Sofi Ahsan
Umar Khalid arrested under UAPA in Delhi riots case: What is this anti-terror law :ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலிதை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உமர் காலித் ஒரு நாளுக்கு முன்பு சட்டவிரோத தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பிப்ரவரியில் டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பல இளம் ஆர்வலர்களில் காலிதும் ஒருவர். கலவரத்தின் பின்னணியில் இருக்கும் மிகப் “பெரிய சதி” குறித்து விசாரிக்க காவல்துறை கோரியுள்ளது.
உபா சட்டம் என்றால் என்ன? எதற்காக பயன்படுகிறது?
இது ஒரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாகும். தனிநபர்கள் மற்றும் அமைப்புகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. பிரிவினைவாத அமைப்புகளை குறிவைத்து 1967ம் ஆண்டு முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. இது தடா மற்றும் பொடா சட்டத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது.
அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் UAPA ஐ மேலும் கடுமையானதாக ஆக்கியுள்ளன. 2019இல் கடைசியாக திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு நபரை பயங்கரவாதியாக அறிவிக்க முடியும். இதற்கு முன்னர் ஒரு குழுவை அல்லது அமைப்பை தான் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க முடியும் என்று இருந்தது UAPA வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களால் விசாரிக்கப்படுகின்றன. பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத செயல்கள் இல்லாத பிற நிகழ்வுகளிலும் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது. காஷ்மீரில் 2 பத்திரிக்கையாளர்கள்; தேவஞான கலிதா மற்றும் நட்டாஷா நார்வல் மீதும், முன்னாள் காங்கிரஸ் முனிசிபல் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், யுனைட்டட் அகைன்ஸ்ட் ஹேட் அமைப்பின் காலித் ஷாய்ஃபி மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவி ஷஃபூரா ஜர்கர் மற்றும் தற்போது உமர் காலித் ஆகியோர் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.
உமர் காலித் மற்றும் பிறர் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து காவல்துறை என்ன கூறுகிறது?
இந்த விசாரணை முதல் தகவல் அறிக்கை எண் 59/2020-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஐபிசி 302 (கொலை), ஐபிசி 153ஏ (இரண்டு குழுக்களுக்கு இடையே பகைமையை உருவாக்குதல்), 1244ஏ (சேததுரோகம்) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. இதில் பிப்ரவரி மாதம் 2020ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வன்முறைகள் காலித் மற்றும் இதர நபர்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று காவல்துறை கூறியுள்ளது. பிப்ரவரி மாதம் ட்ரெம்ப் இந்தியா வந்த போது, உமர் காலித் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகவும், மக்களை சாலைகளில் வந்து, இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை உறுதி செய்யுங்கள் என்று கூறினார். சதிதிட்டத்தை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாட்ஸ்ஆப் சாட்கள், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி தொடர்பான ஆதாரங்களை சேகரித்து உள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
எஃப்.ஐ.ஆரில் எந்தெந்த ப்ரொவிஷன்கள் இணைக்கப்பட்டுள்ளன?
பிரிவுகள் 13, 16, 17 மற்றும் 18 ஆகியவை இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக இந்த சட்டம் குறிப்பிடுவது – இந்தியாவின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையும் பிரிக்கும் நோக்கில், பிரிவினையை ஆதரிக்கும் வகையில், அல்லது தூண்டும் வகையில் எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட வாக்கியங்கள், அறிகுறிகள் அல்லது வெளிப்படையான பிரதிநிதித்துவம்… இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் கேள்விகள், இடையூறுகள் அல்லது இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கும் வகையில் பேசுதல். “அதிருப்தி” என்ற சொல் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை, மேலும் ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. செக்சன் 13ன் படி காலித் மற்றும் இதர நபர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்கின் படி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். பிரிவு 16ன் கீழ், ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் விளைவாக மரணங்கள் ஏதும் நிகழ்ந்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். இந்த சட்டம் ஒரு பயங்கரவாத செயலை இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் நோக்கம் கொண்ட ஒன்றாக வரையறுக்கிறது. மேலும் மரணம் அல்லது காயங்கள் மற்றும் சொத்து சேதங்களை ஏற்படுத்துகிறது அல்லது ஏற்படுத்தக்கூடும். தீவிரவாத செயல்களுக்காக நிதி திரட்டுதல் பிரிவு 17ன் கீழ் வரும். பிரிவு 18 பயங்கரவாதச் செயலுக்குப் பின்னால் உள்ள சதியை குறிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அமல்படுத்தியதை எவ்வாறு நியாயப்படுத்துகிறது டெல்லி காவல்துறை?
மாற்று கருத்துகள் மற்றும் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்கள் இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தாது என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும், “கலவரங்கள்” அரசாங்க இயந்திரங்களை மிஞ்சும் ஒரு பெரிய சதித்திட்டத்தின் விளைவாகும் என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இந்திய அரசின் ஸ்திரத்தன்மையை அழித்தல் மற்றும் சிதைத்தல் மூலமாக குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நீக்குவதற்காக போராட்டம் நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
உபா சட்டம் மற்ற சட்டங்களை காட்டிலும் ஏன் கடுமையாக உள்ளது?
சஃபூரா சர்கருக்கு மட்டுமே இதுவரை பெயில் கிடைத்துள்ளது. அதுவும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜாமினுக்கான தகுதி அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த மூன்று நபர்களுக்கு மார்ச் மாதம் பெயில் கிடைத்தது. ஆனால் அவ்வழக்கில் உபா சட்டங்கள் இணைக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ந்தவையாகும். UAPA இன் கீழ் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் எளிதில் ஜாமீன் பெறுவது அரிது. இந்த வழக்கு “பிரைமா ஃபேஸி” உண்மை என்றால் நீதிமன்றம் ஜாமீனை மறுக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் முன் ஜாமீன் பெற முடியாது, மேலும் விசாரணையின் காலம் பொது வழக்கறிஞரின் வேண்டுகோளின் பேரில் 90 நாட்களில் இருந்து 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் – அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெற வாய்ப்பில்லை. காவல்துறையினர் விசாரணையை 15 நாட்களில் இருந்து 30 நாட்கள் வரை நீட்டிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil