2021-2022 -ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசின் 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகவும், அதோடு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் ஆரம்ப பங்குகளை வெளியீட திட்டமிட்டுள்ளதாவும் தெரிவித்திருந்தார். மற்றும் மத்திய அரசின் வங்கிகளுக்கு 20,000 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இது பற்றிய சிறிய தொகுப்பை இங்கு காணலாம்.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கல் என்றால் என்ன?
நேற்றைய நிதி நிலை அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்த நித்தியமைச்சர், அவை எந்தெந்த வங்கிகள் என்று குறிப்பிடவில்லை. இந்நிலையில் மத்திய அரசு இந்த வங்கிகளில் பெரும்பான்மை பங்குகளை நிர்வகித்து வருகின்றது. அதில் உள்ள பெரும்பான்மை பங்குளான 51 சதவிதத்தையுமோ அல்லது முழுவதுமாகவோ விற்று, தனியார் வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. எனவே அந்த வங்கிகளில் வேலை செய்யும் ஊழியர்களின் யூனியன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு தகுதி பெறும்?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி) போன்ற பெரிய வங்கிகளின் கட்டமைப்பை மாற்றுவதில் சாத்தியமில்லை என்பதால், நடுத்தர நிலையில் உள்ள வங்கிகள் இதற்கு தெரிவு செய்யப்படலாம் எனக் கூறப்படுகின்றது.
“இரண்டு பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயமாக்கல் மற்றும் எல்.ஐ.சியின் பங்கு விற்பனை ஆகியவை முதலீட்டு இலக்கை அடையவும், நிதிக் கட்டுப்பாடுகளை குறைக்கவும் அரசாங்கத்திற்கு உதவும்” என்று லேடரப் வெல்த் மேலாண்மை நிர்வாக இயக்குனர் ராகவேந்திர நாத் கூறியுள்ளார்.
ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்கல் பட்டியலில் உள்ளதா?
இந்த பட்டியலில் ஐடிபிஐ வங்கி வர சாத்தியமில்லை எனக் கூறப்படுகின்றது. ஏனென்றால் ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வைத்துள்ளது. எல்.ஐ.சி ஐ.டி.பி.ஐ. வங்கியில் உள்ள பங்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குறைக்க வேண்டும். எனவே அந்த வங்கியின் மீதான கட்டுப்பாட்டை எதிர்காலத்தில் கைவிட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்?
தனியார் மயமாக்கப்பட உள்ள பொது காப்பீட்டு நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிடவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 4 பொது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (யுஐஐ), தேசிய காப்பீட்டு நிறுவனம் (என்ஐசி) மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி (ஓஐசி) போன்றவை ஆகும். அதோடு மறுகாப்பீட்டாளர் பொது காப்பீட்டுக் கழகத்தையும் (ஜி.ஐ.சி ரீ) மத்திய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதில் உள்ள 3 பொது காப்பீட்டு நிறுவனங்களையும் (யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (யுஐஐ), தேசிய காப்பீட்டு நிறுவனம் (என்ஐசி) மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி (ஓஐசி) ) இணைக்க மத்திய அரசு ஏற்கனேவே முடிவு செய்திருந்தது, ஆனால் மறு மூலதனமாக்கலாம் என்ற திட்டம் இருந்ததால், அந்த 3 நிறுவனங்களையும் இணைக்கும் திட்டத்தைக் கைவிட்டது.
எல்.ஐ.சி-யின் ஐபிஓ வெளியீடு குறித்த மத்திய அரசின் திட்டம் என்ன?
நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் எல்.ஐ.சி பொது காப்பீட்டு நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு குறித்த திட்டத்தை அறிவித்திருந்தார்.
எல்.ஐ.சி-யின் இன்றைய சந்தை மதிப்பு ரூ .32 லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப பங்குகளை வெளியிடுவதன் மூலம் கணிசமான ஒரு தொகையை திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்.ஐ.சி-யை சந்தை மூலதனமயமாக்கலில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாற்றும் எனக் கூறப்படுகின்றது. ஐபிஓவுக்கான பணிகளை எல்.ஐ.சி ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்படுகின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil