லோக்சபா தேர்தல் மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, நாடு முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் (MCC) அமலில் உள்ளன. வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த பயன்படுத்தக்கூடிய பணம், மதுபானம், நகைகள் மற்றும் பிற இலவசப் பொருட்களைக் கொண்டு செல்வது குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.
இந்த வார தொடக்கத்தில், சில சுற்றுலா பயணிகளிடம் இருந்து ரூ.69,400-ஐ தமிழக போலீசார் கைப்பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் பணம் தம்பதியினருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தேர்தல் நேரத்தில் பணம் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தேர்தல் ஆணையத்தின் (EC) கடுமையான விதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பண பலத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்தில் விநியோகிக்கப்படும் பணம், மதுபானம், நகைகள், போதைப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றின் நடமாட்டத்தை கடுமையாக கண்காணிக்க காவல்துறை, ரயில்வே, விமான நிலையங்கள், வருமான வரித்துறை மற்றும் பிற அமலாக்க அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையம் விரிவான வழிமுறைகளை வழங்குகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும், நிலையான கண்காணிப்பு குழுக்கள் (SST) மற்றும் பறக்கும் படைகளுடன் செலவின பார்வையாளர்களையும் இது நியமிக்கிறது. பறக்கும் படையில் தலைவராக ஒரு மூத்த நிர்வாக மாஜிஸ்திரேட், ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, ஒரு வீடியோகிராபர் மற்றும் மூன்று அல்லது நான்கு ஆயுதம் ஏந்திய போலீசார் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, குழுக்களுக்கு பிரத்யேக வாகனம், மொபைல் போன், வீடியோ கேமரா மற்றும் பணம் அல்லது பொருட்களை பறிமுதல் செய்வதற்கு தேவையான ஆவணங்கள் வழங்கப்படும்.
கண்காணிப்பு குழுக்கள் சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, முழு சோதனை செயல்முறையையும் வீடியோ பதிவு செய்கின்றனர். அவற்றின் இருப்பிடம் அடிக்கடி மாற்றப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்றாலும், வாக்குப்பதிவுக்கு முந்தைய இறுதி 72 மணிநேரத்தில் அமலாக்கம் அதிகரிக்கப்படும்.
பணம் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்வதற்கான விதிகள் என்ன?
தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள், வேட்பாளர்களின் பிரச்சாரச் செலவுகளைக் கண்காணிக்கும் வகையில் உள்ளது. இது பெரிய மாநிலங்களில் ஒரு தொகுதிக்கு ரூ.95 லட்சமாகவும், சிறிய மாநிலங்களில் ஒரு தொகுதிக்கு ரூ.75 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குடிமக்களையும் மோசமாக பாதிக்கிறது.
உதாரணமாக, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, விமான நிலையங்களில் உள்ள CISF அல்லது போலீஸ் அதிகாரிகள், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக அல்லது 1 கிலோவுக்கும் அதிகமான தங்கம் எடுத்துச் சென்றால், “உடனடியாக வருமான வரித் துறையிடம் புகார் அளிக்க வேண்டும்”.
வருமான வரித் துறையானது, "வருமான வரிச் சட்டங்களின்படி தேவையான சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் மற்றும் திருப்திகரமான விளக்கம் எதுவும் வழங்கப்படாவிட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது, எந்த அரசியல் கட்சி அல்லது வேட்பாளருடன் தொடர்புடையது அல்ல என்பதை உறுதிப்படுத்த, சரிபார்ப்பு முடியும் வரை, பணம் அல்லது பொன் பறிமுதல் செய்யப்படலாம்.
கண்காணிப்புக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் சோதனைச் சாவடிகளில், ஒரு வாகனத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் கிடைத்தால், எந்தவொரு வேட்பாளர், முகவர் அல்லது கட்சி செயல்பாட்டாளருடனும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் இல்லை என்றால், கண்காணிப்பு குழு பணத்தை பறிமுதல் செய்யாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்துகிறது, மேலும் மற்றும் வருமான வரிச் சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கைக்காக, வருமான வரி அதிகாரிக்கு தகவலை அனுப்ப வேண்டும்.
இருப்பினும், வேட்பாளரை அல்லது அவரது முகவர் அல்லது கட்சித் தொண்டர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் ரூ.50,000க்கு மேல் ரொக்கம் அல்லது போதைப்பொருள், மதுபானம், ஆயுதங்கள் அல்லது ரூ.10,000க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அந்தப் பணம் அல்லது பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
சோதனையின் போது, ஏதேனும் சந்தேகம் இருந்தால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) கீழ் பறிமுதல் செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்யப்படும்.
மாநில எல்லைகளுக்குள் மதுபானம் கொண்டு செல்லும்போது, அந்தந்த மாநிலத்தின் கலால் சட்டங்கள் பொருந்தும்.
பறிமுதலுக்கு பிறகு என்ன நடக்கும்?
ஏதேனும் பணம் அல்லது பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டால், அவை எந்தவொரு வேட்பாளருக்கும் அல்லது குற்றத்திற்கும் தொடர்பில்லாதிருந்தால், அதிகாரிகள் அவற்றைத் திருப்பித் தர வேண்டும்.
கைப்பற்றப்பட்ட பிறகு, கைப்பற்றப்பட்ட தொகை நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்ட விதத்தில் டெபாசிட் செய்யப்படும் மற்றும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் நகல், வருமான வரி அதிகாரிக்கு அனுப்பப்படும், என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
பொதுமக்கள் மற்றும் உண்மையான நபர்களுக்கு அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்காக, மாவட்ட அளவிலான குழு குறைகளை ஆராயும்.
மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் செலவின கண்காணிப்புக்கான நோடல் அதிகாரி மற்றும் மாவட்ட கருவூல அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு, எஃப்.ஐ.ஆர்/புகார் பதிவு செய்யப்படாத, அல்லது எந்தவொரு வேட்பாளர், அரசியல் கட்சி அல்லது தேர்தல் பிரச்சாரத்துடன் தொடர்பு இல்லாத பறிமுதல் வழக்குகளை தானாக முன்வந்து ஆய்வு செய்யும்.
மேலும், தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல் படி, கைப்பற்றப்பட்ட எந்தவொரு பணத்தையும் திரும்ப வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Read in English: Travelling with cash during polls? Here are the Election Commission rules to keep in mind
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.