கடந்த வாரம், அமெரிக்கா தனது கிரீன் கார்டு கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது. தனது கிரீன் கார்டு கொள்கையில் உள்ள "பப்ளிக் சார்ஜ்” என்ற வார்த்தையின் அர்த்தத்தை விரிவாக்கம் செய்துள்ளது. வரும் அக்டோபர் 15 ஆம் தேதியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வரவிருக்கும் இந்த புதிய விதியால், அமெரிக்காவிற்கு சட்டப்பூர்வ குடியேறும் சதவீதத்தை வெகுவாகக் குறைக்கக்கூடும்.
கடந்த காலங்களில் அமெரிக்க காங்கிரசில் சட்ட விரோத குடியேற்றங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டத்தை நிறைவேற்ற பல வகைகளில் முயற்சி செய்தது டிரம்ப் நிர்வாகம். காங்கிரசில் ஒருமித்தக் கருத்து இல்லததால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. எனவே, இந்த முறை தனது நிர்வாக நடவடிக்கையின் மூலமே இந்த புதிய விதியை அமல்படுத்த டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'பப்ளிக் சார்ஜ்' என்பதை அமெரிக்கா எவ்வாறு வரையறுக்கிறது
தனது வாழ்வாதாரத்திற்காக அரசாங்கத்தை முதன்மையாக சார்ந்து இருக்கக் கூடியவர் என்று ஒருவரைத் தீர்மானித்துவிட்டால், அவர் அந்த நாட்டில் வாழ தகுதியற்றவர் என்பதேயே "பப்ளிக் சார்ஜ்" வரைமுறைப்படுத்துகிறது.
உதாரணமாக, அமெரிக்காவில் செயல் படுத்தப்படும் துணை பாதுகாப்பு வருமானத் திட்டம், தேவைப்படும் குடும்பங்களுக்கான தற்காலிக பண உதவி திட்டம், மாநில மற்றும் உள்ளூர் பொது உதவி திட்டம், மற்றும் நீண்டகால மருத்துவ பராமரிப்பு திட்டங்களில் பயனர்களாக இருந்தால் அவர்கள் "பப்ளிக் சார்ஜ்" வரையறையில் சேர்க்கப்படுவார்கள்.
இருந்தாலும், பணமற்ற சலுகைகளாகக் கருதப்படும்-பொதுப் பள்ளிகள், குழந்தை பராமரிப்பு சேவைகள், மருத்துவ உதவி (நீண்ட கால அல்லாதவை), தடுப்பூசிகளுக்கான பொது உதவி, அவசர மருத்துவ சேவைகள், குழந்தைகள் சுகாதார காப்பீட்டு திட்டம் (சிஐபி), ஊட்டச்சத்து போன்றவற்றில் பயனர்களாக இருந்தால் அவர் "பப்ளிக் சார்ஜ்" என்ற வரையறையில் சேர்க்கப்படமாட்டார்கள்.
புலம்பெயர்ந்தவர் ‘பப்ளிக் சார்ஜ்’ ஆகும்போது ஏற்படும் விளைவுகள் :
தற்போதைய நடைமுறையின் படி அமெரிக்க யு.எஸ்.சி.ஐ.எஸ் குடிவரவு அதிகாரிகள் - தனக்கு வந்த கிரீன் கார்டு விண்ணப்பத்தை ஆய்வு செய்த பின் "இந்த, விண்ணப்பதாரர் தனது வாழ்வாதாரத்திற்க்கு அரசாங்கத்தை முதன்மையாக சார்ந்து இருக்கக்கூடும்" என்ற முடிவுக்கு வந்தால் அவரது விண்ணப்பதை ‘பப்ளிக் சார்ஜ்’ லிஸ்டில் சேர்த்து விடுவர்.
வயது, உடல் ஆரோக்கியம், நிதி நிலை, கல்வி மற்றும் தனித் திறன்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டே இந்த வகையான முடிவு எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விதி இந்த நடைமுறையில் என்ன மாற்றவிருக்கிறது :
புதிய விதி "பப்ளிக் சார்ஜ்" என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அகலப்படுதியுள்ளது. "பப்ளிக் சார்ஜ்" பட்டியலில் அதிகமான நலத்திட்டங்கள் சேர்க்கப்பட்டதுடன், குடும்பம் மற்றும் தனிநபர் பப்ளிக் சார்ஜ் வருமான அளவுகோல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் செய்துள்ளது .
இதனால் வரும் தாக்கம்:
ஏழை நாட்டிலிருந்து அமெர்க்காவில் குடிபுகுந்து கிரீன் கார்டு வாங்க நினைக்கும் மக்களையே இந்த திட்டம் பெரிதும் தாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, இந்த நாட்டில் சட்டபூர்வ குடியேறியவர்கள் கிரீன் கார்டு வாங்க முடியாது என்ற காரணத்தால், இனி அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்கே அச்சப்படுவார்கள். இதனால், அந்நாடு மனித வளம் மேம்பாட்டில் பெரும் பின்னடைவை காலப்போக்கில் ஏற்படும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர்.