17 ஓ.பி.சி. இனத்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்த்த உ.பி. மாநில அரசு... எதனால் இந்த முடிவு எட்டப்பட்டது?

இந்த 17 பிரிவை சேர்ந்த மக்கள் பட்டியல் இனத்திற்கு மாற்றப்பட்டால் இவர்கள் பட்டியல் இனத்தவர்களுக்கான சலுகையினை சிரமமின்றி பெறுவர்.

Lalmani Verma

UP state government added 17 OBC groups to SC list : இதர பிற்படுத்தோர் பட்டியலில் இருந்த 17 சாதியினரை பட்டியல் இனத்தில் சேர்த்து கடந்த வெள்ளிக்கிழமை உத்திரவிட்டுள்ளது உத்திரப்பிரதேச மாநில அரசு. மாநில அரசின் இந்த முடிவை கடுமையாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சாடியுள்ளார். ஆனால் கடந்த காலங்களில் இந்த 17 சாதியினரை பட்டியல் இனத்தில் சேர்க்க முந்தைய அரசு நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த பிரிவினர் எஸ்.சி. பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்?

ஜூன் 24ம் தேதி உ.பி. சமூகநலத்துறையில் இருந்து அனைத்து மாவட்ட நிதீபதிகளுக்கும், டிவிசனல் கமிஷ்னர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் 2017ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட உத்திரவின் அடிப்படையில், 17 ஒ.பி.சி இனக்குழுவினருக்கும் எஸ்.சி. சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த கடிதம் மேலும் கூடுதல் தலைமைச் செயலாளர், ஓ.பி.சி. நலத்துறைக்கும் அனுப்பப்பட்டு, அலகாபாத் நீதிமன்ற உத்தரவினை பின்பற்றக் கோரி அனுப்பப்பட்டுள்ளது. கஹார் (Kahaar), கேஷ்யாப் (Kashyap), கேவத் (Kevat), மல்லாஹ் (Mallah), நிஷாத் (Nishad), கும்ஹார் (Kumhar), ப்ரஜபதி(Prajapati), திவார்(Dhivar), பிந்த்(Bind), பார்(Bhar), ராஜ்பார்(Rajbhar), திமார் (Dhimar), துர்ஹா(Turha), கொடியா (Godia) , மாஜி (Maajhi), பதம் (Batham) மற்றும் மச்சுவா (Machhua) இனத்தவர்களை பட்டியல் இனத்தில் இணைத்துள்ளது.

யோகி ஆதித்யநாத் ஆட்சி பெறுப்பேற்றுக் கொண்ட சில நாட்களிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் கூட இதனை நடைமுறைப்படுத்த 27 மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இந்த கால தாமதத்திற்கு தேர்தலை காரணமாக சொல்கிறது உபி அரசு. 2017ம் ஆண்டே இந்த உத்தரவை பிறப்பித்திருந்தால், இதர மாநிலங்களில் இருக்கும் பல்வேறு பிரிவினர் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க கூறி கேட்டிருந்தார்ப்பார்கள். 2019ம் ஆண்டு தேர்தலுக்காக காத்திருந்ததாக இந்த தரப்பு தெரிவிக்கிறது.

அரசியல் ரீதியில் ஏன் இது முக்கியத்துவம் பெறுகின்றது?

உத்திரப்பிரதேசத்தின் பிற்போக்கு இனத்தவர்களுக்கான நலத்துறை அறிவிப்பின் படி இந்த 17 சாதியினர் உத்திரப்பிரதேசத்தின் மக்கள் தொகையில் 15% ஆவர். பட்டியல் இனத்தவர்கள் பிற்போக்கு இனத்தவர்களைவிட அதிகமாக இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைகின்றனர். இங்கு பிற்போக்கு இனத்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகமாகவே இருக்கிறது. இந்த 17 பிரிவை சேர்ந்த மக்களின் வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படும் பொருட்டு பட்டியல் இனத்தவர்களுக்கு மாற்றப்பட்டால் இவர்கள் பட்டியல் இனத்தவர்களுக்கான சலுகையினை பெறுவர். அதே போன்று இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டினை மற்றவர்கள் சிரமமின்றி பெறுவதற்கு வழிவகை செய்யும்.

