மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நடிகர் ரன்வீர் சிங் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) மும்பை காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரன்வீர் சிங் பேப்பர் இதழுக்கு அளித்த நிர்வாண புகைப்பட போஸ் தற்போது பெரும் ஆட்சேபத்துக்குரியதாக மாறியுள்ளது.
ரன்வீர் மீது பதியப்பட்ட வழக்குகள் என்ன?
இரண்டு தனிநபர்கள் மற்றும் வழக்குரைஞர் ஒருவர் நடத்தும் என்ஜிஓ நிர்வாகிகள் முதன் முதலில் ரன்வீர் சிங்குக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த என்ஜிஓ நிர்வாகி தனியார் ஒப்பந்ததாரரும், தற்கொலையில் உயிரிழந்த விவசாயிகளின் குழந்தைகள், விதவைகள் ஆகியோருக்கு ஆதரவளித்துவரும் ஷியாம் மங்கரம் அறக்கட்டளையை சேர்ந்தவருமான லலித் தெக்சந்தானி (50) ஆவார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் செம்பூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து ஜூலை 24ஆம் தேதி லலித் கூறுகையில், ‘நடிகர் ரன்வீர் சிங் சமூக வலைதளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சில படங்களை பதிவேற்றம் செய்திருந்தார்.
அந்தப் படங்களில் அவர் ஆடை அணியவில்லை. படத்தை பெரிதாக்கி பார்க்கையில் அவரது அந்தரங்க உறுப்புகள் தெரிந்தன. இந்தியா ஒரு கலாசார பூமி, நடிகர்- நடிகைகளின் இதுபோன்ற ஆட்சேபத்துக்குரிய புகைப்படங்கள் சிறுவர்கள், குழந்தைகள் மத்தியில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார்.
மேலும் பணத்திற்காக நடிகர் ரன்வீர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் பேப்பர் இதழுக்கு போஸ் கொடுத்துள்ளார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரன்வீர் மீது போலீசார் பயன்படுத்திய சட்டப்பிரிவு
இந்திய தண்டனைச் சட்டம் 292, 293, 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67ஏ உள்ளிட்ட பிரிவுகளை ரன்வீர் சிங்குக்கு போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 292 ஆபாச படங்கள், புத்தகங்கள் விற்பனையை தடை செய்கிறது. அதன்படி இந்தச் சட்டங்கள் ஒருவர் ஆபாச படங்கள் அச்சடித்தல், துண்டு பிரசுரங்கள் விற்பனை, ஆபாச கதைகள் எழுதுதல், ஆபாசமான ஓவியங்கள் வரைதல், ஒரு பொருளை காமத்துடன் பிரதிநிதித்துவம் செய்தல், ஒரு நபர்களை இழிவுப் படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் பற்றி பேசுகிறது.
சுருக்கமாக சொல்லப் போனால் ஆபாசமான பொருள்களின் விற்பனை, கண்காட்சி ஆகியவற்றை தடை செய்கிறது. மேலும அவ்வாறு நடக்கும் நபர்கள் மீது தண்டனை விதிக்க வழிசெய்கிறது. அதாவது இந்தச் சட்டப்பிரிவின் கீழ் ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கலாம்.
சட்டப்பிரிவு 293, 20 வயதுக்குள்பட்ட எந்தவொரு இளைஞருக்கும் ஆபாச படங்கள் விற்பனை, ஆபாசமான பொருள்கள் விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கிறது. இதற்கு தண்டனையாக 3 ஆண்டுகள் சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படலாம்.
சட்டப்பிரிவு 509 ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட வார்த்தை, சைகை அல்லது செயல்கள், அந்தரங்க உறுப்புகளை வெளிக்காட்டுதல் குறித்து பேசுகிறது. ஒரு பெண்ணின் தனியுரிமையில் ஊடுருவும் இந்தச் செயலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் சொல்வதென்ன?
தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67ஏ, பாலியல் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை மின்னணு வடிவத்தில் அனுப்புவதற்கு தடை விதிக்கிறது.
அதன்படி வெளிப்படையான பாலியல் செயல் அல்லது நடத்தை கொண்ட எந்தவொரு புகைப்படத்தையும் மின்னணு வடிவத்தில் அனுப்புவது குற்றமாகும்.
மேலும் இந்த நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் ரூ.10 லட்சம் ஆகவும், சிறைத் தண்டனை 7 ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்படலாம்.
அடுத்து என்ன?
இந்த வழக்கில் விசாரணை நடத்திவரும் காவலர்கள், “நடிகர் ரன்வீர் சிங் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. முதல் தகவல் அறிக்கை (எஃப் ஐ ஆர்) பதிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாக நடிகர் ரன்வீர் சிங்கிடம் வாக்குமூலம் பெறப்படும். இந்த எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்யக்கோரி ரன்வீர் சிங்கும் நீதிமன்றத்தை அணுகலாம்” என்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.