அமெரிக்காவின் ஹெச்1 பி விசா குறித்த நடைமுறையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்கு, அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெச்1 பி விசா நடைமுறையில் கடந்த ஜூலை மாதத்தில் பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதன்படி, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருகுறிப்பிட்ட ஹெச் 1 பி விசா விண்ணப்பங்கள் மட்டுமே வழங்கப்படும். விசா நடைமுறைக்காலம் வெகுவாக குறைவதால், இந்தியா, சீனா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் மிகுந்த பயன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய விசா கொள்கைக்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து ஜூடிசியல் கமிட்டியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த புதிய விசா கொள்கையால், தங்கள் கல்வி நிறுவனங்களில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதால், இந்த கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யேல், ஸ்டான்போர்டு, கொலம்பியா , டியூக் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி பிசினஸ் ஸ்கூல்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அதிபர் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளன.
இதுதொடர்பான செய்தி, வால் ஸ்டிரீட் ஜெர்னல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அதிபர் டிரம்பின் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருகுறிப்பிட்ட ஹெச் 1 பி விசா விண்ணப்பங்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற புதிய கொள்கையால், தங்கள் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிவடையும். இதன்காரணமாக, நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
அமெரிக்க மாணவர்கள் அனைவரும் திறமையில் சிறந்தவர்களாக உள்ளனர். அதேபோல், வெளிநாட்டு மாணவர்களும் திறமை உடையவர்களாக மாற்றும் நடவடிக்கைகளில் எங்களைப்போன்ற கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. டிரம்பின் இந்த புதிய விசா கொள்கைகளால், வெளிநாட்டு மாணவர்கள் படிக்க அமெரிக்க கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு தடங்கல்கள் ஏற்படும். இது பிற்காலத்தில், அமெரிக்க கல்விக்கொள்கைகளில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஹெச்1பி விசா கொள்கையில் மாற்றம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.