும் இந்த அறிவிப்பை வளைகுடா நாடு வெளியிட்டுள்ளது.
ஐ.ஜி.என். மிடில் ஈஸ்ட்டின் தரவுகள் படி, சமீபத்தில் ஆடம் ட்ரைவர் மற்றும் லேடி காகா நடிப்பில் உருவான ஹவுஸ் ஆஃப் குஸ்ஸி படத்தில் இடம் பெற்றுள்ள நெருக்கமான காட்சிகள் காரணமாக பல்வேறு இடங்களில் படம் வெட்டப்பட்டது. அதே போன்று மார்வல் ஸ்டுடியோவின் எட்டெர்னல்ஸ் திரைப்படத்தின் திரையிடலும் இதே காரணங்களுக்காக தாமதமானது. ஆனால் இது போன்ற படங்கள் புதிய மதிப்பீடு முறையின் கீழ் மீண்டும் வெளியிடப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எண்ணெய் மீது சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதன் மூலமும் அமீரகத்தின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்த முயற்சிப்பதால் இந்த தணிக்கை தொடர்பான அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
சமீபத்தில் அமீரகம் சில சமூக அல்லது மதசார்பற்ற சார்பு நிலை கொண்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டது. மது அருந்துதல் மற்றும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது போன்றவை குற்றமில்லை என்று அறிவித்திருந்தது.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நான்கரை நாட்கள் வேலை செய்யும் முறை கொண்டு வரப்படும் என்றும், 2022ம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு வார இறுதியாக கருதப்படும் என்றும் மேற்கத்திய விடுமுறை நாட்களுக்கு ஏற்றவகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
அமீரகத்தில் சினிமா ரசிகர்களுக்கு இது எத்தகைய மாற்றத்தை வழங்கும்?
கலாச்சாரம் மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் கீழ் வரும் நாட்டின் மீடியா ரெகுலேட்டர் அலுவலகம், அதன் மோஷன் பிக்சர் உள்ளடக்க மதிப்பீட்டு முறைக்குள் 21+ வயது பிரிவை அறிமுகப்படுத்துவதாக ட்விட்டரில் அறிவித்தது.
இந்த வகைப்பாட்டின் படி, திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்கள் சர்வதேச பதிப்புகளாக இருக்கும், அதாவது முந்தைய அமைப்பின் கீழ் ஆட்சேபனையாக கருதப்படும் காட்சிகள் நீக்கப்படாது என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கல்லூரி மாணவர் ஊடகங்களுக்கான மிகப்பெரிய தேசிய உறுப்பினர் அமைப்பான அசோசியேட்டட் காலேஜியேட் பிரஸ்ஸின் ஒரு பகுதியான தி டெக்சாஸ் ஓரேட்டரில் ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீட்டில், . ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தணிக்கையை அதன் ஆளும் உயரடுக்கின் பழமைவாத மதிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்துவதை பற்றி எழுதப்பட்ட ஷேக்ஸ்பியர் ஆன் த்ஹி அரேபியன் பெனின்சுலா என்ற புத்தகத்தை குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பு நாட்டின் தணிக்கை சட்டம், இணையங்களை மூடுதல், முத்தம் மற்றும் பாலுறவு காட்சிகளை திரைப்படங்கள், டிவி சேனல்கள் நிகழ்வுகளில் வெட்டுதல் மற்றும் , மேலும் மாஸ்டர்செஃப் எபிசோட்களில் பன்றி இறைச்சி போன்ற ஹலால் அல்லாத இறைச்சிகளில் செய்யப்படும் உணவு பெயர்களை மறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது என்று ஓரேட்டரின் செய்தி குறிப்பிட்டுள்ளது. புதிய ஒழுங்குமுறையில் இது மாற வாய்ப்புள்ளது.
உலக நாடுகளுடன் அமீரகத்தின் உறவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?
ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்பான, UAE சமீபத்தில் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை டிசம்பர் 2 அன்று கொண்டாடியது. மத்திய கிழக்கு நிறுவனம் (MEI) நடத்திய பகுப்பாய்வு, UAE வெவ்வேறு அடையாளங்களின் அமைதியான சகவாழ்விற்கான முன்மாதிரியாக உள்ளது என்று குறிப்பிடுகிறது. அந்த நாட்டில் உள்ள 80% -க்கும் அதிகமான மக்கள் தொகை வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளை கொண்டுள்ள தனிநபர்களின் கூட்டாக செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி இதனை குறிப்பிட்டுள்ளது.
அதிக அளவில் இந்தியர்கள் அங்கே வேலை பார்த்து வருகின்றனர். அரசாங்கம் மற்றும் வர்த்தகம் தொடர்பான வலுவான உறவை இவ்விரு நாடுகளும் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கிய மூன்றாவது அரபு நாடாக அமீரகம் மாறியது.
2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளிநாட்டினரை ஈர்ப்பதற்காக “கோல்டன் விசா” எனப்படும் நீண்ட கால குடியிருப்பு விசாக்களுக்கான முறையை செயல்படுத்தியது. தங்க விசா வைத்திருப்பவர்கள் ஸ்பான்சர் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் படித்து, வேலை செய்து வாழலாம். அவர்களின் வணிகத்தின் 100 சதவீத உரிமையையும் அவர்களால் பெற முடியும் என்பது போன்ற பல அறிவிப்புகளை அறிவித்துள்ளது அமீரகம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil