What is the Montreux Convention and can Turkey use it to block Russian warships?: துருக்கி தனது இரண்டு முக்கிய நீர்சந்திகள் வழியாக கடற்படைப் பாதையில் சர்வதேச ஒப்பந்தத்தை செயல்படுத்த உள்ளது, இந்த ஒப்பந்தம் மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடல் இடையே ரஷ்ய போர்க்கப்பல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கும்.
துருக்கியின் வெளியுறவு அமைச்சர் Mevlut Cavusoglu ஞாயிற்றுக்கிழமை, உக்ரைனில் நிலைமை ஒரு போராக மாறிவிட்டது. இது மாண்ட்ரீக்ஸ் மாநாட்டு ஒப்பந்தத்தை செயல்படுத்த அங்காராவை அங்கீகரிக்கிறது மற்றும் ரஷ்ய போர்க் கப்பல்கள் போஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லெஸ் நீர்சந்திகள் வழியாக கருங்கடலில் நுழைவதைத் தடை செய்கிறது என்று கூறினார்.
“ஆரம்பத்தில், இது ஒரு ரஷ்ய தாக்குதல்,” ”இப்போது அது ஒரு போராக மாறிவிட்டது”, என்று CNN துருக்கிய செய்தி நிறுவனத்திற்கான பேட்டியில் Cavusoglu கூறினார்.
மேலும், “துருக்கி மாண்ட்ரீக்ஸ் ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் வெளிப்படையான முறையில் செயல்படுத்தும்,” என்றும் Cavusoglu கூறினார்.
ரஷ்ய கப்பல்களுக்கு போஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லஸ் நீர்சந்திகளை மூடுமாறு உக்ரைன் அங்காராவிடம் கேட்டுக் கொண்ட மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது.
ஆனால் மாண்ட்ரீக்ஸ் ஒப்பந்தம் எதை உள்ளடக்கியது மற்றும் அதை செயல்படுத்துவது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை எவ்வாறு பாதிக்கும்?
கருங்கடலுக்கான ஒரே பாதை
துருக்கிய நீர்சந்தி அல்லது கருங்கடல் நீர்சந்தி என்று அழைக்கப்படும் பாஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லஸ் நீர்சந்தி, மர்மரா கடல் வழியாக ஏஜியன் கடல் மற்றும் கருங்கடலை இணைக்கிறது. கருங்கடல் துறைமுகங்கள் மத்திய தரைக்கடல் மற்றும் அதற்கு அப்பால் உள்ள துறைமுகங்களை அணுகக்கூடிய ஒரே பாதை இதுவாகும்.
மூன்று மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய், ஒவ்வொரு நாளும் இந்த நீர்வழி வழியாக செல்கிறது. இது தினசரி உலகளாவிய விநியோகத்தில் சுமார் மூன்று சதவீதமாகும். இவை பெரும்பாலும் ரஷ்யா, அஜர்பைஜான் மற்றும் கஜகஸ்தானில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், இந்த பாதை கருங்கடல் கடற்கரையிலிருந்து ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு அதிக அளவு இரும்பு, எஃகு மற்றும் விவசாய பொருட்களை அனுப்புகிறது.
1936 மாண்ட்ரீக்ஸ் ஒப்பந்தம் நீர்சந்தியின் கட்டுப்பாட்டைப் (ஆட்சியைப்) பற்றியது, இது பெரும்பாலும் மாண்ட்ரீக்ஸ் ஒப்பந்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி போஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ஆகிய இரண்டு நீர்சந்திகளின் கட்டுப்பாடும் துருக்கி வசம் உள்ளது.
ஒரு போர் ஏற்பட்டால், இந்த ஒப்பந்தம் அங்காராவுக்கு கடற்படை போர்க்கப்பல்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்குச் சொந்தமான போர்க்கப்பல்களுக்கு நீர்சந்தி வழியான போக்குவரத்தைத் தடுப்பதற்கும் உரிமை அளிக்கிறது.
ரஷ்ய போர்க்கப்பல்களை துருக்கி தடுக்க முடியுமா?
கருங்கடலில் ரஷ்யாவின் இருப்பிடம் நிலைமையை சிக்கலாக்குகிறது.
உடன்படிக்கையின் 19 வது பிரிவு கருங்கடலில் உள்ள நாடுகளுக்கு விதிவிலக்கைக் கொண்டுள்ளது. இது ரஷ்ய போர்க்கப்பல்கள் கருங்கடலில் நுழைவதை அல்லது வெளியேறுவதைத் தடுப்பதில் துருக்கியின் சக்தியை திறம்பட குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது: “போர் செய்யும் நாடுகளுக்கு சொந்தமான போர்க் கப்பல்கள், அவை கருங்கடல் எல்லைக்குட்பட்ட நாடுகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தங்கள் கடற்படை தளங்களில் இருந்து இந்த பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்று அது கூறுகிறது.
அதாவது போர்க்கப்பல்கள் இந்த பாதை மூலம் தங்கள் அசல் கடற்படை தளங்களுக்கு திரும்ப முடியும் மற்றும் துருக்கி அதை தடுக்க முடியாது.
