நாடு 5ஜி நெட்வொர்க்குக்கு தயாராகிவருகிறது. இதற்கான ஏலம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 5ஜி நெட்வொர்க்கை பெற ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப் போட்டு ஏலத் தொகையை செலுத்தியுள்ளன.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.1400 கோடியும், பார்தி ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடபோன் ஐடியா ரூ.2,200 கோடியும், அதானி குழுமம் ரூ.100 கோடியும் வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளன எனத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கும், அதானி குழுமத்திற்கும் வைப்புத் தொகை விஷயத்தில் ஒரு பெரும் இடைவெளி இருப்பதால் இம்முறை 5ஜி ஏலத்தில் அதானி குழுமம் நேரடியாக போட்டிப் போடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், ஜூலை 26ஆம் தேதி ஏலத்தில் அதானி குழுமம் பங்கேற்கிறது. அதாவது 5ஜி நெட்வொர்க்குகளை உருவாக்க போட்டியில் பங்கெடுப்பதாக அதானி குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வைப்புத் தொகை என்பது நிறுவனம் வாங்க விரும்பும் ஸ்பெக்ட்ரம் அளவை குறிக்கிறது. அந்த வகையில் ஒரு விண்ணப்பதாரருக்கு அவர்கள் செலுத்தும் வைப்புத் தொகையை பொருத்து ஸ்பெக்ட்ரம் என்னும் அலைவரிசைகள் ஒதுக்கப்படுகின்றன.
இதனை பொருத்து அவர்கள் ரூ.700 கோடியுள்ள அலைவரிசையை வாங்கலாம். இந்த நிலையில் 5ஜி அலைவரிசை துறையில் நுழையும் எண்ணம் இல்லை. தனியார் நெட்வொர்க்குகளை வாங்க துறைக்குள் நுழைகிறது எனத் தெரிவித்துள்ளது.
இதனால் அந்நிறுவனம் 26 ஜிகாஹெட்ஸ் மில்லிமீட்டர் பேண்டில் ஏலம் எடுக்கக் கூடும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக அந்நிறுவனத்தின் 5ஜி பங்களிப்பு 26 GHz மட்டுமே இருக்கும்.
ஆனால் ஜியோவால் ரூ.1,30,000 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்க முடியும். அந்நிறுவனம் நுகர்வோர் தொடர்பான பயன்பாட்டுக்கு 700 மெகாஹெட்ஸ் அலைவரிசையையும் ஏலம் எடுக்க முடியும்.
அந்த வகையில் ஜியோ 3.5 ஜிகாஹெட்ஸ் பேண்டில் 100-150 மெகாஹெட்ஸ் மற்றும் 800 மெகாஹெட்ஸ் என்ற அளவில் ஏலம் எடுக்கும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்த நிலையில் ரூ.5,500 கோடியுடன் பார்தி ஏர்டெல் 3.5ஜிகாஹெட்ஸ் அலைவரிசையை பெறலாம். டெல்லி, மும்பை, கொல்கத்தா, குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 900 மெகாஹெட்ஸ் மற்றும் 1800 மெகாஹெட்ஸ் அலைவரிசையை வழங்கலாம்.
இதற்கு அடுத்தப்படியாக வோடபோன் ஐடியாவால் குறைந்தப்பட்ச ஸ்பெக்ட்ரம் மட்டுமே ஏலத்தில் எடுக்க முடியும்.
நேரடி போட்டியை அதானி தவிர்த்ததா?
விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தளவாடங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற வணிக இடங்களில் தனியார் நெட்வொர்க்குகளை நிறுவ மட்டுமே ஏலத்தில் பங்கேற்றதாக முன்னர் அதானி குழுமம் கூறியது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி அந்நிறுவனம் 5ஜி அலைவரிசை ஏலத்தில் போட்டியிடாது என்றே தெரிகிறது. கடந்த வாரம் 5ஜி நெட்வொர்க்குகளை அமைப்பதற்கான விதிகள் வெளியிடப்பட்டன.
அதில் தொலைதொடர்பு நிறுவனங்களிடமிருந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை குத்தகைக்கு விடலாம் எனக் கூறியிருந்தது. இது மற்ற 3 தொலைதொடர்பு நிறுவனங்களுக்க எதிராகவும் அதானி குழுமம் நேரடியாக போட்டியிடக் கூடிய ஒரு சாத்தியமான பகுதி என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், 5ஜி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வருவாயை பெருக்கும் என பொதுவான கருத்து உள்ளது. அந்த வகையில் அதானி குழுமம் இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த வருவாயை பார்க்கிறது என்றே தெரிகிறது.