உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சம் படைவீரர்களை குவித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இது, உக்ரைன் மீது போர் புரிவதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுவதாக தெரிகிறது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாடு போர்ப்பாதையில் இல்லை என்றும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒரு தவறான நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தடைகளை ஏற்படுத்தியுள்ளன.
கிழக்கு ஐரோப்பாவில் தனது ராணுவத்தை அதிகரிப்பதன் மூலம், அதன் பிராந்திய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமின்றி குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக அமெரிக்கா தலைமையிலான வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) மீது குற்றம் சாட்டுகிறார்.
அமெரிக்க, நேட்டோ மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான தொடர் பேச்சுக்களில், பல பெரிய கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம்(ஜனவரி 21) ராஜதந்திரத்தை தக்கவைத்து கொள்ளும் முயற்சியிலும், உக்ரைனில் சாத்தியமான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் முயற்சியிலும், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கனும், ரஷ்ய பிரதிநிதி செர்ஜி லாவ்ரோவும் ஜெனீவாவில் 90 நிமிட சந்திப்பை நடத்தினர். ஆனால், இச்சந்திப்பில் பெரியளவில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால், இவ்விவகாரம் குறித்து மீண்டும் பேச திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், புதினுக்கும் இடையில் மற்றொரு உரையாடல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக, வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன், "உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்பினால் ரஷ்யா அதிக விலை கொடுக்க நேரிடும்" என்று எச்சரித்திருந்தார்.
ரஷ்யா உக்ரைனை அச்சுறுத்தவது ஏன்?
ஐரோப்பிய நிறுவனங்களுடன், குறிப்பாக நேட்டோவுடன் உக்ரைன் வளர்ந்து வரும் நெருக்கத்தை ரஷ்யா நீண்டகாலமாக எதிர்த்து வருகிறது. ரஷ்யா தனது எல்லையை ஒருபுறம் முன்னாள் சோவியத் குடியரசுடனும், மறுபுறத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பகிர்ந்துகொள்கிறது.
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள தற்போதைய ராணுவம், 2014 ஆம் ஆண்டு, உக்ரைனின் தெற்கு கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யா இணைத்து, கிழக்கு உக்ரைனின் பெரும்பகுதியைக் கைப்பற்ற முடிந்த பிரிவினைவாதிகளை ஆதரித்ததை நினைவூட்டுகிறது.
இது ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் நாடு முழுவதும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியதையடுத்து ஏற்பட்டது. மேலும், அப்போதைய பிரபலமற்ற ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. அவர் புதினால் ஆதரிக்கப்பட்டார்.
இன்றும் மோதல் தொடரும் வேளையில், 2014 மற்றும் 2015ல் மின்ஸ்க் ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, கடுமையான காலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஆனால் கிழக்கு உக்ரைனில், குறிப்பாக தொழில்துறை மையமான டான்பாஸில், கிளர்ச்சியாளர்கள் உக்ரைனின் ராணுவப் படைகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.கடந்த ஏழு ஆண்டுகளில், சுமார் 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் சுதந்திரத்தை ஏற்க ரஷ்யா முன்வரவில்லை. கடந்தண்டு புதின் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் "ஒரு தேசத்தின்" ஒரு பகுதி என்று குறிப்பிட்டிருந்தார். அதே சமயம், உக்ரைனின் தலைமை "ரஷ்ய எதிர்ப்பு திட்டத்தை" நடத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இம்முறை உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா கூறினாலும், கிழக்கு ஐரோப்பாவில் மேற்கு நாடுகளை அதன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய புதின் போர் அச்சுறுத்தலை ஒரு பேரம் பேசும் பொருளாக பயன்படுத்துகிறார். உக்ரைன் முழுவதும் ஆயுதங்களை நிரப்பி பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக மாஸ்கோ குற்றச்சாட்டியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில், உக்ரைன் போன்ற எந்த முன்னாள் சோவியத் நாடுகளையும் நேட்டோவில் சேர்க்க வேண்டாம் என்றும், கிழக்கு ஐரோப்பாவில் ராணுவ கூட்டணி தனது இருப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் புதின் தெரிவித்திருந்தார்.
