kickback allegations against BJP-led Karnataka govt : பிரதமர் மோடிக்கு கர்நாடகாவின் ஒப்பந்ததாரர்கள் சங்கம் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து பாஜக தலைமையிலான பாஜக அரசு புதிய ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்கிறது. கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் கிக்பேக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ள போதிலும், 356வது சட்டப்பிரிவை அமல்படுத்தி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு ஆளுநரிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக ஒப்பந்ததார்கள் அமைப்பு வைத்துள்ள குற்றச்சாட்டுகள் என்ன?
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜூலை 6 அன்று கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், ஒப்பந்ததாரர்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிறருக்கு டெண்டர் தொகையில் சுமார் 25-30 சதவிகிதம் லஞ்சமாக கொடுக்க வற்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தனர்.
ஒப்பந்ததாரர்கள் ஆரோக்கியமற்ற சூழலை எதிர்கொள்கின்றோம். சாலைகள் மற்றும் கட்டிடங்களின் பணிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவதில்லை. பொதுப்பணித் துறை, சிறு மற்றும் பெரிய நீர்ப்பாசனம், பஞ்சாயத்து ராஜ் பொறியியல், புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே, சுகாதாரத் துறை போன்ற பல்வேறு துறைகளில் டெண்டர் பணிகளைப் பெறுவதில் அவர்கள் விரும்பத்தகாத மற்றும் அசிங்கமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றோம் என்றும் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அமைச்சர் வேலை துவங்குவதற்கு முன்பு 5% பணத்தையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 3% பணத்தையும் கேட்கின்றனர் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் கட்டடங்களுக்கு 5 சதவீதமும், சாலைப் பணிகளுக்கு 10 சதவீதமும் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கோரும் காங்கிரஸ்
மூத்த தலைவர்கள் சித்தராமையா மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் பிரதிநிதிகள், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, இது அரசியல் அமைப்பு இயந்திரத்தின் தோல்வி. மாநிலத்தில் பரவி வரும் ஊழலை ஒழிக்கும் விதமாக அரசியல் அமைப்பு பிரிவு 356-ஐ அமல்படுத்தி குடியரசுத் தலைவரின் ஆட்சி கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மாநிலத்தில் பரவலான ஊழல், நிர்வாக சீர்கேடு நிலவுகிறது, இதனால் கருவூலத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, அதையே சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகள் மற்றும் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தியுள்ளனர்” என்று காங்கிரஸ் கட்சி தனது மனுவில் கூறியுள்ளது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மௌனம் காக்கிறார். ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் குறிப்பாணையை சமர்ப்பித்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும், கர்நாடக அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநருக்கு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒப்பந்ததாரர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது.
மாநில அரசின் “ரியாக்ஷன்” என்ன?
கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு தலைமைச் செயலாளர் பி.ரவிகுமாரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒப்பந்ததாரர்கள் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தலைமைச் செயலாளரிடம் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன். துறைத் தலைவர்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, குற்றவாளிகள் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். எனது அரசு பொறுப்பேற்ற பிறகு இறுதி செய்யப்பட்ட டெண்டர்களை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன் என்று பொம்மை கூறியுள்ளார்.
கடிதத்தில் குறிப்பிட்ட வழக்கு எதுவும் குறிப்பிடப்படாத போதிலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறிய பொம்மை, “இன்னும் எவ்வளவு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க முடியும்?” என்று கேட்டார்.
விதிகளில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா?
முன்னதாக ரூ. 50 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான டெண்டர்களுக்கு ஒப்புதல் வழங்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு தொழில்சார் வல்லுநர்கள் அடங்கிய கமிட்டியை நியமிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புக் கொண்டது.
இந்த புதிய விதியின் படி , குழுக்களின் அனுமதியின்றி, 50 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் கோரப்படாது. குழுக்கள் அனைத்து துறைகளின் அனைத்து டெண்டர் முன்மொழிவுகளையும் ஆய்வு செய்த பின்னரே டெண்டரை அனுமதிக்கும்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு டெண்டர் கமிட்டிகளை அமைப்பதற்கான அரசாணையை விரைவில் வெளியிட தலைமைச் செயலாளருக்கு பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு பசவராஜ்ஜின் ஆட்சியை எந்த வகையில் பாதிக்கிறது?
பி.எஸ். எடியூரப்பாவிற்கு அடுத்தபடியாக பொம்மை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீது பிட்காயின் ஊழல் மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி) நடத்திய சோதனைகள் ஏற்கனவே மாநிலத்தில் காவி கட்சிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளன.
ஊழல் மற்றும் பிட்காயின் ஊழல் குற்றச்சாட்டுகள் மாநிலத்தில் உள்ள பொம்மை தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் செயல்திறனைப் பாதித்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளால் முதல்வர் மன அழுத்தத்தில் இருக்கிறார்,” என்று மாநில பாஜக வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil