நந்தகோபால் ராஜன்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை வாங்க, சுமார் 43,574 கோடி முதலீடு செய்வதாக ஃபேஸ்புக் நிறுவனம் இன்று காலை அறிவித்தது. ஃபேஸ்புக்கின் இந்த அறிவிப்பால், ஜியோ பிளாட்ஃபார்ம்களின் மதிப்பு ரூ .4.62 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
ஜியோ நிறுவனத்திடம் ஃபேஸ்புக் ஏன் முதலீடு செய்கிறது?
பேஸ்புக் இணைய சேவையில் தன் இருத்தலை தக்க வைத்துக் கொள்ள பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து, இந்திய மக்களுக்கு அடிப்படை இணைய சேவைகளை இலவசமாக வழங்கும் 'ஃப்ரீ பேசிக்ஸ்' என்னும் திட்டத்தை ஃபேஸ்புக் சோதனை செய்தது. இந்த சோதனையின் மூலம், ஃபேஸ்புக் தன்னை பிரதானப்படுத்திக் கொள்கிறது, மக்களின் கருத்து சுதந்திரம் பறிபோகும் சூழல் உருவாகும் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, ஃபேஸ்புக் இந்த முயற்சியிலிருந்து விலகியது.
சூரிய சக்தியால் இயங்கும் அகவிலா எனும் ட்ரோனின் மூலம் இலவச இணைய சேவையை வழங்கும் முயற்சியைக் கூட ஃபேஸ்புக் விட்டு வைக்கவில்லை. இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில், இணைய சேவையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் எக்ஸ்பிரஸ் wi-fi எனும் திட்டத்தை துவங்கியது.
அந்த நாட்களில், பெரும்பாலான இந்திய மக்களுக்கு டேட்டாக்கள் விலை உயர்ந்தவையாக இருந்தன. இலவச இணைப்பின் மூலமாக, பில்லியன் மக்களை இணையத்திற்கு எளிதாக கொண்டு வர முடியும் என்று ஃபேஸ்புக் கருதியது.
பின்னர் தான், கதையின் திருப்புமுணையாக கருதப்படும் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமானது. இந்த புதிய தொலை தொடர்பு நிறுவனம், அறிவித்த டேட்டா கட்டணம் மற்ற நிருவனங்களை நடுங்க செய்தது. காலபோக்கில், இந்தியாவில் ஜியோ நிறுவனம் ஒரு ட்ரென்ட் செட்டராகவும் மாறியது.
ஜியோ மட்டும் 388 மில்லியன் பயனர்களை ஆன்லைனில் கொண்டு வர உதவியது. இதனால் தான் உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், ரிலயன்ஸ் ஜியோ உடனான கூட்டணியை சுவாரஸ்யமானதாக உணர்கிறது.
எவ்வாறாயினும், ஜியோவில், மார்க் ஜுக்கர்பெர்க் முதலீடு செய்யப் போகிறார் என்ற செய்தி ஃபேஸ்புக்கைப் பற்றியது அல்ல. உண்மையில், 2014-ம் ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு அம்சங்களை வழங்கும் வாட்ஸ்அப் பற்றியதாகும்.
வாட்ஸ்அப்பின் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களில் சுமார் 20 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் வாட்ஸ்அப்பின் வளர்ச்சி, ஜியோவின் வளர்ச்சியுடன் ஒத்துப்போகின்றது. மேலும், ஜியோ, வாட்ஸ்அப் ஒன்றாகப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகமாகனதாக உள்ளது. லட்சக் கணக்கான இந்திய மக்களுக்கு வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவைகளோடு இன்டர்நெட் முடிந்து விடுகிறது என்றால் அதை மறுக்க முடியுமா?
பேஸ்புக் மற்றும் ஜியோ நிறுவனத்தின் கூட்டறிக்கையில்"அனைத்து நிலையிலான வணிகங்களுக்கும், குறிப்பாக இந்தியாவில் இயங்கும் 6 கோடிக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கான புதிய வாய்ப்புகளை செயல்படுத்துவது பற்றி பேசி வருகிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த கூட்டணிக்கான பெரிய தளம் இந்த சிறு வணிகங்களில் தான் உள்ளது.
இனி வரும் காலங்களில், தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு அம்சங்களைத் தாண்டி, பல்வேறு சேவைகளை வழங்கும் மாபெரும் செயலியாக மாற இருக்கின்றது வாட்ஸ்அப் .
WeChat, Line, Kakao Talk போன்ற செயலிகள் கேமிங் முதல் சில்லறை வர்த்தகம் வரையிலான அனைத்து சேவைகளையும் வழங்கி வருகின்றன. சீனா, கொரியா, ஜப்பான் போன்ற பிற ஆசிய சந்தைகளில் இந்த பிசினஸ் மாடல் தனது வெற்றியைப் பதித்துள்ளது. எதிர்காலத்தில், வணிகம் இயங்கும் தளமாக மாறுவதற்கான வாய்ப்பை வாட்ஸ்அப் தற்போது முடக்கி விட ஆரம்பித்துள்ளது.
ஒவ்வொரு பயனரும் தற்போது வாட்ஸ்அப் செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பதால், அடுத்த நிலை மாற்றத்தை செயல்படுத்துவதில் பேஸ்புக் நிறுவனத்துக்கு அதிக சிரமம் இருப்பதாய் தெரியவில்லை.
இந்த கூட்டணியின் வெளிபாடு என்னவாக இருக்கும்?
ஜியோவின் ஆன்லைன் வணிக நிறுவனமான ஜியோமார்ட் தொடர்பாக இரு நிறுவனங்களும் ஒத்துழைக்கும் என்று தற்போது வரை கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இயங்கும் லட்சக் கணக்கான சிறு வணிகங்களுக்கு, தங்கு தடையற்ற ஆன்லைன் வர்த்தக இணைப்பை வாட்ஸ்அப் ஏற்படுத்தும். உள்ளூர் வணிகங்களை நிர்வகிக்க,வாட்ஸ்அப்-ன் இருப்பிடத் தரவை ஜியோ பயன்படுத்தலாம்.
'வாட்ஸ்அப் பே' சேவைக்கு (பணம் செலுத்தும் வசதி), இன்னும் இந்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது மட்டுமே தற்போது ஒரு தடை கல்லாக உள்ளது.
இந்தியாவில், தற்போது சோதனை வடிவில் இருக்கும் இந்த சேவை, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து மற்றொரு வாட்ஸ்அப் கணக்கிற்கு யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கிறது. இந்த செயலி நடைமுறைக்கு வந்ததும், வாட்ஸ்அப்-ல் இருந்தவாறே, தங்கள் அருகில் இருக்கும் மளிகை கடைகளில், பொருட்களை ஆர்டர் செய்யலாம்.
வாட்ஸ்அப்-ல் பணம் செலுத்தும் முறை மிகவும் எளிமையாக இருப்பதால், அது இந்தியாவுக்கு ஏற்றதாக அமைகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் இது குறித்து கூறுகையில், இந்தியா போன்ற நாடுகளில், வாட்ஸ்அப் பே இன்னும் ஆறு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக அறிவித்திருந்தார். அதுவரை, ஜியோமனி மூலம் ஒத்துழைப்பை இயக்க முடியும்.
பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கு எளிதான வாய்ப்பைப் பெறுவதோடு, வாட்ஸ்அப்-ன் மூலம் வணிக சூழல் உருவாகயிருப்பதால்,சிறு வணிகர்களுக்கு நன்மை பயக்குவதாய் அமையும்.
பேஸ்புக் உடனான ஒப்பந்தத்திலிருந்து ஜியோ என்ன பெறுகிறது ?
ஜியோவைப் பொறுத்தவரை, நாம் ஆன்லைனில் இருக்கும் முக்கால் வாசி நேரமும், ஏதேனும் ஒரு வகையில் ஜியோ நிறுவனத்தோடு தொடர்புபடுத்தி கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கலாம்.
மேலும், தங்களுக்கென்று தனியான வலைத்தளம் (அ) கட்டணம் நுழைவாயில் இல்லாத காரணத்தால் ஆன்லைன் வர்த்தகத்துக்குள் நுழைய முடியாத லட்சக்கணக்கான சிறு வணிகங்களை ஜியோ தன் பக்கம் இழுக்கும்.
வாட்ஸ்அப், ஜியோ நிறுவனத்துக்காக தன்னை சுருக்கி கொள்ளுமா ?
இல்லை, சிறுபான்மை பங்கு முதலீட்டுக்கான ஒப்பந்தம் என்பதால், பேஸ்புக் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் படவில்லை.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.