scorecardresearch

குரங்கு அம்மை என்றால் என்ன? ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்திற்கு பரவலா?

நைஜீரியா நாட்டிற்கு சென்று வந்த லண்டன் வாசி ஒருவருக்கு, குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குரங்கு அம்மை என்றால் என்ன?

குரங்கு அம்மை என்பது ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஆகும். அதாவது பெரியம்மை நோயை ஏற்படுத்தும் வேரியோலா வைரஸையும், பெரியம்மை தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் வேசினியா வைரஸையும் உள்ளடக்கில் வைரஸ் வகையாகும். குரங்கு நோய் பெரியம்மை நோயின் தான் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒப்பிடுகையில் தீவிரம் குறைவாக இருக்கும்.

1980களில் தடுப்பூசி மூலம் பெரியம்மை நோய் பரவலை தடுத்தாலும், குரங்கு அம்மை தொடர்ந்து மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் பரவி வருகிறது.

விலங்கிடமிருந்து பரவும் நோய்

குரங்கு அம்மை என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். இதுவரை அணில், காம்பியன் வேட்டையாடிய எலிகள், டார்மிஸ் மற்றும் சில குரங்கு வகைகளில் குரங்கு அம்மை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த நோய் மனிதனுக்கு மனிதனுக்கு பரவுவது வரையறுக்கப்பட்டதாகும். ஏனெனில், அதன் பரிமாற்றம் ஆறு தலைமுறை இடைவெளி கொண்ட நீண்ட சங்கிலி ஆகும். கடைசியாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர், ஓரிஜினலாக பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஆறு லிங்க் தள்ளியிருந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) மருத்துவ மற்றும் வளர்ந்து வரும் நோய்த்தொற்றுகளின் இயக்குனர் டாக்டர் கொலின் பிரவுன் கூறுகையில், “குரங்கு அம்மை மக்களிடையே எளிதில் பரவாது என்பதையும், பொது மக்களுக்கு ஒட்டுமொத்த ஆபத்து மிகக் குறைவு என்பதையும் வலியுறுத்துவது முக்கியம் என்றார்.

அப்படி பரவுகிறது என்றால், உடல் திரவங்கள் வாயிலாகவும், தோலில் ஏற்படும் புண்கள் வாயிலாகவும் அல்லது வாய், தொண்டை, சுவாசத் துளிகளாலும், அசுத்தமான பொருள்கள் போன்ற உள் சளிப் பரப்புகளின் மூலம் பரவலாம் என்று WHO கூறுகிறது.

அறிகுறிகள், சிகிச்சை விவரம்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை பாதிப்பு காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் ஆரம்பிக்கிறது. நிணநீர் கணுக்களை வீங்கச் செய்கிறது. இந்த பாதிப்பு, பெரியம்மை நோயில் ஏற்படாது.

குறிப்பாக சிக்கன் பாக்ஸ், தட்டம்மை, பாக்டீரியா தோல் தொற்றுகள், சிரங்கு, சிபிலிஸ், மருந்து சம்பந்தப்பட்ட ஒவ்வாமைகளுடன் குரங்கு அம்மையை குழப்பாமல் இருப்பது முக்கியம் என்று WHO சுட்டிக்காட்டுகிறது.

குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டு அதன் அறிகுறிகள் குறைந்தது 7 முதல் 14 நாள்களுக்குள் தெரிந்துவிடும். சில சமயங்களில் 5-21 நாட்கள் வரை இருக்கலாம்.

பொதுவாக காய்ச்சல் ஏற்பட்டு 3 நாள்களுக்குள் முகத்தில் ரேஷ் ஏற்பட்டு மற்ற உடல் பகுதிகளுக்கும் பரவ தொடங்கிடும். தோல் வெடிப்பு நிலை 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். இது, புண்களை ஆழமாக்கி சீழ் ஏற்படுத்தி, ஸ்கேப்ஸ் அல்லது கரஸ்ட் உருவாக்கி அதிக வலியை தருகிறது.

குரங்கு அம்மை நோய் காரணமாக இறக்கும் நோயாளிகளின் விகிதம் 0 முதல் 11% வரை வேறுபடுகிறது. சிறு குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது.

குரங்கு அம்மைக்கு இதுவரை முறையான சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சைகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் விழிப்புணர்வு அவசியம் என கூறப்படுகிறது.

நோய் பாதிப்பு

1958 இல் குரங்கு அம்மை நோய் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த காலனி குரங்குகளிடம் 2 முறை அம்மை நோய் கண்டறியப்பட்டதையடுத்து உறுதி செய்யப்பட்டது.

1970 ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் பெரியம்மை நோயை அழிப்பதற்கான முயற்சியில், முதன்முதலாக மனிதனுக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 15 நாடுகளில் இதுவரை மனிதர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தியுள்ளன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காபோன், கேமரூன், நைஜீரியா, கோட் டி ஐவரி, லைபீரியா மற்றும் சியரா லியோன் போன்றவற்றில் அதிகளவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தென் சூடான், ஆப்பிரிக்காவில் பெனின், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: United kingdom have confirmed a case of monkeypox