பீகார் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு வெங்காயத்தை இருப்பு வைக்கும் வரம்பை மீண்டும் அறிமுகப்படுத்தியது. இந்த நகர்வு வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கை ஆகும். வெங்காயம் வெள்ளிக்கிழமை பல நகரங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.80 ஐ தாண்டி விற்பனையானது. இதில் மும்பையில் ஒரு கிலோ வெங்காயம் கிட்டத்தட்ட ரூ.100-க்கு விற்பனையானது.
ஒரு மாதத்திற்கு முன்பு, நாடாளுமன்றம் வெங்காயத்தை தவிர்த்து, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ஐ திருத்தம் செய்தது - மேலும், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்தும் அவற்றை இருப்பு வைக்கும் வரம்பில் இருந்தும் விடுவித்தது. அப்போதிலிருந்து, பீகார் தேர்தலை மனதில் கொண்டு, வெங்காய விலையை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் இரண்டு முறை செயல்பட்டது; மத்திய அரசு புதன்கிழமை வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை தளர்த்தியது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இருப்பு வைக்கும் வரம்பை மீண்டும் அறிமுகப்படுத்தியது.
வெங்காய விலையின் இயங்கியலும் அரசாங்கத் தலையீட்டின் தாக்கம் பற்றிய பார்வையும்:
வெங்காயத்தின் விலை ஏன் உயர்ந்து வருகிறது?
வடக்கு கர்நாடகாவில் அதிக மழை பெய்ததால் காரிப் பருவ வெங்காயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு பெரிய இழப்புக்கள் ஏற்பட்டதால், ஆகஸ்ட் கடைசி வாரத்திலிருந்து வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இந்த வெங்காயம் பயிர் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தது. இது மகாராஷ்டிராவிலிருந்து அக்டோபர் இறுதியில் காரிப் பருவ பயிர் வரும் வரை சந்தைகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மூன்று முக்கிய வெங்காய பயிர்கள் உள்ளன - காரிப் பருவம் (ஜூன்-ஜூலை விதைப்பு, அக்டோபருக்குப் பின் அறுவடை), பின் காரிப் பருவம் (செப்டம்பர் விதைப்பு, டிசம்பருக்கு பின் அறுவடை), ரபி பருவம் (டிசம்பர்-ஜனவரி விதைப்பு, மார்ச் மாதத்திற்குப் பின் அறுவடை). ரபி பயிரில் குறைந்த ஈரப்பதம் இருப்பதால், அவை சேமிக்க வசதியாக இருக்கும். விவசாயிகள், குறிப்பாக மகாராஷ்டிராவில், ஈரப்பதம் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க கந்தா சால்ஸ் என்று அழைக்கப்படும் கள கட்டமைப்புகளில் சேமித்து வைக்கின்றனர். இந்த பயிர் அடுத்த பயிர் வரும் வரை சந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
செப்டம்பரில் பெய்த கனமழையால் கர்நாடகாவில் புதிய பயிர் அழிந்ததோடு மட்டுமல்லாமல், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் சேமித்துவைக்கப்பட்ட வெங்காயத்தையும் பாதித்தது. மகாராஷ்டிராவில் விவசாயிகள் மட்டும் சந்தைப்படுத்தக்கூடிய வெங்காயத்தை வைத்திருந்தனர். அவர்கள் கோடைக் காலத் தொடக்கத்தில் சுமார் 28 லட்சம் டன் சேமித்து வைத்திருந்தனர். ஆனால், மகாராஷ்டிரா விவசாயிகள் தங்கள் வழக்கமான சேமிப்பு இழப்புகளை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக 30-40% ஆக இருக்கும் இழப்புகள் அதற்கு மாறாக 50-60% ஆக இருந்தது. அகமதுநகர், நாசிக் மற்றும் புனே ஆகிய வெங்காய சாகுபடி செய்யும் பகுதிகளில் பெய்த மழையால் சேமிப்பு கட்டுமானங்களுக்குள் தண்ணீர் சென்றது.
மேலும், விவசாயிகள் யூரியாவை அதிகமாக பயன்படுத்துவதால் வெங்காயத்தின் பயன்பாட்டு வாழ்நாள் இந்த ஆண்டு குறைவாக இருப்பதாக வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். “கடந்த ஆண்டு, வெங்காயத்தின் விலை நன்றாக இருந்தது. அதனால், விவசாயிகள் விளைச்சலை அதிகரிக்க யூரியாவை கூடுதலாக இடுவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இது வெங்காயத்தின் பயன்பாட்டு நாட்களைக் குறைத்துள்ளது” என்று ஒரு வேளாண் அதிகாரி கூறினார்.
கடந்த பருவத்தில் பயிர் செய்யப்பட்ட ரபி வெங்காயம் தேசிய ஏக்கர் 10 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இது 2018-19-ம் ஆண்டில் 7 லட்சம் ஹெக்டேரில் இருந்தது. ஆனால், கூடுதலான பாதிப்பு விநியோகத்தை தடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 28 லட்சம் டன் வெங்காயத்தில் சுமார் 10-11 லட்சம் டன் இப்போது உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் வெங்காய நுகர்வு 160 லட்சம் டன்னாக உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் ஒரு நாளைக்கு 4,000-6,000 டன் வெங்காயம் நுகர்வு உள்ளது.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வாறு நடவடிக்கை எடுத்தது?
மத்திய அரசு செப்டம்பர் 14ம் தேதி வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்தபோது, வெங்காய விலை உயர்வில் மத்திய அரசு முதல் தடையை ஏற்படுத்தியது. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-இல் திருத்தம் வெங்காயம் மற்றும் ஒரு சில பொருட்களுக்கு இருப்பு வைக்கும் வரம்புகளை தீர்மானிக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தை பறித்தபோது ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. பொருட்களை இருப்பு வைக்கும் வரம்புகளை தீர்மானிப்பது என்பது அந்த பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக இருந்தன. ஆனால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகும், விநியோக தேவைகள் அதிகமாக இருந்ததால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தன. கடந்த வாரம், புனேவைச் சேர்ந்த வருமான வரி அதிகாரிகள் நாசிக் நகரில் உள்ள ஒன்பது பிரதான வணிகர்களின் மீது ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரான், துருக்கி ஆகிய வெங்காயம் உற்பத்தி செய்யும் பிற நாடுகளிலிருந்து எளிதாக அனுப்ப அனுமதிக்கும் வகையில் புதன்கிழமை இறக்குமதி விதிமுறைகளை தளர்த்தியது. மும்பையில், வாஷி மொத்த சந்தையில் 600 டன் வெங்காயம் கிடைத்தது. இது தென்னிந்தியாவில் சந்தைகளுக்கு அளிக்க வழிவகுத்தது.
மேலும் வெள்ளிக்கிழமை, இருப்பு வைக்கும் வரம்பை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியது. மொத்த வணிகர்கள் இப்போது 25 டன் வெங்காயத்தையும் சில்லறை வணிகர்கள் 2 டன் வெங்காயம் வரையில் சேமித்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டன.
இறக்குமதி விலையைக் குறைக்க உதவுமா?
ஈரானில் இருந்து மும்பை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 1 கிலோ விலை 35 ரூபாய். போக்குவரத்து, கையாளுதல் மற்றும் பிற கட்டணங்களைக் கருதில் கொண்டால் இறக்குமதி செய்யப்பட்ட அந்த வெங்காயத்தின் இறுதி சில்லரை விலை கிலோவுக்கு ரூ.40 -45 வரை வருகிறது. இருப்பினும், ஈரானில் இருந்து வருகிற வெங்காயத்திற்கான தேவை சில்லறை விற்பனைக்கு வாங்குபவரிடமிருந்து அல்லாமல் ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறையிலிருந்து வருகிறது என்று வணிகர்கள் தெரிவித்தனர். அவர்கள் சுட்டிகாட்டுகிற அத்தகைய வெங்காயம் மணம் குறைந்தவை இந்திய வெங்காயத்தைவிட பெரியவை.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காரிப் பருவ பயிர் விரைவில் சந்தைகளை வந்தடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. அது விலை உயர்வைத் குறைக்க உதவும். இருப்பினும், கடந்த சில நாட்களில் விதிவிலக்காக அதிக மழை பெய்ததால் நாசிக் நகரிலிருந்து அதிக பயிர்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. விவசாயிகள் கூறுகையில், மழை கிட்டத்தட்ட சந்தை வரத் தயாராக இருந்த பயிர்களை சேதமடையச் செய்தது மட்டுமல்லாமல், காரிப் மற்றும் ரபி பின் பருவத்துக்கு விவசாயிகள் வளர்க்கிற நாற்றங்கால்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயிர் சேதத்தைப் பொறுத்தவரை, நவம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் மகாராஷ்டிராவில் இருந்து பயிர்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன. “இது பெரும்பாலும் நவம்பர் இறுதி வரை தாமதமாகிவிடும்” என்று மத்தியப் பிரதேசம், டிண்டோரியில் மொத்த சந்தையில் இருந்து செயல்படும் கமிஷன் முகவரான சுரேஷ் தேஷ்முக் கூறினார்.
இறக்குமதியால் குறுகிய காலத்தில் விலை கீழ்நோக்கி சரிவதைக் காண முடியும் என்றாலும், புதிய பயிர் சந்தையைத் வந்தடையும் போதுதான் உண்மையான விலை திருத்தம் நிகழும் என்று பெரும்பாலானவர்கள் கூறுகிறார்கள். அது நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் நடக்கும்.
அடுத்த பயிருக்கான வாய்ப்புகள் என்ன?
விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் கடுமையான வெங்காய விதைகள் பற்றாக்குறை பற்றி பேசியுள்ளனர். இது அனைத்து முக்கியமான ரபி பருவத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக, விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் வெங்காயப் பயிரின் ஒரு பகுதியை பூக்கச் செய்து அதன் மூலம் தங்களுக்கான வெங்காய விதைகளை உருவாக்குகிறார்கள். பின்னர் விதைகளை உற்பத்தி செய்கிறார்கள். இருப்பினும், இந்த பருவத்தில், அவர்கள் இந்த நடவடிக்கையைத் தவிர்த்து, நல்ல விலைகள் வழங்கப்படுவதைக் கருத்தில் கொண்டு தங்கள் முழு பயிரையும் விற்றனர். நல்ல விதைகள் கிடைக்காதது கவலையை ஏற்படுத்தியுள்ளததோடு கிடைக்கக்கூடிய விதைகள் பிரீமியத்தில் விற்கப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.