/indian-express-tamil/media/media_files/2025/01/21/CulQ8EZlHh5RxZw2oS36.jpg)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் நாளிலேயே நிர்வாக உத்தரவுகளின் பட்டியலில் கையெழுத்திட்டார். இதில் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு தாக்கம் ஏற்படும் வகையில் சில உத்தரவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது திரும்பப் பெறப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Trump signs executive order to end US birthright citizenship. Can he do it?
இந்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட சில மணிநேரங்களில், அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் உட்பட புலம்பெயர்ந்தோர் மற்றும் சிவில் உரிமைகள் வழக்கறிஞர்களால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை என்றால் என்ன?
பிறப்புரிமை குடியுரிமை என்பது ஒரு சட்டக் கோட்பாடாகும். இதன் கீழ், பிறந்தவுடன் தனிநபர்களுக்கு குடியுரிமை தனிச்சையாக வழங்கப்படும் தற்போது, உலகம் முழுவதும் பிறப்புரிமைக் குடியுரிமையின் இரண்டு வடிவங்கள் உள்ளன; வம்சாவளி அடிப்படையிலான குடியுரிமை மற்றும் பிறந்த இடம் சார்ந்த குடியுரிமை ஆகும். இதனை லத்தீன் மொழியில் ஜுஸ் சோலி எனக் கூறுவார்கள். அதாவது பிறந்த இடம் அடிப்படையிலான குடியுரிமை
அமெரிக்கா, இதுவரை பிறக்கும்போதே இரண்டு வகையான குடியுரிமையை அங்கீகரித்துள்ளது: தடையற்ற ஜூஸ் சோலி; இரண்டாவது நிபந்தனைகளுக்குட்பட்ட வம்சாவளி அடிப்படையிலான குடியுரிமை. இது, ஜூஸ் சாங்குனிஸ் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்க அரசியலமைப்பு கூறுவது என்ன?
அமெரிக்க அரசியலமைப்பின் பதினான்காவது திருத்தம் பிறப்புரிமைக் குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 1868 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போருக்குப் பிறகு 14 வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது முக்கியமாக அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதை உறுதி செய்வதாகும்.
இந்நிலையில், டிரம்பின் நிர்வாக உத்தரவின்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தனிச்சையாக கிடைக்கும் பிறப்புரிமை குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது.
யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?
பியூ ஆராய்ச்சி மையத்தின் 2024 தரவுகளின்படி, "அமெரிக்காவின் வெளிநாட்டில் பிறந்த மக்கள் தொகை 2023 இல் 47.8 மில்லியனை எட்டியது, இது முந்தைய ஆண்டை விட 1.6 மில்லியன் அதிகரித்துள்ளது. 2000-க்குப் பிறகு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவே மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பாகும்.
டிரம்ப் அதை செய்ய முடியுமா?
இந்த உத்தரவு அமெரிக்க கூட்டாட்சி நிறுவனங்களை மிகவும் கடுமையான மற்றும் குறுகிய வரையறையைப் பயன்படுத்தி குடியுரிமையை விளக்குவதற்குத் தூண்டும். அதே வேளையில், சட்டரீதியான தடைகளை எதிர்கொள்ளும்.
இரண்டாவதாக, பிறப்புரிமை குடியுரிமையை நீக்குவதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படும். பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் மற்றும் முக்கால்வாசி அமெரிக்க மாநிலங்களின் ஒப்புதல் இதற்கு தேவை. டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டிலும் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.
பழைய வாக்குறுதி
குடியேற்றம் தொடர்பான டிரம்பின் நிலைப்பாடு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் டிரம்ப், வெளிநாட்டு பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்தவர்களின் குடியுரிமையை அகற்ற தான் விரும்புவதாக தெரிவித்திருந்தார். 2021 இல் அவரது பதவிக்காலம் முடியும் வரை, டிரம்ப்பால் அத்தகைய நிர்வாக உத்தரவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
2024 இல் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த பிரச்சினை மீண்டும் பேசப்பட்டது. இதற்கான வாக்குறுதியையும் அவர் எடுத்துரைத்தார். மேலும், அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது, அங்கீகரிக்கப்படாமல் அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், அவர்களது பெற்றோருடன் நாடு கடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
- நேஹா பன்கா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.