நவம்பரின் பிற்பகுதியில், சிரியாவின் வளர்ச்சிகள் எச்சரிக்கையை ஏற்படுத்தியது. பெரும்பாலும் செயலற்று இருந்த உள்நாட்டுப் போர் ஒரு குறுகிய காலத்தில் வியத்தகு இயக்கத்தைக் கண்டது. சிரிய எதிர்ப்பை உள்ளடக்கிய ஆயுதமேந்திய படைகள் அடுத்த சில நாட்களில் முக்கிய நகரங்களில் ஒவ்வொன்றாக கைப்பற்றினர். டிசம்பர் 8-ஆம் தேதி, அதிபர் பஷர் அல்-ஆஸாத்தின் அரசு வீழ்ந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 14 days that changed Syria: A timeline of how Assad’s government fell
ஏறத்தாழ 14 ஆண்டுகள் சிரிய உள்நாட்டுப் போருக்குப் பிறகு, கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்ற 14 நாட்களுக்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டனர்.
நவம்பர் 27: ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் வடமேற்கு சிரியாவில் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தின. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இது அல்-கொய்தாவின் கிளைக் குழுவாக செயல்பட்டு, பின்னர் அதில் இருந்து விலகியது. அலெப்போ உள்ளிட்ட நகரங்களை இக்குழுவினர் கைப்பற்றினர்.
நவம்பர் 29: சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போவிற்குள், கிளர்ச்சியாளர்கள் 2016 இல் உள்நாட்டுப் போரின் போது வெளியேற்றப்பட்ட பின்னர், முதல் முறையாக நுழைந்தனர். அந்த நேரத்தில், சிரிய அரசு படைகளுக்கு ரஷ்யா மற்றும் ஈரானின் ஆதரவு இருந்தது. தற்போது நிலைமை வேறாக அமைந்தது.
நவம்பர் 30: கிளர்ச்சியாளர்கள் அலெப்போவைக் கைப்பற்றியதாகக் கூறி, நகரின் கோட்டையின் மீது கொடியை ஏற்றி, சர்வதேச விமான நிலையத்தை ஆக்கிரமித்ததாக கூறினர். அதே நேரத்தில் சிரிய ஆயுதப்படைகள் தரப்பில் இருந்து, துருப்புக்களை மீண்டும் நிலை நிறுத்தியதாகக் கூறப்பட்டது.
டிசம்பர் 1: சிரிய இராணுவம், இட்லிப் மற்றும் அலெப்போ மீது வான்வழித் தாக்குதல்களுடன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது. ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி தலைநகர் டமாஸ்கஸுக்குச் சென்று ஆதரவு கோரினார். சிரியாவிற்கு வெளியே இருந்து சிறிய அளவிலான உதவியே கிடைத்தது. குறிப்பாக, சிரியாவிற்கு ஆதரவாக இருந்த லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவும் சமீபத்திய மாதங்களில் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது.
டிசம்பர் 2 முதல் 4 வரை: கிளர்ச்சியாளர்கள் தெற்கு பகுதி நோக்கி முன்னேற்றம் அடைந்தனர். ஹமா நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர்களுக்குள் அவர்கள் சென்றடைந்தனர். ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் அரசிற்கு சில பகுதிகளை மீட்டெடுக்க உதவியது.
டிசம்பர் 5: கிளர்ச்சியாளர்கள் ஹமா நகருக்குள் முழுவதுமாக நுழைந்து கைப்பற்றினர். இதே பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டின் போது அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.
டிசம்பர் 6: மேலும் முன்னேறிய கிளர்ச்சியாளர்கள் படை ஹமா நகரின் புறநகர் பகுதிகள் மற்றும் டமாஸ்கஸின் நுழைவாயிலையும் கைப்பற்றினர். இதன் மூலம் பெருவாரியான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் படையினர் தங்கள் வசப்படுத்தினர்.
டிசம்பர் 7: அதிபர் ஆஸாத் தப்பிச் சென்றதாகவும், போர் இறுதிக் கட்டத்தை எட்டியதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
டிசம்பர் 8: ஆஸாத்தின் அரசு தூக்கியேறிப்பட்டதாகவும், சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். மேலும், கிளர்ச்சியாளர்கள் படை தலைவர் அபு கோலானி, உமையாத் மசூதிக்குச் சென்று ஆஸாத்தின் வீழ்ச்சி இஸ்லாமிய அரசின் வெற்றி என உரையாற்றினார். தப்பிச் சென்ற ஆஸாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோவில் உள்ளதாகவும் அவர்களுக்கு ரஷ்யா அடைக்கலம் அளித்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.