மேலும் படிக்க : யோகி குறித்த முகநூல் பதிவு : கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை உடனே விடுவிக்க உத்தரவு

2003 – 2007 முலாயம் சிங் யாதவ் ஆட்சியிலும், 2012 – 2017 அகிலேஷ் யாதவ் ஆட்சியிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இந்த கட்சிக்கான வாக்குவங்கியை மட்டுமே அதிகப்படுத்தியது. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இடஒதுக்கீட்டிற்கான போட்டியாளர்கள் குறைவான காரணத்தால் யாதவ மக்கள் இதனை வரவேற்றனர். ஆனால் பட்டியல் இனத்தவர்களுக்கோ இது சாதகமான திட்டமாக தோன்றவில்லை என்ற குறை இருந்து வந்தது.

பாஜகவின் இந்த முடிவு பட்டியல் இனத்தை சேர்ந்த வாக்காளர்களின் கவனத்தை பகுஜன் சமாஜ் கட்சிக்கு திருப்பிவிட்டது என்று தான் கூறவேண்டும்.  இந்த 17 இனத்தவர்களும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றார்கள். சிலர் கிராமங்களில் சிறு சிறு வேலைகள் செய்து வாழ்ந்து வருகின்றனர். நிஷாத் இனத்தவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். கும்ஹார்கள் பானைகள் செய்து வருகின்றனர். யாதவ மக்களை சமாஜ்வாடி கட்சியில் இருந்து பாஜகவால் திருப்ப இயலாத தருணத்தில் இந்த 17 இனத்தவர்களின் வாக்குகள் பாஜகவிற்கு மிக முக்கியமானதாகும். உத்திரப்பிரதேசத்தில் பாஜக நிலைத்து நிற்க 2014 மற்றும் 2019 தேர்தலில் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

2005 ஆண்டு ஆட்சியில் முலாயம் சிங் இந்த 17 இனத்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அலஹாபாத் நீதிமன்றம், இது இந்தியாவின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது, இது போன்ற முடிவுகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலின் பெயரில் தான் செய்ய இயலும் என்று கூறி தடுத்துவிட்டது. முலாயம் சிங் யாதவ் 17 ஒ.பி.சி இனத்தவர்களுக்கான எஸ்.சி. ஜாதி சான்றிதழை வழங்க உத்தரவிட்டார். ஆனால் மத்திய அரசு இந்த உத்தரவினை ஏற்றுக் கொள்ளவில்லை.

அகிலேஷ் யாதவ் மீண்டும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2013ல் சட்டமன்றத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் மீண்டும் மத்திய அரசு மறுத்துவிட்டது. அதே ஆண்டில் சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2016ம் ஆண்டு, டிசம்பர் 22ம் தேதி மீண்டும் ஒரு முறை அகிலேஷ் யாதவ் இதற்கான முயற்சிகள் மேற்கொண்டார். SC-ST Research and Training Institute மூலமாக ஒரு சர்வே மேற்கொண்டு, மத்திய அரசிடம் முறையாக ஆனால் புதிய வேண்டுகோள் ஒன்றை விடுத்தனர். அதில் பட்டியல் இனத்தவர்களைப் போல் தான் இந்த 17 இனத்தவர்களும் என்ற வாதத்தை முன்வைத்தனர். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துவிட்டது.

ஓ.பி.சிக்கும் எஸ்.சிக்கும் என்ன வேறுபாடு ?

இரு தரப்பினருக்கும் சமூக, கல்வி, பொருளாதார பின்னடைவு என்பது மிகவும் பொதுவானது. ஆனால் இரண்டும் வேறுபாடுகள் உள்ளன. தீண்டாமைக்குள் வதைபட்டவர்கள் என்ற காரணம் எஸ்.சி. இனத்தவரை வேறுபடுத்திக்காட்டுகின்றது.

ஓ.பி.சி. இனத்தவர்கள் சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக பின்னடைந்திருந்தாலும் அரசியல் பிரதிநிதிகளாக மிகவும் குறைவான தலைவர்களே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தீண்டாமை எனும் வரலாற்று தவற்றினை சரி செய்வதற்காகவே எஸ்.சி. பிரிவினருக்கு பல்வேறு தரப்பில் இருந்து சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாராளுமன்றத்தில் இதனை ஒரு மசோதாவாக, பட்டியல் இனத்தோருக்கான தேசிய நலவாரியம் முன்வைக்கின்றதோ அதன் அடிப்படையில் மட்டுமே மாற்றங்கள் கொண்டு வர இயலும். பட்டியல் இனத்தவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யும் இந்திய அரசியல் சாசனம் 341 (1) மற்றும் 341(2)-ல் மாற்றங்களை கொண்டு வர குடியரசுத் தலைவரால் மட்டுமே இயலும் என்று வரைமுறை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்திய அரசியல் சாசனம் 342க்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close