கொரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகள் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில், பூஸ்டர் டோஸை களமிறக்க திட்டமிட்டு வருகின்றன. அதே போல, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கி வருகின்றனர்.
தடுப்பூசியின் வீரியம் எந்தளவு உள்ளது என்பதை கண்டறிய தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன்படி, தற்போதைய ஆய்வு மீண்டும் ஒருமுறை பைசர் தடுப்பூசி கொரோனா தொற்றின் அனைத்து வகைகளுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்துள்ளது.
கைசர் பர்மனென்ட் மற்றும் பைசர் குறித்து தி லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வு முடிவுகளில், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு, டெல்டா உட்பட அனைத்து விதமான கரோனா வகைகளுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி 90 சதவிகிதம் பயனளிப்பது தெரியவந்துள்ளது. மருத்துவமனை செல்வதைத் தவிர்க்க உதவுகிறது.
ஆய்வறிக்கை
கொரோனா தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியின் வீரியமும் கணிசமாக குறைகிறது. அதன் நோய் எதிர்ப்புத் திறன் தடுப்பூசி செலுத்திய ஒரு மாதத்திற்குள் 88 விழுக்காடாகவும், ஆறு மாதத்தில் 47 விழுக்காடாகவும் குறைகிறது. ஆனால், அதே சமயம் மருத்துவமனை சிகிச்சைக்கு எதிராக பைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ் 90 விழுக்காடு திறனுடன் உள்ளது. அனைத்து வகை கொரோனா தொற்று வகைக்கும் எதிராக சிறப்பாக உள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய நிலை, முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
தரவுகள் ஆய்வு
ஆராய்ச்சியாளர்கள், கைசர் பர்மனென்ட் ஹெல்த் நிறுவனத்தில் டிசம்பர் 4 2020 முதல் ஆகஸ்ட் 8 2021 இடையிலான காலத்தில் பதியப்பட்டுள்ள 3,436,957 நபர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், 5.4% (184,041 பேர்) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 6.6% (12,130) மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
ஆய்வின் போது, டெல்டா வகை பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 0.6 சதவிகித மக்கள் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூலையில் 87 சதவிகித மக்கள் டெல்டாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு டோஸ் பைசர் தடுப்பூசி செலுத்திய பிறகு,டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு எதிரான செயல்திறன் ஒரு மாதத்தில் 93 விழுக்காடாக இருந்துள்ளது. ஆனால், நான்கு மாதத்தில் 53 சதவிகிதமாக குறைந்துள்ளது. மற்ற வகைகளுக்கு எதிரான செயல்திறனும், நான்கு மாதத்தில் 67 சதவிகிதமாக இருந்துள்ளது. எவ்வாறாயினும், டெல்டா வகை கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைபெறுவதற்கு எதிராக அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது. பைசர் தடுப்பூசியின் செயல்பாடு 93 விழுக்காடாக இருந்தது.
ஆய்வின் ரிசலட் சொல்வது என்ன?
இந்த ஆய்வு தடுப்பூசியின் செயல்திறனை கண்டறிந்து எந்த வயதினருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதைக் கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அவர்களின் கூற்றுப்படி, ஆய்வு முடிவுகள் மூலம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நிச்சயம் அனைத்து தரப்பினருக்குத் தேவை என்பதை உறுதிபடுத்தியுள்ளது. அதே சமயம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு முன்பு, உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என FDA மற்றும் CDC ஆலோசனை குழுக்கள் பரிந்துரைத்திருந்தது. ஏனென்றால், பல நாடுகளில் உள்ள மக்களுக்கு, முதன்மை டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்கவில்லை.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம், அந்நாட்டில் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil