‘Union’ or ‘central’ government : இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 1(1), ”இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று கூறியுள்ளது. இந்திய அரசியல் சாசன நிபுணர்கள், இதனை, “குறிப்பிடத்தக்க ஒற்றையாட்சி அம்சங்களைக் கொண்ட கூட்டாட்சி அடிப்படை” என்று அழைக்கின்றனர்.
மத்திய அரசா அல்லது ஒன்றிய அரசா?
பொதுவாக, ஒன்றிய அரசு மற்றும் மத்திய அரசு ஒன்றுக்கொன்று மாற்றாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், இந்த மாத ஆரம்பத்தில் திமுக அரசு நரேந்திர மோடியின் அரசை மத்திய அரசு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது.
ஆரம்பத்தில் சமூக ஊடகங்களில் மட்டுமே நிலவி வந்த சர்ச்சை, சட்டமன்றத்தில் பேசுபொருளானது. திருநெல்வேலி எம்.எல்.ஏ. நய்னார் நாகேந்திரன், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று ஆளும் கட்சி அழைப்பதில் நோக்கம் ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
ஜூன் 23ம் தேதி அன்று அதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், யாரும் ஒன்றியம் என்ற வார்த்தையை கேட்டு அச்சம் அடைய தேவையில்லை. கூட்டாட்சி கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதால் இந்த அரசு தொடர்ந்து ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் என்று கூறினார். 1957ம் ஆண்டு முதல் ஒன்றியம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது என்றும், இந்திய அரசியல் அமைப்பில் மாநிலங்களின் ஒன்றியம் என்று தான் இந்தியா வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்று ஏன் திமுக அழைக்கிறது என்பதற்கான விளக்கத்தை பாஜக தலைவர்கள் கேட்க, முரணாக, புதுவையின் துணை நிலை ஆளுநராக பதவி வகிக்கும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், புதுவை அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
பல தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்த ஒரு “டெம்ப்ளேட்டையே” புதுவை துணைநிலை ஆளுநர் கூறினார் என்று புதுவை ராஜ்பவன் பிறகு விளக்கம் ஒன்றை வெளியிட்டது. உண்மையில், ஒன்றியம் என்ற சொல் பாரம்பரியமாக தமிழ் பேசும் புதுச்சேரியில் பயன்படுத்தப்பட்டிருந்தால், இது புதுச்சேரிக்கு முன்பே நடைமுறைக்கு வந்த தமிழக சட்டசபையிலும் பயன்பாட்டில் இருந்திருக்கும்.
மொழியும் அரசியல் சாசனமும்
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்திய அரசியலமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு எதுவும் இல்லை என்று ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்த்ரு சுட்டிக்காட்டினார். மத்திய அரசு அல்லது ஒன்றிய அரசு என்பது இந்திய அரசின் தன்மையை பற்றிய கேள்வியாகும் என்று கூறிய நீதிபதி சந்த்ரு, ”இந்திய அரசுச் சட்டம்,1935-ல் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் இருந்தது. வைஸ்ராய்க்கு குறைந்த அதிகாரங்களே இருந்தன. ஆனால் இந்திய அரசியல் அமைப்பு இந்த சமன்பாட்டை மாற்றியது. இது கூட்டாட்சியை அதிகம் வலுப்படுத்தியது. எல்லா வகையிலும் உண்மையான அதிகாரம் இந்திய ஒன்றியத்தில் உள்ளது. அரசியல் சாசனத்தின் 70 ஆண்டுகளில், உண்மையான அரசியல் அமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் திரும்பப் பெறப்பட்டன. இவை அனைத்தும் ஒரு வார்த்தையின் சர்ச்சையை கானல் ஆக்குகிறது” என்று கூறினார்.
1948ம் ஆண்டு, இந்திய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர், அரசியல் சாசன வரைவை சமர்பிக்கும் போது, ”யூனியன் என்ற வார்த்தையை குழு பயன்படுத்தியுள்ளது. ஏன் என்றால், ஒன்றியங்களுடன் ஏற்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் இந்திய கூட்டாட்சி அமையவில்லை. மேலும் இந்திய கூட்டாட்சியில் இருந்து விலகிக் கொள்ள மாகாணங்களுக்கு உரிமை இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.
1960களின் மைய காலங்களில் திமுக ஆட்சிக்கு வந்தபின், தமிழ்நாடு தமிழின் சிறந்த வடிவத்தில் சொற்களை வழங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டது. உதாரணமாக சபா என்ற சமஸ்கிருத வார்த்தை. சட்டசபை தற்போது சட்டப்பேரவையாக வழங்கப்படுகிறது. லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் சட்டமன்ற மேலவை என்று வழங்கப்படுகிறது. ராஜ்யசபை மாநிலங்களவை ஆனது. லோக் சபா மக்களவை என்று கூறப்படுகிறது.
ஜனாதிபதி என்ற வார்த்தை தற்போது பயன்படுத்தப்படுவதில்லை. குடியரசு தலைவர் என்று அழைக்கப்படுகிறார். கவர்னர் என்ற சொல்லுக்கு நீண்ட நாட்களாக தமிழில் வார்த்தை இல்லை. தற்போது ஆளுநர் என்று வழங்கப்படுகிறது. இது ஆங்கிலத்திலிருந்து ஒரு துல்லியமான மொழிபெயர்ப்பு. மற்ற மாநிலங்களில் செயல்படும் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் அனைத்தும் பி.சி.சி. Pradesh Congress Committees (PCCs) என்று அழைக்கப்படும் போது தமிழகத்தில் அது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil