Uttar Pradesh Ashfaqullah Khan Park : உத்திரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் அமைந்திருக்கும் 121 ஏக்கர் உயிரியல் பூங்காவை மேம்படுத்த அம்மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ. 234 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த உயிரியல் பூங்காவிற்கு புரட்சியாளர் ஷாஹீத் அஷ்ஃபகுல்லா கானின் பெயரை சூட்டவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யார் இந்த கான்? கான் ஒரு சுதந்திர போராட்ட வீரர், ராம் பிரசாத் பிஸ்மில்லுடன் அவர், காக்கோரி ரயில் கொள்ளை சம்பவத்தில் தூக்கிலிடப்பட்டார்.
அக்டோபர் மாதம் 22ம் தேதி, 1900 ஆண்டில், ஷாஜகான்பூரில் பிறந்தார் அஷ்ஃபகுல்லா கான். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் உச்சத்தில் இருந்த போது இதனை பார்த்து வளர்ந்தவர் ஷாஹீத். ஆங்கில அரசுக்கு வரி கட்ட மறுத்து ஒத்துழையாமை இயக்கம் துவங்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில், பிப்ரவரி மாதம் 1922ம் ஆண்டு சௌரி சௌரா என்ற நிகழ்வு கோரக்பூரில் நிகழ்ந்தது. இதில் போராட்டக்காரர்கள் வன்முறையை கையில் எடுத்துக் கொண்டு ஆங்கிலேயர்களின் காவல் நிலையம் மற்றும் அங்கு பணிபுரிந்த காவலர்களை தாக்க துவங்கினார்கள். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் காந்தி ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை திரும்பப் பெற்றார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
PIB-ன் செய்தி அறிக்கையின் படி, இந்த போராட்டப் பின்வாங்கலால் மிகவும் ஏமாற்றமடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கானும் ஒருவர். அதனைத் தொடர்ந்து அவர் புரட்சியாளர்களுடன் இணைந்து பிஸ்மிலின் நண்பராகினார். 2006ம் ஆண்டு வெளியான ரங் தே பஸந்தி என்ற இந்தி படத்தில் சந்திரசேகர் ஆஸாத், பகத் சிங், சிவராம் ராஜ்குரு, ராம் ப்ரசாத் பிஸ்மில் மற்றும் ஷாஹீத் அஷ்ஃபகுல்லா கான் ஆகியோர் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுப்பது குறித்து திரைப்படமாக்கப்பட்டிருக்கும். குனல் கபூர் கானாகவும், அதுல் குல்கர்னி பிஸ்மில் கதாப்பாத்திரத்திலும் நடித்திருப்பார்கள்.
1920ம் ஆண்டு கான் மற்றும் பிஸ்மில் இருவரும் இணைந்து இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரீபப்ளிக்கன் அசோசியேசன் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 1925ம் ஆண்டு இந்த அமைப்பு தி ரெவலுயூஸ்னரி (The Revolutionary) என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் இந்த அமைப்பின் முதல் நோக்கம் முறையாக ஏற்பாடு செய்யபட்ட ஆயுத புரட்சியின் மூலமாக இந்தியாவுக்கு சுதந்திரத்தை வாங்கித் தர வேண்டும் என்பது தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் சொந்த கருத்துகளை இந்நாட்டில் செயல்படுத்தும் போது தான் இந்த குடியரசு நாட்டின் கடைசி அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு குடியரசு நாட்டுக்கான அடிப்படை கொள்கைகள் அனைத்தும் தேசிய அளவில் நடைபெறும் தேர்தல் மூலமாகவும், மனிதனை மனிதனே சுரண்டி வாழும் நிலை முடியும் போது தான் உருவாகிறது.
இந்திய புரட்சியாளர்கள் தீவிரவாதிகள் இல்லை. அராஜகவாதிகளும் இல்லை. அவர்களின் எண்ணம் இந்தியா முழுவதும் பயங்கரவாதத்தை விளைவிக்க நினைப்பதில்லை. அதனால் அவர்களை அப்படியும் அழைக்க முடியாது. அவர்களின் கொள்கை தீவிரவாதமும் கிடையாது. தீவிரவாதம் மூலமாக சுதந்திரத்தைப் பெற்றுவிடலாம் என்று அவர்கள் நம்பவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மரண தண்டனை
ஷாகஹான்பூரில் இருந்து லக்னோ சென்று கொண்டிருந்த காக்கோரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் லக்னோ வங்கியில் சேமித்து வைப்பதற்காக அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 1925 ம் ஆண்டு அந்த ரயிலில் ஆயுதத் தாக்குதல் மூலமாக அந்த பணம் திருடப்பட்டுள்ளது. திட்டமிட்டு இந்த பணத்தை எச்.எஸ்.ஆர்.ஏ அமைப்பின் நிதிக்காக திருடப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் பிஸ்மில், கான் மேலும் 10 புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஒரே மாதத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஏனையோர் கைது செய்யப்பட்டனர்.
1926ம் ஆண்டு பிஸ்மில் கைது செய்யப்பட்டார். ஆனால் கான் தப்பித்து ஓடிய வண்ணம் இருந்தார். தன்னுடைய வீட்டில் இருந்து அரை மைல் தூரத்தில் அமைந்திருந்த கரும்புக்காட்டில் சில நேரம் தங்கியிருந்தார். பிறகு பிகாருக்கும், டெல்லிக்கும் சென்றார். டெல்லியில் கைது செய்யப்பட்ட அவரை ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்தனர். கொள்ளை சம்பவ வழக்கு ஒன்றரை வருடங்கள் நடைபெற்றது. 1927ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புகள் வெளியானது. அதில் பிஸ்மில், கான், ராஜேந்திர லாஹிரி, மற்றும் ரோஷன் சிங் ஆகியோருக்கு மரண தண்டனையும். இதர நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.