கேப்டன் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்தது. ஒரே நேரத்தில், ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச முடிவை கைவிட்டபோது, கமல்ஹாசன் அரசியலில் முழு வேகத்தில் முன்னே சென்று கொண்டிருக்கும் நேரத்தில் நட்சத்திர நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிக மாநிலத்தில் தனது ஆதரவு தளத்தை தொடர்ந்து பெற்று வருகிறது.
விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம்
ஒரு நடிகராக விஜயகாந்த் பி மற்றும் சி கிளாஸ் திரையரங்குகளின் ராஜா என்று அழைக்கப்பட்டார். அவருடைய திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் தோல்வியடைந்தாலும்கூட, சிறிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இருந்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். 2005ம் ஆண்டில், அவர் தனது கட்சியைத் தொடங்கியபோது இந்த ரசிகர் பட்டாளம்தான் அவருடைய பலமாக இருந்தது. குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அவருடைய பலமாக இருந்தனர். தெலுங்கு நாயுடு சமூகத்தின் மீது அவர் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருகிறார். இது மாநிலத்தில் ஒரு சிறிய ஆனால் விசுவாசமான ரசிகர் தளத்தை உருவாக்குகிறது.
2006 சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்டது. இந்த தேர்தலில் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் விஜயகாந்த் மட்டும்தான் என்றாலும் தேமுதிக கணிசமாக 8% வாக்குகளைப் பெற்றது. இது டாக்டர் ராமதாஸின் பாமக, வைகோவின் மதிமுக ஆகிய சிறிய மற்றும் பெரிய கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அதிமுக மற்றும் திமுக ஆகிய பெரிய கட்சிகள் அவரை கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
விஜயகாந்த்தின் கொள்கை
2005ம் ஆண்டில் அவர் கட்சி தொடங்கியபோது, கொள்கை இல்லை என்பதுதான் அவருயை கொள்கையாக இருந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை கருப்பு எம்.ஜி.ஆர். என்று அழைத்தனர். ஜெயலலிதா ஒருமுறை அவாரை வெறும் தூசு என்று நிராகரித்தார். விஜயகாந்த்துக்கும் ஆட்சி நிர்வாகம் குறித்து உறுதியான கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால், ஒரு ஹீரோவாக அவரது புகழ் இந்த குறைப்பாடுகளை சமாளிக்க அவருக்கு உதவியது.
தேர்தலில் தேமுதிகவின் செயல்பாடு
2006ல் 8.4% வாக்குகளைப் பெற்ற தேமுதிக, 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 10.3% வாக்குகளைப் பெற்றது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 7.9% வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அதன்பிறகு, தேமுதிக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 5.1% வாக்குகளையும் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் மற்றும் தலித் கட்சிகளின் மூன்றாவது அணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக 2.4% வாக்குகளைப் பெற்றது. இந்த தேர்தலில் தேமுதிக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
விஜயகாந்த்தின் உடல்நலப் பிரச்சினைகள் தேமுதிகவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக, அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது சகோதரர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான கட்சி கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டாலும் கூட அவர் பொதுக்கூட்டங்களில் உரையாற்ற முடியவில்லை.
தேமுதிகவின் ஆதரவு தளம் வீழ்ச்சியால் அக்கட்சி கேட்ட குறைந்தபட்சம் 25 சீட்டுகளை அதிமுக அளிக்காததால் உடன்பாடு எட்டப்படவில்லை.
அடுத்து என்ன?
தேமுதிகவில் பிரேமலதா மற்றும் சுதீஷ் தவிர, விஜயகாந்தின் இரண்டு மகன்களில் ஒருவரான விஜய பிரபாகரன் இப்போது அரசியலில் நுழைந்துள்ளார். விஜயகாந்தால் ஒரு முழுமையான மறுபிரவேசம் செய்ய முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், பிரேமலதா, தீர்க்கமானவராகவும், நல்ல பேச்சாளராகவும் காணப்படுவதால், தொண்டர்களின் நம்பிக்கையை தக்க வைக்கிறார்.
சசிகலா சிறையில் இருந்து விடுதலையானதும், அதிமுக தலைவர்கள் அவரை ஒரு குற்றவாளியாகக் காட்டியதும் பிர்மேலதாவின் எதிர்வினை குறித்து தேமுதிகவினர் பேசுகிறார்கள். அப்போது அதிமுக கூட்டணியில்இருந்த பிரேமலதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், அவர் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அவர் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
இருப்பினும், தேமுதிகவின் எதிர்காலம் கூட்டங்களில் விஜயகாந்த் இல்லாமல் இருக்கிறது. வரவிருக்கும் தேர்தல்களில், அக்கட்சி டிடிவி தினகரனின் அமமுக அல்லது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணையலாம். அல்லது, 2006ம் ஆண்டைப் போல, 234 இடங்களிலும் போட்டியிட்டு, முடிந்தவரை அதிக வாக்குகளைப் பெறுவது. குறைந்தபட்சம் விஜயகாந்த் அல்லது பிரேமலதா ஒரு வேட்பாளர் விருத்தாச்சலம் அல்லது பண்ருட்டியிலிருந்து வெல்வதுதான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.