Covid 19 Mask Tamil News: கோவிட்19- பரவுதலைத் தொடர்ந்து தற்போது ஆறு மாத கால லாக்டவுனை நிறைவு செய்திருக்கிறோம். வினோதமான இரவு ஊரடங்கு உத்தரவு, அரசு அனுமதித்த உகாலோ (Ukalo) விநியோகம், கோவிட்-சரிபார்க்கும் செயலிகள் மற்றும் நோயை குணப்படுத்தும் என்ற ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மீதான குருட்டு நம்பிக்கை என அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன. தொடர்ந்து வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் இந்த நோய்த்தொற்று அழித்து வருகிறது. தனிமைப்படுத்துதல் மற்றும் உரியச் சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமானவை என்றாலும், இந்த தாமதமான கட்டத்தில் நோய்த்தொற்று நாடு முழுவதும் பரவியிருக்கும் போது, பரவலைத் தணிக்க உதவும் இரண்டு முக்கியமான மற்றும் எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் குறைந்து வருவதாகத் தெரிகிறது. அவைதான் மாஸ்க் மற்றும் கைகளைச் சுத்தமாகக் கழுவும் பழக்கம்.
கடந்த மாதம், உள்ளூர் சந்தையில் ஷாப்பிங் செய்யும் போது சக மக்கள் எவ்வாறு மாஸ்க் அணிந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நாடு முழுவதிலிருந்தும் மருத்துவ மாணவ தன்னார்வலர்களின் நெட்வொர்க் களப்பணியில் ஈடுபட்டன. ஒன்பது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 19 நகரங்களில் 30 உள்ளூர் சந்தைகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சரியாக மாஸ்க் அணிந்திருக்கிறார்களா இல்லையா என்பதில் அவர்கள் பெரியளவு மாறுபாட்டைக் கண்டனர். கவனிக்கப்பட்ட 4,500 பேரில், கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் மாஸ்க் அணியவில்லை. மீதி இருப்பவர்களில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு முதல் அரை சதவிகிதம் பேர் வரை அவற்றைச் சரியாக அணியவில்லை. இதன் விளைவாக, 4,548 பேரில் கிட்டத்தட்ட 2,528 பேர் (பாதிக்கும் மேற்பட்டவர்கள்) சரியாக மாஸ்க் அணியவில்லை. இதுபற்றி நாம் ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டும்.
ஏன் மாஸ்க்?
தொற்றுநோய் பரவுதலின் சில மாதங்களில், அம்மை அல்லது எபோலா போன்ற எளிதில் பரவும் ஓர் வைரஸை நாம் கையாண்டுகொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. கோவிட்-19 பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபரால் பரவுகிறது. அறிகுறி அல்லது அறிகுறியற்றதாக இருந்தாலும், அவர்கள் பேசும்போது, இருமல், தும்மல் அல்லது ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது கூட பரவுகிறது. இனோகுலம் (டோஸ்) ஓர் முக்கிய பகுதியை வகிக்கிறது என்பதையும் நாம் அறிவோம்: பாதிக்கப்பட்ட நபர் எத்தனை வைரஸ் துகள்களைக் காற்றோடு கலக்கிறார், அதைவிட, அந்த துகள்களில் எத்தனை நாம் உள்ளிழுக்கிறோம் என்பது முக்கியம். நிச்சயமாக, வயது மற்றும் அடிப்படை ஆரோக்கியம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான திறனைப் பெரிதும் பாதிக்கும்: பெரும்பான்மையான இந்தியர்கள் 20 வயதிற்குப்பட்டவர்கள். மில்லியன் கணக்கான இளைஞர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை என்றாலும், அவர்கள் அதனை மற்றவர்களுக்குத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் பத்திரிகையில் வெளியான சமீபத்திய கட்டுரை ஒன்றில், மாஸ்க் அணிந்து இனோகுலத்தை குறைப்பதன் மூலம் அறிகுறியற்ற தொற்றுநோய்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பின்னர் அது நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்தியாவில் இருக்கும் நாம் நிச்சயம் இதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஷிதலாதேவியின் கதை, கட்டுக்கதை அல்ல. பல நூற்றாண்டுகளாக, இந்தியாவில் “டிக்கா” நடைமுறையில் இருந்தது. அதாவது, பெரியம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கொப்புளங்களிலிருந்து (பாய்ல்ஸ்) எடுக்கப்பட்ட சிறியளவு fluid-ஐ, ஆரோக்கியமான நபருக்குச் செலுத்தப்பட்டது. இது அவர்களுக்கு லேசான தொற்றுநோயைத் தூண்டும், அதன் விளைவாக, நோய் எதிர்ப்பு சக்தி வரக்கூடும்!
