கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் க்வெக் யூ ஸுவான் என்ற குழந்தை சுமார் 212 கிராம் எடையுடன் பிறந்தது. இது உலகிலேயே மிகவும் சின்னஞ்சிறிய குழந்தையாக அறியப்படுகிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் சராசரி எடை 3.5கிலோ இருக்க வேண்டும்.
ஆனால் பிறக்கும்போது 24 செ.மீ நீளமும் 212 கிராம் எடையும் கொண்ட இந்த பிஞ்சுக்குழந்தை ஸுவான் சராசரியாக 40 வாரங்கள் கருவில் வளர்ந்திருக்க வேண்டிய நிலையில், 25 வாரங்களிலேயே பிறந்திருந்தாள். தற்போது 13 மாத கிசிச்சைக்கு பிறகு குழந்தையின் எடை தேறி 6.3 கிலோ ஆகியிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள ஷார்ப் மேரி பிர்ச் மருத்துவமனையில் பிறந்த சாய்பி என்ற குழந்தைதான் உலகின் மிகச்சிறிய குழந்தையாக இருந்தது. சாய்பி பிறக்கும்போது 245 கிராம் மட்டுமே எடையுடன் இருந்தாள். கிட்டத்தட்ட ஒரு பெரிய ஆப்பிள் பழத்தின் எடையை போன்றது.
அதற்கு முன் 2015 இல் ஜெர்மனியில் பிறந்த குழந்தைதான் குறைவான எடை கொண்ட குழந்தையாக இருந்தது. ஆனால் சாய்பியின் எடை அதைவிட குறைவாக இருந்ததது.
பிறக்கும்போது சாய்பியின் நீளம் வெறும் 9 அங்குலம்தான். இருப்பினும் சிசிக்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவளது எடை 2.54 கிலோ மற்றும் 16 அங்குல நீளம் இருந்தது.
அயோவா பல்கலைக்கழகம் 'தி டைனியஸ்ட் பேபிஸ்' என்ற பதிவேட்டைப் பராமரிக்கிறது, இது உலகின் மிகச்சிறிய குழந்தைகளின் பட்டியலாகும். 400 கிராமுக்கு குறைவான எடையுள்ள குழந்தைகள் உயிர் வாழ்வது சாதாரண விஷயமல்ல. பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள், வளர்ச்சி, மற்றும் நீண்டகால ஆரோக்கியம் குறித்த தரவுகளை சேகரிப்பதே இந்த பதிவகத்தின் நோக்கமாகும்.
தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் எடை கடைசி மூன்று மாத கர்ப்பகாலத்திலே போதிய எடை வளர்ச்சியை அடையும். ஆனால் கர்ப்ப காலம் முழுமை அடையாமல் பிறக்கும் குழந்தை குறைவான எடையுடன் பிறக்கிறது.
உலகில் மிகச் சிறியதாகவும் குறைவான எடை கொண்டதாகவும் பிறந்து 10 குழந்தைகள் உயிர் வாழ்ந்து வருகிறது. இவர்கள் அனைவரும் சராசரி கர்ப்ப காலத்திற்கு 40 வாரங்களுக்கு முன்பு பிறந்தவர்கள்.
குழந்தைகள் எடை குறைவாகப் பிறந்தால் என்ன ஆபத்து?
1995 ஆம் ஆண்டு 'தி ஃப்யூச்சர் ஆஃப் சில்ட்ரன்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு செய்திகுறிப்பில், மருத்துவ தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றும் வாய்ப்புகளை அதிகரித்திருந்தாலும் இந்தக் குழந்தைகள் எப்படி வளரும் மற்றும் சாதாரண வாழ்க்கையை வாழுமா என்பது பற்றி பல கேள்விகள் உள்ளன என கூறியுள்ளது.
கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறைமாத குழந்தைகளாக அறியப்படுகின்றன. சராசரியாக 40 வார கர்ப்ப காலத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் இறப்பு அல்லது கடுமையான இயலாமை ஏற்படும் அபாயங்கள் அதிகம் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) கூறுகிறது.
உதாரணமாக, 2018 இல், குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் பிறந்து இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 17 சதவிகிதம் ஆகும். உயிர் பிழைக்கும் குழந்தைகள் கூட சுவாச பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். CDC படி, தாமதமான வளர்ச்சி மற்றும் பள்ளியில் குறைந்த செயல்திறன் உள்ளிட்ட சில நீண்டகால பிரச்சனைகளும் அவர்களுக்கு ஏற்படலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil