சனிக்கிழமை (ஜனவரி 21) காலை, முரட்டு யானை PT 7 (பாலக்காடு டஸ்கர் 7) ஐ பிடிக்க, 26 வனத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு முழுமையான குழு, கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள காட்டுக்குள் நுழைந்தது. தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி அருண் ஜக்காரியா தலைமையிலான குழுவினர், முரட்டு யானையை பிடித்து வயநாடு யானைகள் முகாமுக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, PT 7 யானை கேரளாவில் ஒரு மோசமான நற்பெயரைக் கட்டியெழுப்பியது, மத்திய கேரளா முழுவதும், குறிப்பாக பாலக்காடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் அடிக்கடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. வனத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 சதவீத யானை மோதல்களுக்கு இது காரணமாக இருந்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஒத்த ரொட்டி 35 ரூபாய்.. பாகிஸ்தானில் கோதுமை விலை ஏன் உயர்ந்தது?
காலப்போக்கில் யானையுடன் சிக்கலான உறவை ஏற்படுத்திய உள்ளூர்வாசிகளின் பல மாத திட்டமிடல் மற்றும் அழுத்தத்திற்குப் பிறகு இந்த யானையை பிடிக்கும் நடவடிக்கை வருகிறது.
PT 7 யானை மற்றும் அதன் வன்முறைகள்
PT 7 யானை கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரள மக்களை பயமுறுத்தியுள்ளது. உள்ளூர் அறிக்கைகள் வயது வந்த ஆண் யானையை 500 க்கும் மேற்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபடுத்தினாலும், 2022 இல் அதிகாரப்பூர்வ வனத் துறை அறிக்கை, PT 7 யானை 176 பயிர்ச் சேதங்களிலும் 13 சொத்து சேதங்களிலும் ஈடுபட்டதாகக் கூறியது. காடுகளுக்கு வெளியே, மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகில் கணிசமான நேரத்தை செலவிடுவதால், PT 7 யானை மனிதர்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்கிறது, மேலும் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது. கடந்த இரண்டு மாதங்களாக, யானை, மனிதர்கள்/கார்களைத் துரத்தித் தாக்கி, அடிக்கடி வன்முறையில் ஈடுபட்டு வருகிறது.
வனத்துறையின் கூற்றுப்படி, கடந்த இரண்டு மாதங்களாக PT 7 யானையின் ஆக்ரோஷம் அதிகரித்திருப்பதற்கு யானையின் இனப்பெருக்க வலியின் அறிகுறிகளின் வெளிப்பாடாக இருக்கலாம், இது பெரும்பாலும் ஆண் யானைகள் ஆக்ரோஷமாக மாறும், இனச்சேர்க்கை காலத்துடன் ஒத்துப்போகிறது.
நவம்பர் 24, 2022 அன்று பாலக்காட்டின் தோனியில் ரப்பர் வெட்டும் தொழிலாளியை யானை தாக்கியதையடுத்து, தலைமை வனவிலங்கு காப்பாளர் கங்கா சிங், PT 7 யானையை இடமாற்றம் செய்வதற்கான முடிவை எடுத்ததாக மனோரமா ஆன்லைன் தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது அந்த நபர் ஓடும்போது தடுமாறி விழுந்து கை முறிந்தது. இச்சம்பவம் மாவட்டத்தில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை மாதம், அதே கிராமத்தில், PT 7 யானை காலையில் நடைப்பயணம் சென்ற 60 வயதான முதியவரை மிதித்து கொன்றது. ஆனால், வனத்துறையினர் யானையை அடையாளம் காண தவறிவிட்டனர்.
முரட்டு யானையை பிடிப்பது எப்படி
இருப்பினும், முழுமையாக வளர்ந்த யானையைப் பிடித்து கொண்டு செல்வது எளிதல்ல. நவம்பர் பிற்பகுதியில் இருந்து, PT 7 யானையை அமைதிப்படுத்தி, வயநாட்டில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை அதிகாரிகள் உன்னிப்பாக திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் 26 விரைவுப் பதிலளிப்புக் குழு உறுப்பினர்கள், பயிற்சி பெற்ற மூன்று கும்கி யானைகளுடன் இணைந்து செயலில் ஈடுபட்டுள்ளனர். ஐம்பது வனக் காவலர்களும் அழைக்கப்பட்டு, அந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பார்கள்.
அதிகாலை 5 மணிக்கு, தோனிக்கு அருகிலுள்ள காட்டுக்குள் ஒரு கண்காணிப்பு குழு PT 7 யானைக் கண்டறிய களமிறங்கியுள்ளது. அதிகாரிகள் பல மாதங்களாக PT 7 யானையைக் கண்காணித்து வருகின்றனர், மேலும் அதன் தற்போதைய இருப்பிடம் தோனிக்கு அருகில் உள்ளது, இது யானையைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு ஏற்றதாக உள்ளது. காட்டில் PT 7 யானையின் இருப்பிடம் சரியாகக் கண்டறியப்பட்டதும், டாக்டர் அருண் ஜக்காரியாவும் அவரது சகாக்களும் அந்த இடத்தை அடைந்து, மறைந்து இருந்து, சத்தமில்லா குண்டுகளால் யானையைச் சுடுவார்கள். “பெரும்பாலும் நாங்கள் எதிர்பாரா நேரத்தில் சுடுவோம். யானையைத் துரத்தும்போது எங்களால் சுட முடியாது” என்று டாக்டர் ஜக்காரியா தி இந்துவிடம் கூறினார்.