பாதுகாப்பற்ற குடும்ப உறுப்பினர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் அல்லது சக ஊழியர்கள், ஏன் நோய்த்தொற்று ஏற்பட்டு நோய்வாய்ப்படக்கூடும் என்பதை டோஸ் மாற்றியமைத்த வெளிப்பாடு விளக்குகிறது. நியூயார்க் நகரில் சுகாதார வழங்குநர்களின் ஆரம்ப எண்ணிக்கையைத் தொடர்ந்து, அருகிலுள்ள போஸ்டனைப் போலவே, அமெரிக்காவின் பிற நகரங்களும், எழுச்சிக்குத் தயாரான நேரத்தைக் கொண்டிருந்தன. மருத்துவர்கள், அவர்களின் பணியில் போதுமான அளவு பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை மட்டுமல்லாமல், பொதுமக்கள் எல்லா நேரங்களிலும் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்த அவர்களுக்கு அப்போது நேரம் இருந்தது.
மாஸ்க் எப்படி அணிவது?
எந்த வகையான மாஸ்க்கை பயன்படுத்தவேண்டும் என்பது குறித்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. இது ராக்கெட் அறிவியல் அல்ல: இதன் முதல் குறிக்கோள், வைரஸை சுவாசிப்பதைத் தடுப்பது. அதாவது, நேரடியாக வைரஸை உள்ளிழுப்பதை நீக்குவது, வைரஸ் தோற்று உள்ள கைகளால் நம் முகத்தில் வைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் குறைப்பது போன்ற செயல்கள். இரண்டாவது மற்றும் மிக முக்கியமான செயல் என்னவென்றால், பாதிக்கப்பட்ட நபர்கள் சுவாசிக்கும்போது நோய்த்தொற்றை மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பது.
பக்கவாட்டில் எந்த இடைவெளியும் இல்லாமல் முகத்தில் சரியாகப் பொருந்தக்கூடிய சர்ஜிக்கல் மாஸ்க் மிகவும் சிறந்தது. N95 சுவாசக் கருவியும் மிகச் சிறந்தது. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதனை எப்போதும் அணியச் சாத்தியமில்லை. அனைத்து செவிலியர்-நோயாளி அல்லது மருத்துவர்-நோயாளிகளுக்கும் N95 மாஸ்க் அவசியம். கண்ணாடி அல்லது கண் கவசம் போன்றவற்றை அணிந்து முகத்தோடு சேர்த்து கண்களையும் பாதுகாப்பது முக்கியம். மாஸ்க்கை அடிக்கடி கன்னத்தில் வைப்பது மிக மோசமான செயல். ஏனெனில், உங்கள் மாஸ்க் திறம்பட வடிகட்டாமல் இருக்குமானால், அதன்மேல் இருக்கும் வைரஸை நீங்கள் சுவாசிக்கக்கூடும். அதற்குப் பதிலாக மாஸ்க்கை முழுவதுமாக அகற்றி, கொக்கி மீது தொங்கவிடுவது அல்லது அதனை முழுவதுமாக அகற்றி முகத்திற்கு வெளியே கீழே வைப்பது சிறந்தது.
நாம் ஏன் மாஸ்க் அணியவில்லை?
நாட்டில் எதுவும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதால் எல்லோரும் சோர்வடைகிறார்கள். போலி அறிவியலின் ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்: "எதுவுமே இல்லாததற்கு ஏதாவது இருப்பது சிறந்தது" என்ற அணுகுமுறை ஒரு நல்ல வாழ்க்கை தத்துவமாக இருக்கலாம் ஆனால், முழுமையடையாத பொதுச் சுகாதார சோதனை-தரவு, பரிமாற்ற இயக்கவியல் பற்றிய மோசமான புரிதல், கடுமையான தனிமைப்படுத்தும் உத்திகள் ஆகியவற்றின் அடிப்படையிலான கணிப்பு மாதிரிகள் மற்றும் முழுமையடையாத செயலிகள் போன்றவற்றிற்கு வழிவகுத்துள்ளது. இத்தனை முயற்சிகள் எடுத்தபிறகு, பொதுச் சுகாதார அதிகாரிகள் மிக முக்கியமான பதிலாகக் கூறுவது - 'நம்பிக்கை'யை மட்டுமே.
எப்படி இருந்தாலும், அரசைக் குறை கூறுவது தனிப்பட்ட பொறுப்பிலிருந்து நம்மை விடுவிக்கப்போகிறதில்லை. உள்நாட்டு உதவியாளர்களின் வருகைக்காகப் பொறுமையின்றி காத்திருந்த எத்தனை நடுத்தர வர்க்க இந்தியக் குடும்பங்கள், அவர்களின் உதவியாளர்களுக்குக் கூடுதல் மாஸ்க், சானிடைசர் அல்லது தங்கள் ஊழியர்களின் குடும்பங்களுக்குச் சோப்பு வழங்க முயற்சி செய்தனர்? இவை அனைத்தும் நம் வீட்டுத் தொழிலாளர்கள் பெரும் மிகக் குறைந்த ஊதியத்தில் தடைசெய்யப்பட்டவை. கல்வியறிவற்ற மக்கள் மீது இந்தியாவின் துயரங்களை ஏற்றிவைப்பது எப்போதும் எளிதானது. ஆனால் கோவிட் -19 உள்ளூர் சேரிகளிலோ அல்லது சிறு கிராமத்திலோ தோன்றவில்லை. விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வந்தது. பிறகு, நகரங்கள் வழியாக இந்தியா முழுவதும் பரவியது.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகம் கொண்டிருக்கும் இந்தியாவில் மாஸ்க்குகளை அணிவது எளிதானது அல்ல. அதிகப்படியான மக்கள்தொகை மற்றும் ஏழை தேசத்தின் அடக்குமுறை வாழ்க்கையின் யதார்த்தங்கள் இருந்தபோதிலும், வீட்டிலேயே எளிமையான மாஸ்க்குகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பகிர்ந்து, அவை ஏன் முக்கியமானவை என்பதை வலுப்படுத்துவதற்கு ஓர் சிந்தனைமிக்க வெகுஜன ஊடக பிரச்சாரம் மிகவும் அவசியம்.
இப்பொழுது என்ன அவசியம்?
அறிவுரைகள் எதுவும் முற்றிலும் நியாயப்படுத்தப்படவில்லை - சில நேரங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க நாடகங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், பொது மக்கள் நம்பிக்கையை இழந்தபிறகு, இப்போது வெறும் மாஸ்க் அணியச் சொல்வது அர்த்தமற்றதாக மாறிவிட்டது. இருப்பினும், பொதுச் சுகாதாரத்தின் மிகப்பெரிய வெற்றிகள் அதன் தாழ்மையான தோற்றங்களையே கொண்டுள்ளன. லண்டனில் சுகாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் 19-ம் நூற்றாண்டில் நீண்டகால ஆயுட்காலத்தை ஏற்படுத்தின. 20-ம் நூற்றாண்டில், பங்களாதேஷின் காலரா முகாம்களில், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு டீ-ஸ்பூன் சர்க்கரையை ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து உட்கொண்டது, மரண நோய் காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குறைந்த செலவில் மீண்டும் உயிர்ப்பிக்க வைத்தது. ஒற்றை சேனல் தூர்தர்ஷன் சகாப்தத்தில் வளர்ந்தவர்களுக்கு, பெண்கள் பக்கத்துக்கு வீடுகளுக்குச் சென்று மறுசீரமைப்பு தீர்வுகளை எவ்வாறு செய்வது என்று பகிரும் தொலைக்காட்சி பிரச்சாரங்கள் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். இந்த எளிமையான செயல்முறை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சையாகத் தொடர்கிறது. உட்கொண்ட குளுக்கோஸ் மற்றும் சோடியத்தின் சரியான செறிவு குடலில் உள்ள குறிப்பிட்ட செல்களின் நீரை உறிஞ்சுவதற்குத் தூண்டுகிறது என்பதை உறுதிசெய்கிறது. மேலும், விப்ரியோ காலரா பாக்டீரியாவினால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நீர் இழப்புகளையும் சரிசெய்கிறது.
வீட்டிலேயே தங்குவதற்கும், வேலைகளைக் கைவிடுவதற்கும், செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கும் மக்களை அணுகிய தலைவர்களின் அணிவகுப்பு மீண்டும் நடைபெறவேண்டும். நாம் தற்போது இருக்கும் நிலையை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். தடுப்பூசி வரும் வரை ஒரே ஒரு சிறந்த வழி எது என்பதை விளக்க வேண்டும். சமூக விலகலைத் தொடர வேண்டும் (ஆடம்பரங்களை வாங்கக்கூடிய சிலருக்கு) மற்றும் அனைவருக்கும் மாஸ்க் மற்றும் கை கழுவுதல் பற்றிய புரிதலைத் தெரிவிக்கவேண்டும். இணக்கத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி காவல்துறை கட்டுப்பாடு அல்ல; மாஸ்க் உபயோகத்தை விதிமுறையாக மாற்றுவதற்கும், அனைத்து சமூகத்தினரால் ஏற்றுக்கொள்வதாக மாற்றுவதற்கும் மக்களை உற்சாகப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். சோப்பு மற்றும் சிறந்த மாஸ்க்குகளின் பரவலான விநியோகம் மருந்துகளை விநியோகிப்பதை விட அதிவேகமான நன்மை பயக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.