Advertisment

இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை; சமீபத்திய அறிக்கை கூறுவது என்ன?

இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு; சமீபத்திய அறிக்கை தெரிவிப்பது என்ன?

author-image
WebDesk
New Update
leopard

அகர்தலாவின் புறநகரில் உள்ள செபாஹிஜாலா வனவிலங்கு சரணாலயத்தில், கோடைக்காலத்தில், மரத்தடியில் ஓய்வெடுக்கும் சிறுத்தை. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: அபிசேக் சாஹா)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Anand Mohan J 

Advertisment

பிப்ரவரி 29 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை, 2022அறிக்கையின்படி, இந்தியாவில் 13,874 சிறுத்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2018 இல் 12,852 ஆக இருந்தது.

ஆங்கிலத்தில் படிக்க: What India’s latest leopard population estimates suggest

அந்த அறிக்கை என்ன சொல்கிறது, இந்தியாவில் சிறுத்தைகளின் பொதுவான நிலைமை எப்படி இருக்கிறது.

ஒட்டுமொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரிப்பு

இந்திய சிறுத்தைகள் (Panthera pardus fusca) இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் உள்ள பல்வேறு வன வாழ்விடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. மிகப்பெரிய வேட்டையாடுபவர்களாக இருப்பதால், அவை உணவுச் சங்கிலியின் உச்சியில் அமர்ந்து, சமநிலையான சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிங்கங்களைப் போலவே (பாந்தெரா லியோ), சிறுத்தைகள் மேற்கில் இருந்து இந்தியாவிற்கு வந்தன, பெரும்பாலும் எத்தியோப்பியாவிலிருந்து வந்தவை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அதிக எண்ணிக்கையில் சிறுத்தைகள் (8,820) உள்ளன, அதைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள் (3,596), மற்றும் சிவாலிக் குன்றுகள் மற்றும் கங்கைச் சமவெளிகளில் (1,109) மிதமான அளவில் உள்ளன. மாநில வாரியாக, மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் (3,907) உள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1,985), கர்நாடகா (1,879) மற்றும் தமிழ்நாடு (1,070) உள்ளன.

புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைப் போல சிறுத்தைகளின் எண்ணிக்கை வளரவில்லை என்பதை தரவு காட்டுகிறது. இது ஒரு சிறிய அதிகரிப்பு,” என்று இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) முன்னாள் டீன் ஒய்.வி ஜாலா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இருப்பினும், சிறுத்தைகள் வேட்டையாடுபவர்களுக்கான இலக்குகளாக தொடர்ந்து இருப்பதால், "நிலைமையை நிர்வகிப்பது திருப்தி அளிக்கிறது" என்று ஜாலா கூறினார்.

சில பிராந்தியங்களில் எண்ணிக்கை குறைவு

இருப்பினும், ஒரு சில பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஷிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகள் ஆண்டுக்கு 3.4% சரிவை பதிவு செய்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது, இது 2018 இல் 1,253 இல் இருந்து 2022 இல் 1,109 ஆக குறைந்துள்ளது.

பல மாநிலங்களிலும் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒடிசாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 2018 இல் 760 இல் இருந்து 2022 இல் 562 ஆகக் குறைந்துள்ளது, மேலும் உத்தரகாண்டில் 2018 இல் 839 ஆக இருந்த மக்கள் தொகை 2022 இல் 652 ஆகக் குறைந்துள்ளது. கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் கோவாவிலும் எண்ணிக்கை குறைந்துள்ளது.

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இதற்குப் பின்னால் உள்ள ஒரு காரணியாக இருக்கலாம். உத்தரகாண்ட் வனவிலங்கு அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது: ராஜாஜி மற்றும் கார்பெட் தேசியப் பூங்காக்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கை நிலையாக இருந்தாலும், ராம்நகர் வனப் பிரிவு புலிகளின் அடர்த்தி அதிகரித்ததன் காரணமாக சிறுத்தை எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவை பதிவு செய்துள்ளது.

பிற காரணிகளில் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற பல வெளிப்புற அச்சுறுத்தல்கள் அடங்கும். சிறுத்தை உயிரிழப்பதற்கு சாலை விபத்துகளும் ஒரு முக்கிய காரணம்.

புலி பாதுகாப்பு முயற்சிகளின் பலன்கள்

புலிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு சிறுத்தைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு கிடைக்கும் வாழ்விடத்தையும் வளங்களையும் மோசமாக பாதிக்கும் என்று அறியப்பட்டாலும், புலி பாதுகாப்பு முயற்சிகள் சிறுத்தைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவியது.