திரைப்படங்களில் ஒரு விலங்கைச் சுடுவது போல் எளிதாகத் தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில், இது ஒரு சிக்கலான செயல்முறையாகும். முதலாவதாக, சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து சுடக்கூடிய தோட்டாக்களைப் போலல்லாமல் (ஸ்னைப்பர் ரைபிள்களைப் பயன்படுத்தி), டார்ட் துப்பாக்கிகளின் அதிகபட்ச வரம்பு சுமார் 50-75 மீட்டர் ஆகும், அடர்ந்த காட்டில் அந்த வரம்பு மேலும் குறைவு. இதன் பொருள் சுடும் குழு ஆக்ரோஷமாக உள்ள விலங்குடன் மிக நெருக்கமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, யானையின் அளவைப் பொறுத்தே, அமைதிப்படுத்தும் மருந்தின் அளவும், அது செயல்பட எடுக்கும் நேரமும் இருக்கும். கால்நடை மருத்துவர்களின் கூற்றுப்படி, நடுத்தர அளவிலான PT 7 யானை மயக்க நிலைக்கு வர அரை மணி நேரம் ஆகும்.
இது முடிந்ததும், பயிற்சி பெற்ற மூன்று கும்கி யானைகளின் உதவியுடன், PT 7 யானையை ஒரு லாரியில் ஏற்றி, காட்டு யானைகளை அடக்குவதற்காக கட்டப்பட்ட சுற்றிலும் வேலியுள்ள அடைப்புக்கு கொண்டு செல்லப்படும். வேலிக்குள் நுழையும் வரை, PT 7 யானை கடுமையான மயக்கத்தில் இருக்க வேண்டும், எனவே கால்நடை மருத்துவர்கள் இடமாற்றத்தின் போது பல டோஸ்களை செலுத்த வேண்டியிருக்கும்.
யானை – மனித மோதல் அதிகரித்து வருகிறது
PT 7 யானையின் கதை கேரளாவில் பலத்த எதிர்வினைகளை கிளப்பியுள்ளது. அதன் அழிவுப் பிரசன்னத்தின் நிழலின் கீழ் வாழ்பவர்களுக்கு, வனத் துறையின் நடவடிக்கை மூலம் தேவையான நிவாரணம் கிடைத்தாலும், மற்றவர்கள் அதன் அவல நிலைக்கு அதிக அனுதாபத்துடன் உள்ளனர். யானையை இடமாற்றம் செய்ய வனத்துறை முடிவு செய்ததையடுத்து, பாலூட்டிகளின் ரசிகர்கள் படையப்பா ரசிகர்கள் சங்கத்தை உருவாக்கினர். இந்த ரசிகர்கள் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் யானையின் வீடியோக்கள் மற்றும் கதைகளைப் பகிர்ந்துகொண்டு அதை “தனியாக விட வேண்டும்” என்று வாதிட்டு வருகின்றனர்.
இந்த ரசிகர்கள் அதிகரித்த நகரமயமாக்கல் மற்றும் முதன்மையான யானைப் பிரதேசத்தில் மனித ஆக்கிரமிப்பு ஆகியவை PT 7 யானையின் கோபத்திற்கு ஒரு காரணம் என்று குறிப்பிடுகின்றனர். பல வழிகளில், அவர்கள் சொல்வது சரிதான்.
வசிப்பிட இழப்பு மற்றும் வசிப்பிடங்கள் துண்டு துண்டாக இருப்பதால், யானைகள் உணவுக்காக உணவு தேடும் போது அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் போது மனிதர்களுடன் அடிக்கடி மோதல் கொள்கின்றன என்று உலக வனவிலங்கு நிதிய அறிக்கை தெரிவித்துள்ளது. மனித-யானை மோதலால் 2018-2020 வரை இந்தியாவில் 1,401 மனிதர்களும், 301 யானைகளும் இறந்துள்ளன என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகஸ்ட் 2, 2021 அன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மாநில அரசுகளும் மத்திய அரசும் பணிக்குழுக்கள் மற்றும் பல்வேறு சட்டங்களை இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவியாகக் கொண்டு வந்தாலும், வன விலங்குகள் வாழ்விடத்திற்குள் மனிதர்கள் அத்துமீறி நுழைவதற்கான அடிப்படைப் பிரச்சினை ஒரு தீவிர பிரச்சினையாகவே உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil