ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இயங்கி வந்த ரசாயன ஆலையில் இருந்து ஸ்டைரின் என்ற வாயு கசிந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டைரின் என்பது என்னவித வாயு, அதன் வடிவம் என்ன, அதன் தொழிற்சாலை பயன்பாடு, பின்விளைவுகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
ஸ்டைரின் என்பது என்ன?
ஸ்டைரின் என்பது C8H8 என்ற வேதிச்சமன்பாடு கொண்ட வேதிப்பொருள் ஆகும். இது, பென்சீன் (C6H6) என்பதிலிருந்து பெறப்படுகிறது. தொழிற்சாலைகளில் இது திரவமாக சேகரித்து வைக்கப்படுகிறது. இது எளிதில் ஆவியாகி விடும் என்பதால், 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவாக உள்ள நிலையிலேயே இது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஸ்டைரின் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
பாலிஸ்டைரின் ((C8H8)n) தயாரிப்பின் முக்கிய பகுதிப்பொருளாக ஸ்டைரின் உள்ளது. பாலிஸ்டைரின், அதிக நெகிழ்வுத்தன்மை கொண்ட பிளாஸ்டிக் ஆகும். இது குளிர் சாதன பெட்டிகள், மைக்ரோ ஓவன்கள், வாகன உதிரி பாகங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள், டிஸ்போசபிள் கப்புகள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பிற்கு பயன்படுகிறது. கோபாலிமர்கள் தயாரிப்பிலும் ஸ்டைரின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஸ்டைரின் வாயு கசிவால் என்ன நிகழும்?
ஸ்டைரின் வாயு, மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று ஆந்திர அரசு மருத்துவ கல்லூரியின் சுவாசம் தொடர்பான மருத்துவத்துறையின் தலைவர் டாக்டர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். சுவாசித்தலில் பிரச்சனை, சுவாச கோளாறுகள், கண்களில் எரிச்சல், அஜீரணம், மூக்கடைப்பு, திடீரென்று சுயநினைவு இழத்தல், நடுக்கம் உள்ளிட்டவைகள் நமது உடல், ஸ்டைரின் வாயு உள்நுழைந்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆகும். சிறிதுநேரம் இந்த வாயுவை நுகர்ந்தாலே, நீண்டகால பிரச்சனைகளுக்கு நாம் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் . நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டோர் இந்த வாயுவை சுவாசிக்க நேர்ந்தால், மனக்கவலை பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் ஏற்பட வழிவகுக்கும். என்று விஜய் குமார் மேலும் தெரிவித்தார்.
ஸ்டைரின் வாயு, சுவாசப்பாதையில் உள்ள சளி அடுக்குகளை முக்கியமாக பாதிக்கின்றன. விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்த விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசித்தலில் பிரச்சனை ஏற்பட்டது. அவர்களில் பலர் சுவாசிக்க முடியாமல் மரணத்தை தழுவினர்.
தொடர்ந்து சுவாசித்தால் என்ன ஆகும்?
ஸ்டைரின் வாயுவை தொடர்ந்து சுவாசித்து வருபவர்களுக்கு லுகேமியா, தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுதொடர்பான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, ஸ்டைரின் வாயுவை எலிகள் உள்ளிட்டவைகளுக்கு சோதனை செய்தது. அவைகளுக்கு சுவாசித்தல், மற்றும் வாய் வழியாக குறைந்த அளவில் இந்த வாயு செலுத்தப்பட்டது. சுவாசித்தலின் மூலம் செலுத்தப்பட்ட எலிகளுக்கு, நரம்பு மண்டலம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், சுவாசப்பதையில் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
வாய் வழியாக செலுத்தப்பட்ட எலிகளில், கல்லீரல், ரத்தம், சிறுநீரகம், வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டது சோதனையில் தெரியவந்தது.
விசாகப்பட்டினம் தொழிற்சாலையில் இருந்து எப்படி வாயு கசிந்தது?
விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்ஜி கெம் பாலிமர்ஸ் தொழிற்சாலை, 1961ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இது முன்னதாக இந்துஸ்தான் பாலிமர்ஸ் என்று அழைக்கப்ப்டடு வந்தது. இந்த தொழிற்சாலையில் பாலிஸ்டைரின் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், 1978ம் ஆண்டில், UB குழுமத்தின் McDowell & Co நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. பின் 1997ம் ஆண்டு தென்கொரியாவின் எல்ஜி கெம் நிறுவனம், இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன்பின்னர் இது எல்ஜி கெம் என பெயர் மாற்றப்பட்டு, பின் எல்ஜி பாலிமர்ஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், பொது பயன்பாட்டிலான பாலிஸ்டைரின்கள், அதிக பயன்பாட்டு வகையிலான பாலிஸ்டைரின்கள், விரிவடையத்தக்க பாலிஸ்டைரின்கள், இஞ்ஜினியரிங் துறையில் பயன்படும் பிளாஸ்டிக் கலவைகள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலத, விசாகப்பட்டினம் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கோபாலபட்டினம் பகுதியின் ஆர்ஆர்வி புரத்தில் இயங்கி வருகிறது.
2,400 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு தொட்டியில், 1,800 டன் ஸ்டைரின் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தன் பேரில், தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு பணிகள் துவங்கின. தொழிலாளர்கள், ஸ்டைரின் வைக்கப்பட்டிருந்த தொட்டியை திறக்க முற்பட்டபோது, அதிலிருந்து ஸ்டைரின் வாயு கசிந்துள்ளது. திரவமாக இருந்த ஸ்டைரின், அதிக வெப்பநிலை காரணமாக வாயுவாக மாறிய நிலையில், அது கசிந்து பரவ துவங்கியது.
எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும்?
ஸ்டைரின் திரவம் வைக்கப்பட்டிருந்த தொட்டி, 20 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். இந்த வெப்பநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தொட்டியில், வெளிச்சமோ அல்லது வெப்பமோ பட்டால், அதில் உள்ள ஸ்டைரின் திரவம் தனது இயல்புநிலையிலிருந்து உருமாறி வாயுவாக மாறிவிடும். ஊரடங்கு நேரத்தின் போதும், ஸ்டைரின் தொட்டியின் வெப்பநிலை கண்காணிப்பு பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில் அதைன குளிர்விக்கும் பணியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். வெப்பநிலை கண்காணிப்பு பிரிவு, சேமிப்பு தொட்டியின் அருகிலேயே நிறுவப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி, சேமிப்பு தொட்டியில் எப்போதும் முழுஅளவிற்கு ஸ்டைரின் திரவம் நிரப்பப்படுவதில்லை. இந்நிலையில், வெப்பநிலை கண்காணிப்பு பிரிவு செயல்பட தவறியதன் விளைவாக, சேமிப்பு தொட்டியில் வெப்பநிலை அதிகரித்ததால், திரவம் வாயுவாக மாறியது.
சேமிப்பு தொட்டி 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்ததன் காரணத்தினால், அதன் உட்புற பகுதியில் இருந்த சில வாயுக்களால், அதன் வெப்பநிலை அதிகரித்திருக்கும்.இதன்காரணமாகவே, திரவம் வாயுவாக மாறி கசிந்துள்ளது. இந்த நிகழ்வை ஆட்டோ பாலிமரைசேசன் என்று அழைப்பர். இருப்பினும், வாயுகசிவிற்கான முழுக்காரணம் தெரியவில்லை. சேமிப்பு தொட்டியில் விரிசல் ஏற்பட்டு வாயு கசிந்துள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.