அதாவது, போலந்து, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளில் இருந்து நேட்டோ நாடுகள் தனது அனைத்து போர் பிரிவுகளையும் வெளியேற்ற வேண்டும் என்பதே பொருள் ஆகும்.
ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்காவின் பதில் என்ன?
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புதினின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்தன. அத்தகைய கோரிக்கையை அங்கீகரிப்பது நேட்டோவின் ஸ்தாபக உடன்படிக்கைக்கு எதிரானது ஆகும். வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உறுப்பினர் கடமைகளை நிறைவேற்றவும் உதவும் எந்தவொரு விருப்பமுள்ள ஐரோப்பிய நாட்டையும் அமைப்பு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால்,இவ்விவகாரத்தில் ரஷ்யா சமாதான போக்கை தொடரவில்லை.அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் எழுத்துப்பூர்வ பதிலை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. அதன் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யா விரைவில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று பைடன் நம்புகிறார்.அப்படி நடந்தால், மாஸ்கோ அதன் நடவடிக்கைகளுக்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா புதிய ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அச்சுறுத்தியுள்ளன.
எல்லையில் குவித்துள்ள படைகள் மூலம் செய்யக்கூடியதை ரஷ்யா செய்துவிட்டால், அது பேரழிவாக இருக்கும் என பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பது இது முதல் முறையல்ல. கிரிமியாவை இணைத்ததைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு முதல் அவ்வாறு செய்து வருகிறது.
அட்லாண்டிக் கவுன்சிலின் ஆய்வின்படி, அமெரிக்க நடவடிக்கையால் ரஷ்ய பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், உக்ரைனில் புதின் ஏற்படுத்தும் பிரச்சனைகளை தடுத்திட முடியவில்லை. சில ஆய்வாளர்கள் ரஷ்யாவின் பல பில்லியன் டாலர் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திட்டத்தை குறிவைப்பதே சிறந்தது என கூறுகின்றனர்.
உக்ரைன் மற்றும் போலந்து போன்ற நாடுகளை எதிர்த்து குரல் கொடுக்கும் நாடுகளை கடந்து செல்லும் இந்த குழாய் பாரிய புவிசார் அரசியல் விவாதத்தின் மையமாக உள்ளது. ஜெர்மனியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டால் ரஷ்யாவுக்கு பில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் படி, கடந்த நிதியாண்டில் $450 மில்லியனுடன் கூடுதலாக இந்த வாரம் உக்ரைனுக்கு தற்காப்பு ராணுவ உதவியாக $200 மில்லியனுக்கு பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்திய வாரங்களில், ரஷ்யாவின் முன்னேற்றங்களை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் கிழக்கு ஐரோப்பாவில் ராணுவத்தை பலப்படுத்திடம் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
உதாரணமாக, மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடலில் உள்ள நேட்டோவின் கடற்படைப் படைகளில் சேர ஸ்பெயின் தனது போர்க்கப்பல்களை அனுப்புவதாகவும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் ருமேனியாவுக்கு படைகளை அனுப்ப முன்வந்துள்ளதாகவும், இங்கிலாந்து தரப்பிலும் படைகள் மற்றும் ஆயுதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
வெள்ளியன்று பிளிங்கன் மற்றும் லாவ்ரோவ் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. பிரச்சனையை தீர்க மீண்டும் சந்தித்து பேச முடிவெடுத்துள்ளனர்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கத் தயாராக இல்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்திய பிளிங்கன், ரஷ்யாவின் முன்மொழிவுகளுக்கு அமெரிக்கா எழுத்துப்பூர்வ பதிலை அடுத்த வாரம் அளிக்கும் என்றும், அதன் பிறகு மற்றொரு சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.