உதாரணமாக, மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் நிலப்பரப்பை எடுத்துக் கொள்ளுங்கள், இங்கு சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. வனவிலங்கு அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், "இந்த நிலப்பரப்பில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, பெரும்பாலும் புலிகள் பாதுகாப்பு என்ற குடையின் கீழ் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் இதற்கு காரணமாகும்," என்று கூறினர்.

"புலிகள் சிறுத்தைகள் மீது ஒழுங்குமுறை அழுத்தத்தை செலுத்தினாலும், வெளியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளுடன் ஒப்பிடும்போது புலிகள் காப்பகங்களில் சிறுத்தைகளின் அடர்த்தி அதிகமாக உள்ளது" என்று அறிக்கை கூறியது.

மத்தியப் பிரதேச முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு) அசீம் ஸ்ரீவஸ்தவா இந்த விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார். அவர் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் உள்ள புலி ஒரு குடை இனம். நாம் புலியைப் பாதுகாக்கும் போது, ​​இணை வேட்டையாடும் விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்விடத்தையும் பாதுகாக்கிறோம். புலிகள் பாதுகாப்பில் மாநிலம் மிகச் சிறந்த சாதனை படைத்துள்ளது மற்றும் சிறுத்தைகளுக்கு பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவத்சவா மேலும் கூறுகையில், "இரையின் தளத்தின் சிறந்த நிர்வாகத்தை மாநிலம் கொண்டுள்ளது", இது சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியது.

சிறுத்தை-மனித மோதல் கவலையளிக்கிறது

வாழ்விடங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் சிறுத்தைகளின் தகவமைப்புத் தன்மை, அவை விவசாய-மேய்ச்சல் பகுதிகள், தோட்டங்கள் மற்றும் மனித குடியிருப்புகளுக்கு அருகில் செழிக்க உதவுகின்றன. இதனால், சிறுத்தை-மனித மோதல் அதிகரித்து வருகிறது.

அறிக்கையின்படி, சிவாலிக் பகுதியில், சுமார் 65% சிறுத்தைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ளன. வனவிலங்குகளால் ஏற்படும் மனித இறப்பு மற்றும் காயங்களில் 30% சிறுத்தைகளால் ஏற்பட்டவை (கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,000 வழக்குகளில் 570) என்று உத்தரகாண்ட் வனத்துறை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, மகாராஷ்டிரா மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது, கடந்த ஏழு ஆண்டுகளில் 113 அபாயகரமான தாக்குதல்களைப் புகாரளித்துள்ளது, அதே நேரத்தில் கர்நாடகா 100 க்கும் மேற்பட்ட மனித-சிறுத்தை மோதல்களைப் பதிவு செய்துள்ளது. சுரங்கம் மற்றும் பிற மனித நடவடிக்கைகள் காரணமாக இந்த மோதல் அதிகரிப்பு பெரும்பாலும் வாழ்விட இழப்பு காரணமாக இருக்கலாம்.

கேரளாவில், 2013 முதல் 2019 வரை, மொத்தம் 547 மனித-சிறுத்தை மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 173 கால்நடைகள் இறப்பு அல்லது காயங்கள் (93 கால்நடைகள், 2 எருமைகள், 78 ஆடுகள்) அடங்கும்.

உத்தரபிரதேசத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் "10 கி.மீ.க்கும் குறைவான அகலத்தில்" இருப்பதால் தாக்குதல்கள் அதிகமாக நடந்துள்ளன. உ.பி.யின் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் குறித்த 2019 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில், “சிறுத்தையுடனான 38% மோதல்கள், பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்குள் அல்லது அருகில் இருக்கும்போது நிகழ்ந்தது. மேலும் 40% மோதல்கள் விவசாய வயல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 11% தாக்குதல்கள் விவசாய நிலங்களில் மலம் கழிக்கும் மக்கள் மீது இருந்தன.

தமிழ்நாட்டில், காடுகளால் சூழப்பட்ட காபி-தேயிலை தோட்டங்கள் மற்றும் பிற வணிகத் தோட்டங்கள் அடிக்கடி சிறுத்தைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன, காடுகளின் விளிம்புகளுக்கு அருகில் நிலம் மலிவானது என்பதால், தோட்டத் தொழிலாளர்கள் இந்த நிலங்களை வீடு கட்டுவதற்காக வாங்குகிறார்கள் என்று 2017 ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment