தென்-மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளில் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவும் மீட்புக் குழு, மருத்துவ குழுவினரை அங்கு அனுப்பியுள்ளது.
இது மிகவும் மோசமான நிலநடுக்கம் என பல்வேறு நாடுகள் தெரிவித்து வருகிறது. 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காசியான்டெப்பில் இருந்து 33 கிமீ தொலைவில் 18 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலையில், அதன் தாக்கம் மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் லெபனான், சைப்ரஸ், கிரீஸ், இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. துருக்கிக்கு இதுவரை இந்தியா உள்பட 45 நாடுகள் உதவி வழங்கி உள்ளது. இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் நிவாரணப் படையின் (NDRF) தேடல் மற்றும் மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழுக்கள் நிவாரணப் பொருட்களுடன் மேற்கு ஆசிய நாட்டிற்கு அனுப்பபட்டுள்ளது.
நிலநடுக்கம் என்றால் என்ன?
நிலநடுக்கம் என்பது பூமிக்கு அடியில் உள்ள பகுதி அசைவதால் நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வு ஆகும். யு.எஸ்.ஜி.எஸ் கூற்றுப்படி, பூமியின் இரண்டு தொகுதிகள் திடீரென ஒன்றையொன்று கடந்து செல்லும் போது இது நிகழ்கிறது. இது செஸ்மிக் அலைகள் வடிவில் சேமிக்கப்பட்ட ‘எலாஸ்டிக் ஸ்ட்ரெய்ன்’ ஆற்றலை வெளியிடுகிறது. இது பூமியில் பரவுகிறது மற்றும் நிலத்தை அதிர வைக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்ன?
நமக்குத் தெரியும், பூமியின் வெளிப்பரப்பு, மேலோடு டெக்டோனிக் தட்டுகளாக உள்ளது. தட்டுகளின் விளிம்புகள் தட்டு எல்லைகள் என்று அழைக்கப்படுகின்றன. டெக்டோனிக் தகடுகள் எப்போதும் மெதுவான வேகத்தில் நகர்கின்றன. தட்டுகள் ஒன்றையொன்று மோதிச் செல்கின்றன. தட்டுகளின் விளிம்புகள் மிகவும் கடுமையாக இருப்பதால், மற்ற தட்டு நகரும் போது
அவை ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொள்கின்றன. தட்டு வேகமாக நகர்ந்து செல்லும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர் கூறகின்றனர்.
யு.எஸ்.ஜி.எஸ் கூறுகிறது, “பூகம்பம் தொடங்கும் பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள இடம் ஹைப்போசென்டர் என்றும், பூமியின் மேற்பரப்பில் அதற்கு நேர் மேலே உள்ள இடம் எபிசென்டர் என்றும் அழைக்கப்படுகிறது.”
நிலநடுக்கத்தை கணிக்க முடியுமா?
இல்லை. நிலநடுக்கம் பற்றிய துல்லியமான கணிப்புக்கு, பூமிக்குள் இருந்து ஒரு பெரிய நிலநடுக்கம் வரப்போகிறது என்பதைக் குறிக்கும் ஒருவித முன்னறிவிப்பு சிக்னல் தேவைப்படுகிறது. மேலும், இது பெரிய அளவிலான நிலநடுக்கத்திற்கு மட்டும் சிக்னல் கொடுக்கும். சிறிய அசைவுகளுக்கு கொடுக்காது என்று கூறப்படுகிறது. தற்போது அத்தகைய சிக்னல் கண்டுபிடிக்கும் கருவி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/