மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி ஜனவரி 26-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்ன?
2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணியின் இறுதிக் கட்டமானது, நிதியமைச்சகத்தின் வடக்கு கட்டிடத்தில் ஜனவரி 26-ம் தேதி பாரம்பரிய அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கோவிட் பரவல் முடிவுக்குப் பிறகு இந்த ஆண்டு அல்வா கிண்டும் விழா மீண்டும் தொடங்கியது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெறும் இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சியில், நிதியமைச்சர் ஒரு பெரிய பாத்திரத்தில் அல்வா கிண்டி பின்னர் இனிப்புகளை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தருவார்.
இந்த நிகழ்ச்சி பட்ஜெட் தயாரிப்பதற்காக தங்கி இருக்கும் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அல்வா கொடுக்கப்பட்ட பிறகு, பட்ஜெட் செயல்முறையுடன் நேரடியாக தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அச்சிடுதல் பணிக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை நார்த் பிளாக்கில் தங்கியிருக்க வேண்டும். பட்ஜெட் தொடர்பான ரகசியத்தைக் காக்க அவர்கள் அனைவரும் அவர்களுடைய குடும்பத்தினர் உட்பட அனைவரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
நிதியமைச்சர் மக்களவையில் பட்ஜெட் உரையை நிகழ்த்திய பிறகே பட்ஜெட் தயாரிப்பதற்காக தங்கும் காலம் முடிவடைகிறது. இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சி என்பது பட்ஜெட்டை வெளியிட உழைக்கும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் நடைமுறை ஆகும்.
2021 முதல் அரசாங்கம் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யும் முறைக்கு சென்றதால், இந்த தங்கி இருக்கும் காலம் இப்போது குறைந்துவிட்டது. இதனால் பட்ஜெட் நகல்களை அச்சிடுவதற்குத் தேவைப்படும் காலம் குறைகிறது.
பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திப்படி, “பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் வடக்கு கட்டிடத்தில் (நார்த் பிளாக்) பிரத்யேக அரசு அச்சகத்தில் அச்சிடப்படுகின்றன. முன்னதாக, ஆவணங்கள் ராஷ்டிரபதி பவனில் அச்சிடப்பட்டன. ஆனால், ஆவணங்கள் கசிந்த பின்னர் 1950-ல் தேசிய தலைநகரில் மின்டோ சாலையில் உள்ள அச்சகத்திற்கு மாற்றப்பட்டது. 1980-ல் நார்த் பிளாக்கிற்கு மாற்றப்பட்டது” என்று கூறுகிறது.
இந்த ஆண்டு, பத்திரிக்கை தகவல் பணியகத்தின் (PIB) வெளியீட்டின் படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சியில், நிதிச் செயலர் & செலவுகள் விவகார செயலர் டி.வி. சோமநாதன், பொருளாதார விவகாரங்கள் செயலர் அஜய் சேத், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (டி.ஐ.பி.ஏ.எம்) செயலர் துஹின் காந்தா பாண்டே, வருவாய் செயலாலர் சஞ்சய் மல்ஹோத்ரா, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த வி நாகேஸ்வரன், நேரடி வரிகளுக்கான மத்திய வாரிய (சி.பி.டி.டி) தலைவர் ஸ்ரீ நிதின் குப்தா, மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்களுக்கான மத்திய வாரியத் (சி.பி.ஐ.சி) தலைவர் விவேக் ஜோஹ்ரி, பட்ஜெட் கூடுதல் செயலர் ஆஷிஷ் வச்சானி ஆகியோர் கலந்துகொண்டனர்.
காகிதம் இல்லாத பட்ஜெட்
பி.ஐ.பி செய்திக் குறிப்பின்படி, மத்திய பட்ஜெட் 2023-24 காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.
"அரசியலமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு நிதிநிலை அறிக்கை மானியங்களுக்கான கோரிக்கை (டிஜி), நிதி மசோதா போன்றவை உட்பட அனைத்து 14 யூனியன் பட்ஜெட் ஆவணங்களும் மத்திய பட்ஜெட் மொபைல் செயலியில் எளிதாகக் கிடைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எளிய வடிவிலான டிஜிட்டல் வசதியைப் பயன்படுத்தி பட்ஜெட் ஆவணங்களை இலவசமாகப் பெறலாம். இது ஆங்கிலம் & ஹிந்தி என இரு மொழியில் Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கும். இந்த செயலியை யூனியன் பட்ஜெட் இணையதளத்தில் (www.indiabudget.gov.in) பதிவிறக்கம் செய்யலாம். பிப்ரவரி 1, 2023 அன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட் உரையை முடித்த பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் மொபைல் செயலியில் கிடைக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு வரை, நிதி அமைச்சர்கள் பட்ஜெட் ஆவணங்களை சூட்கேஸில் எடுத்துச் சென்றனர். இது பிரிட்டிஷ் கால மரபு. இருப்பினும், 2019-ம் ஆண்டில், நிர்மலா சீதாராமன் தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட ஒரு சிவப்பு துணியில் ஆவணங்களை கொண்டு வந்தார்.
சிவப்பு துணிகள் பொதுவாக மத நூல்களை மறைக்க பயன்படுத்தப்படுகின்றன. அப்போது தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், மேற்கத்திய அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கான அடையாளம் என்று கூறியிருந்தார். “இது இந்திய மரபில் உள்ளது. இது மேற்கத்திய சிந்தனையின் அடிமைத்தனத்திலிருந்து நாம் வெளியேறுவதைக் குறிக்கிறது. இது பட்ஜெட் அல்ல, ‘பாஹி கட்டா’ (லெட்ஜர்)” என்று சுப்ரமணியன் கூறியிருந்தார்.
பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆன பிறகு, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை டேப்லெட்டில் வாசித்தார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் செய்திப்படி, கடந்த ஆண்டு, நிர்மலா சீதாராமன் ஒரு சிவப்பு துணியில் சுற்றப்பட்ட டேப்லெட்டை பட்ஜெட் உரையை நிகழ்த்த எடுத்துச் சென்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.