எடுத்துக்காட்டாக, கருங்கடலில் பதிவுசெய்யப்பட்ட ரஷ்ய கடற்படை, ஆனால் தற்போது மத்தியதரைக் கடலில் அமைந்துள்ளது, போஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லஸ் நீர்சந்திகளைக் கடந்து அதன் கடற்படை தளத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. மத்தியதரைக் கடல் அல்லது பால்டிக் கடலில் உள்ள கடற்படை தளங்களுக்குச் சொந்தமான, தற்போது கருங்கடலில் உள்ள ரஷ்ய கடற்படை கப்பல்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். கருங்கடலில் இருந்து போர் கப்பல்களை வெளியே எடுக்க ரஷ்யா சுதந்திரமாக உள்ளது.
CNN உடனான தனது நேர்காணலில் Cavusoglu இந்த கருத்தை எழுப்பினார். “இந்தப் போர்க்கப்பல் போரில் ஈடுபடும் நாட்டில் உள்ள கடற்படை தளத்திற்குச் செல்ல வேண்டுமானால், இந்தப் பாதையில் செல்வதை தடுக்க முடியாது”, ஆனால் எந்த முறைகேடுகளும் இருக்கக்கூடாது என்றும் கடற்படை தளத்திற்குத் திரும்பும் கப்பல்கள் தளத்திற்குத் திரும்பிச் செல்லும் என்று சொல்லிவிட்டுப் போரில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: FIFA 2022: கால்பந்து உலகக் கோப்பையில் இடைநீக்கம்… ரஷ்யாவை எப்படி பாதிக்கும்?
ஒரு துறைமுகத்திற்கு கப்பலின் அதிகாரப்பூர்வ நியமிப்பு, நீர்சந்தி வழியாக செல்ல உரிமை உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) படி, அதிகாரப்பூர்வ பணியானது, கப்பல்களை வைத்திருக்கும் அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. எனவே, மாண்ட்ரீக்ஸ் ஒப்பந்த்தை பயன்படுத்திக் கொள்ள ரஷ்யாவிற்கு மற்றொரு சாத்தியமான வழி, கருங்கடலுக்கு அதன் சில கப்பல்களை மீண்டும் நியமிப்பதாகும்.
உடனடி பாதிப்பு இல்லை, ஆனால் நீண்ட கால விளைவுகள் உண்டு
கருங்கடலில் அதன் இருப்பிடம் மூலம் ரஷ்யா அனுபவிக்கும் விரிவான சுதந்திரம் காரணமாக, மாண்ட்ரீக்ஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தற்போதைய மோதலில் குறிப்பிடத்தக்க இராணுவ விளைவுகளை ஏற்படுத்துமா என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், “இது முக்கியமாக ஒழுங்கை வலுப்படுத்தும்; எந்தவொரு இராணுவத் தொடர்பும் சிறியதாகவும் நீண்ட காலத்திற்கும் இருக்கும், ”என்று கடற்படை பகுப்பாய்வு மையத்தின் ஆய்வாளர் கார்னெல் ஓவர்ஃபீல்ட் ட்வீட்களில் எழுதினார்.
ஒப்பந்தத்தின்படி, கருங்கடலுக்குள் கொண்டு வரும் அல்லது வெளியே எடுக்க ரஷ்யா முடிவு செய்யும் கப்பல்கள் போர் முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும். கூடுதலாக, “தற்போது கருங்கடலில் இல்லாத மற்றும் முன்னெப்போதும் அங்கு இல்லாத, துணைக் கப்பல்கள் உட்பட போர்க்கப்பல்கள் கருங்கடலில் நுழைய முடியாது” என்று ஓவர்ஃபீல்ட் எழுதினார். மேலும், “இந்த கட்டுப்பாடு குறுகிய காலத்தில் பொருத்தமற்றதாக இருக்கலாம், ஆனால் மோதல் நீடித்தால் பெரியதாக இருக்கலாம்.” என்றும் அவர் எழுதினார்.
முன்னாள் துருக்கிய ராஜதந்திரி மற்றும் ஐரோப்பாவில் உள்ள கார்னகி அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளரான சினான் உல்ஜென், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவது கருங்கடல் மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலில் ரஷ்யா தனது ராணுவ இருப்பை சமநிலைப்படுத்துவதை மிகவும் சிக்கலாக்கும் என்று நம்புகிறார்.
மேலும், “முன்னர், நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட கருங்கடல் கடற்படையின் சொத்துக்களை ரஷ்யா நெகிழ்வாகப் பயன்படுத்தியது,” “ஆனால் இப்போது இல்லை. கருங்கடலில் எந்த கடற்படை கப்பல் இருக்கும், எது மத்தியதரைக் கடலில் இருக்கும் என்பதை ரஷ்யா தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் எழுதினார்.
“துருக்கி செய்வது ரஷ்யாவிற்கு தங்கள் வான்வெளியை மூடும் நாடுகள் என்ன செய்கின்றன என்பதைப் போன்றது” என்று ஓவர்ஃபீல்ட் எழுதினார்.
“ரஷ்ய-உக்ரேனிய போரில் நீர்சந்தியை மூடுவது ஒருபோதும் இராணுவ தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று அவர் மேலும் கூறுகிறார். “ஆனால் உக்ரைன் மீதான போர் குற்றத்திற்காக ரஷ்யாவை தண்டிப்பது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு அர்ப்பணிப்பு காட்டுவது துருக்கியின் தனித்துவமான வழி.” என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil