scorecardresearch

நீதித் துறை சீர்திருத்தங்களை எதிர்த்து இஸ்ரேலில் போராட்டம்: அரசாங்கம் எதை மாற்ற விரும்புகிறது, ஏன்?

இஸ்ரேல் நாட்டில் நீதித்துறையில் சில மாற்றங்கள் கொண்டுவரும் வகையில் அந்நாட்டு அரசாகத்தால் சீர்திருத்த மசோதாக்கள் முன்மொழியப்பட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீதித் துறை சீர்திருத்தங்களை எதிர்த்து இஸ்ரேலில் போராட்டம்: அரசாங்கம் எதை மாற்ற விரும்புகிறது, ஏன்?

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நீதித்துறை சட்ட சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 13) நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் இஸ்ரேலியர்கள் ஒன்று திரண்டு ஜெருசலேமில் உள்ள நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை குறைக்கும், ஊழலை ஊக்குவிக்கும் மற்றும் இஸ்ரேலில் சிவில் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளை ஆபத்தில் ஆழ்த்தும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தேசியக் கொடி, மெகாஃபோன்கள் மற்றும் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகம், சுதந்திரம், நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்
அரசியலமைப்பு, சமூக ஒழுக்கம் விளிம்பில் உள்ளது என்று கூறி எச்சரித்த மறுநாள் போராட்டம் வெடித்தது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு வலியுறுத்தினார்.

இஸ்ரேலில் போராட்டங்களை தூண்டியது எது?

தி கார்டியன் கூற்றுப்படி, 2022 டிசம்பரில் நெதன்யாகுவும் அவரது கூட்டணி கட்சிகளும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேலில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும், இந்த சீர்திருத்த மசோதாவால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நெதன்யாகுவின் நம்பிக்கையாளரான சட்டத் துறை அமைச்சர் யாரிவ் லெவின் ஜனவரி முதல் வாரத்தில் சீர்திருத்தம் குறித்து அறிவித்தார். நாட்டின் சட்ட அமைப்பை மாற்றியமைக்கும் மசோதாவை முன்மொழிந்தப்பின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

4 முக்கிய மாற்றங்கள்

இந்த திட்டத்தில் நான்கு முக்கிய மாற்றங்கள் உள்ளன. முதலாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாற்றியமைக்கும் அதிகாரம். அதாவது 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் அல்லது நெசெட், எந்தவொரு உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் 61 வாக்குகள் என்ற எளிய பெரும்பான்மை கொண்டு மாற்றியமைக்கும் அதிகாரத்தைப் பெறுவது ஆகும்.

இரண்டாவதாக, நிர்வாக நடைமுறைகளை கேள்வி எழுப்ப உச்ச நீதிமன்றம் முன்பு பயன்படுத்திய “reasonability” சோதனையை ரத்து செய்ய முயற்சிக்கிறது.

இது தவிர, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தையும் அமைச்சர் லெவின் முன்மொழிந்தார். இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்திற்கு கொலிஜியம் இருப்பது போல் இஸ்ரேலில் வல்லுநர்கள், நீதிபதிகள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் அடங்கிய குழு நீதிபதிகளை தேர்வு செய்து வருகிறது. இந்தநிலையில் தற்போதைய மசோதாவில், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொண்டாதாக மாற்றப்படுகிறது. அதுவும் வலதுசாரி மற்றும் மதரீதியிலான பழமைவாத ஆளும் கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திரமாக நிபுணர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அமைச்சர்கள் தங்கள் சொந்த சட்ட ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் வகையிலும் சீர்திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதையடுத்து திங்களன்று நாடாளுமன்றம் முன் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சித் தலைவர்களும் மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், எதிர்க்கட்சியினர் மேசை மீது ஏறி சபாநாயகர் சிம்சா ரோத்மேனுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிராக கடுமையான விவாதங்கள் நடைபெற்றது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் அரசு இதை சட்டமாக்குவதற்கான முயற்சிகளை எடுக்கும் என்று கூறினர்.

நெதன்யாகு அரசு ஏன் நீதித்துறையின் செயல்பாட்டை மாற்ற விரும்புகிறார்கள்?

இஸ்ரேலில் உள்ள பழமைவாதிகள் மற்றும் வலதுசாரிகள் நீண்ட காலமாக நீதித்துறை இடதுசாரி சார்பாக உள்ளது என கூறி வருகின்றனர். இதை ஒரு தடையாகவே அவர்கள் பார்க்கின்றனர். மேலும், நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கம் இஸ்ரேலியர்கள் சட்ட அமைப்பில் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அதன் சீர்திருத்தத் திட்டங்கள் நீதிபதிகள் தேர்ந்தெடுப்பதில் தலையிட்டு பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை கொடுக்கும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், பாலஸ்தீனிய நிலம், LGBTQ சமூகத்தை பாதிக்கும் சமூக சீர்திருத்தங்களை குறைக்கவும் அரசாங்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தங்கள் அதிகாரத்திற்கு உட்படுத்துவதாக கூறியுள்ளது.

ஏன் பல தலைவர்கள் வன்முறை பற்றி எச்சரிக்கிறார்கள்?

எதிர்க்கட்சித் தலைவர் லேபிட் (Lapid) கூறுகையில், இந்த சீர்திருத்தம் நாட்டை அழிக்க அச்சுறுத்துகிறது என்று எச்சரித்தார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், மாநிலத்தின் ஜனநாயக அத்தியாயம் முடிவுக்கு வரும் என்று கூறினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸும் இது உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், நெதன்யாகு தனது விமர்சகர்கள் “நாட்டை அராஜகத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக” குற்றம் சாட்டினார். மேலும் அவர், இஸ்ரேலின் பெரும்பாலான குடிமக்கள் அராஜகத்தை விரும்பவில்லை. அவர்கள் கவனம் செலுத்தும் சொற்பொழிவை விரும்புகிறார்கள், இறுதியில் அவர்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Thousands of israelis protest proposed judicial reforms what does the govt want to change and why

Best of Express