ரஷ்ய படையெடுப்பால் வெளியேறும் உக்ரைன் அகதிகளுக்கான உதவியை, அமெரிக்கா விரிவுப்படுத்தியுள்ளது. சுமார் 1 லட்சம் உக்ரைன் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து வெளியேறிய மக்களுக்கு கைகொடுத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான ஆதரவையும் அதிகரிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.
சுமார் 3.6 மில்லியன் மக்கள உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆனால், பல தசாப்தங்களுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கையை விட இது குறைவாகும்.
அமெரிக்கா அறிவிப்பு என்ன?
ஐரோப்பிய நட்பு நாடுகளைச் சந்திப்பதற்காக பிரஸ்ஸல்ஸில் இருந்த அதிபர் ஜோ பைடன், உக்ரைனில் இருந்து வரும் ஒரு லட்சம் அகதிகளை அமெரிக்கா வரவேற்கும் என்றும், உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு, 1 பில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்
உக்ரைனிலிருந்து வெளியேறிய மில்லியன் கணக்கான மக்களில் பெரும்பாலானோர் போலந்து, மால்டோவா, ரோமானியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எனவே, அந்த நாடுகளுக்கு அமெரிக்காவின் நிதியுதவி பெரும் உதவியாக இருக்கும்.
பைடன் கூறுகையில், “இது போலந்து அல்லது ருமேனியா அல்லது ஜெர்மனி நாடுகள் தாங்களாகவே சமாளிக்க வேண்டியது அல்ல. இது ஒரு சர்வதேச பொறுப்பு” என்றார். அவர், ஐரோப்பிய பயணத்தில் அகதிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு அமெரிக்கா அடைக்கலம் தரும் என்று வெள்ளை மாளிகை பல வாரங்களாக கூறி வரும் நிலையில், பெரும்பாலானவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அல்லது கிழக்கு ஐரோப்பாவைச் சுற்றியுள்ள தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க விரும்புகிறார்கள். அங்கு இருந்தால், நிலைமை சீரானதும் வீட்டுக்கு செல்லலாம் என கருதுகிறார்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதலில் வரும் உக்ரைன் அகதிகள் யார், எங்கு செல்வார்கள்
அமெரிக்காவில் குடும்பத்தினர் இருப்பவர்கள் முதலில் அகதிகளாக உக்ரைனில் இருந்து வருவார்கள் என பைடன் செய்தி மாநாட்டில் கூறினார்.
அகதிகளை மீட்கும் அமெரிக்காவின் முயற்சியானது, குறிப்பாக ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அதீத கவனம் செலுத்தப்படும்.
அகதிகளாக அமெரிக்காவுக்குள் வர எவ்வித காலக்கெடுவும் விதிக்கவில்லை. இது ஒரு நீண்ட செயல்முறை என கூறும் அதிகாரிகள், 1 லட்சம் பேரும் இந்தாண்டே வர வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றார்.
பெரும்பாலான அகதிகள் ஏற்கனவே உக்ரைனியர்கள் அதிக அளவில் வசிக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகர பகுதி, பென்சில்வேனியா, சிகாகோ மற்றும் வடக்கு கலிபோர்னியா போன்ற பகுதிகளில் குடியேறுவார்கள் என தெரிகிறது.
அகதிகள் எண்ணிக்கையில் இது பெருசா?
இது வரலாற்றுத் தரவுகளின்படி பெரியது இல்லை.1980ல் மட்டும் 200,000க்கும் அதிகமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.அதில் பெரும்பாலானோர் தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அதே போல், வெளியுறவுத்துறை புள்ளிவிவரங்களின்படி. 1975-1981 க்கு இடையில் ஏற்றுக்கொண்ட அகதிகள் எண்ணிக்கை 7 லட்சத்து 35 ஆயிரம் என சொல்லப்படுகிறது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படை வெளியேறியதும், அங்கிருந்து அகதிகளாக வந்த 76 ஆயிரம் ஆப்கானியர்களை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. இதில் ஏராளமான முன்னாள் ராணுவ மொழிபெயர்ப்பாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் உள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்துடன் கலந்தாலோசித்த நிர்வாகம், 2022 பட்ஜெட் ஆண்டில் அகதிகளின் வரம்பாக 1 லட்சத்து 25 ஆயிரத்தை நிர்ணயித்திருந்தது. அந்த எண்ணிக்கையில், வெளியேற்றப்பட்ட ஆப்கானியர்கள் கிடையாது.
உக்ரைனியர்கள் பலர் மனிதாபிமான அடிப்படையில் கொஞ்சம் நாளும் அல்லது குடும்ப மறுஒருங்கிணைப்புக்காக அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படலாம் என்பதால், அகதிகள் எண்ணிக்கை வரம்பை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என நிர்வாகம் தெரிவித்தது.
ரியாக்ஷன் என்ன?
ரஷ்ய படையெடுப்பை தொடங்கியதும், அகதிகள் வரவேற்கும் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அகதிகள் வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஏனெனில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வேலைத்திட்டக் குறைப்புக்கள் காரணமாக அகதிகள் மீள்குடியேற்ற முகமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் அகதிகள் சேர்க்கை உச்சவரம்பை 15,000 ஆகக் குறைத்தது.
இந்நிலையில், ஜோ பைடனின் அறிவிப்பை அகதிகள் வழக்கறிஞர்கள் வரவேற்றனர். அமெரிக்காவின் பிரதிநிதி பில் பாஸ்க்ரெல் கூறுகையில், இன்று வரை, , உக்ரைன் அகதிகளை நம்நாடு ஏற்றுக்கொள்ளும் விகிதத்தில் அவசரம் என்பது இல்லாமல் இருந்தது.
ஆனால், பைடனின் 1 லட்சம் அகதிகள் வரவேற்கும் உத்தரவு, இருண்ட தருணத்திற்கு அவசியமான அவசரத்தைக் கொண்டுள்ளது. என்றார்.
உக்ரைன் அகதிகளை வரவேற்பதில் பொதுமக்கள் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.அசோசியேட்டட் பிரஸ்-NORC மையத்தின் கருத்துக்கணிப்பின்படி, சுமார் 82 சதவீதம் அமெரிக்கர்கள், உக்ரைன் மக்களை வரவேற்க தயாராக உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil