திருவனந்தபுரத்தில், இரண்டு நர்சரி பள்ளி மாணவர்களிடையே நோரோவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் இதன் அறிகுறிகள்.
அரசு பகுப்பாய்வு ஆய்வகத்தில் மாதிரிகளை பரிசோதித்த பிறகே இந்த தொற்று, கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை, பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு மூலம் மாணவர்களுக்கு ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
நோரோவைரஸ் என்றால் என்ன?
நோரோவைரஸ் என்பது ஒரு கடுமையான தொற்றுநோயாகும், இது சில நேரங்களில் ‘stomach flu’ அல்லது ‘ winter vomiting bug’ என்றும் குறிப்பிடப்படுகிறது. இது அசுத்தமான உணவு, நீர் மற்றும் மேற்பரப்புகள் மூலம் பரவுகிறது.
(ஒரு குழந்தையின் மலத்தில் காணப்படும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் மற்றொரு குழந்தையால் விழுங்கப்படும்போது மலம்-வாய்வழி பரவுதல் (fecal-oral transmission) ஏற்படுகிறது.
கிட்ஸ் பிளே ஸ்கூல், டே கேர் போன்ற அமைப்புகளில் இது மிகவும் பொதுவானது, அங்கு மல உயிரினங்கள் பொதுவாக மேற்பரப்புகளிலும் வழங்குநர்களின் கைகளிலும் காணப்படுகின்றன. பொதுவாக, மாசுபாடு கண்ணுக்கு தெரியாதது.)
இது வயிற்றுப்போக்கைத் தூண்டும் ரோட்டா வைரஸைப் போன்றது. இந்த நோய் பொதுவாக பயணக் கப்பல்கள், நர்சரி இல்லங்கள், தங்குமிடங்கள் மற்றும் பிற மூடிய இடங்களில் ஏற்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் படி, "நோரோவைரஸ் தொற்று குடல் அழற்சி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது மற்றும் நீண்டகால நோயுற்ற தன்மையை ஏற்படுத்தலாம்". என்று தற்போதைய சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 685 மில்லியன் நோரோவைரஸ் பாதிப்புகள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே 200 மில்லியன் பாதிப்புகள் உள்ளன.
அறிகுறிகள் என்ன?
நோரோவைரஸின் ஆரம்ப அறிகுறிகள் வாந்தி மற்றும்/ வயிற்றுப்போக்கு, இது வைரஸுக்கு வெளிப்பட்ட 1-2 நாட்களுக்குப் பிறகு தோன்றும். நோயாளிகள் குமட்டல் மற்றும் வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தீவிர நிகழ்வுகளில், திரவ இழப்பு’ நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
ஒருவர் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?
வைரஸ் வெவ்வேறு விகாரங்களைக் கொண்டிருப்பதால் ஒருவர் பல முறை பாதிக்கப்படலாம். நோரோவைரஸ் கிருமிநாசினிகளுக்கு கட்டுப்படாதது மற்றும் 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும். எனவே, உணவை வேகவைப்பதாலோ அல்லது குளோரினேட் செய்த நீரோ வைரஸைக் கொல்லாது. மேலும் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்திய பிறகும் இது வாழும்.
அடிப்படை முன்னெச்சரிக்கை மிகவும் பொதுவானது- கழிவறையைப் பயன்படுத்திய பிறகு அல்லது டயப்பர்களை மாற்றிய பிறகு சோப்புடன் மீண்டும் மீண்டும் கைகளைக் கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன் அல்லது உணவு தயாரிப்பதற்கு முன் கைகளை கவனமாக கழுவுவது முக்கியம். தொற்றுநோய்களின் போது, ஹைபோகுளோரைட்டின் கரைசலைக் கொண்டு மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும், நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மற்றவர்களுக்கு உணவு தயாரிப்பதைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கிறது. மேலும் நோய் குணமடைந்து 2 நாட்களுக்கு இதை கடைபிடிக்கவும் அறிவுறுத்துகிறது.
சிகிச்சை என்ன?
நோய் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும். இந்த நோய்த்தொற்று, பொதுவாக 2-3 நாட்கள் மட்டுமே நீடிக்கும், மேலும் மிகவும் இளமையாக இல்லாத, மிகவும் வயதான அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பெரும்பாலான நபர்கள் போதுமான ஓய்வு மற்றும் நீரேற்றத்துடன் அதை சமாளிக்கலாம்.
real-time reverse transcription-polymerase chain reaction மூலம் நோய் கண்டறியப்படுகிறது. நோய்க்கான தடுப்பூசிகள் எதுவும் இல்லை.
கடுமையான கட்டத்தில் நீரேற்றத்தை பராமரிப்பது முக்கியம். தீவிர நிகழ்வுகளில், நோயாளிகளுக்கு ரீஹைட்ரேஷன் திரவங்களை நரம்பு வழியாக வழங்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“