கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், கடந்த வெள்ளியன்று, இந்திய ஆயுதப் படைகளின் தென்கோடி விமான நிலையமான ஐ.என்.எஸ் பாஸைப் (INS Baaz) பார்வையிட்டார். அங்கு பணிபுரியும் பணியாளர்களுடன் ஒரு நாள் பொழுதை கழித்தார்.
யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தெற்கு மற்றும் மிகப்பெரிய தீவான கிரேட் நிக்கோபார் தீவில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவில் ஐ.என்.எஸ் பாஸ் அமைந்துள்ளது. இந்த தீவு இந்திரா பாயிண்ட்டின் இருப்பிடமாகவும், இந்தோனேசியாவின் பண்டா ஆச்சேவிலிருந்து கடல் வழியாக 250 கி.மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அவை பிராந்தியத்தில் கடல் பகுதிகளை கண்காணிக்க ஒரு முக்கியமான திறனை வழங்குகின்றன.
இந்திய கடற்படை வலைத்தளத்தின்படி, இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) ‘பாஸ்’ ஜூலை 2012 இல் செயல்படுத்தப்பட்டது. இது இந்திய ஆயுதப் படைகளின் தெற்குப் பகுதி விமான நிலையமாகும். இந்த தளம் அமைந்துள்ள காம்ப்பெல் விரிகுடா, இந்திய நிலப்பரப்பில் இருந்து 1,500 கி.மீ தூரத்திலும், போர்ட் பிளேயரிலிருந்து 500 கி.மீ தூரத்திலும் உள்ளது.
ஐ.என்.எஸ் பாஸின் முதன்மை செயல்பாடுகளில் விமானம் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி) ஆகியவற்றைப் பயன்படுத்தி வான்வழி கண்காணிப்பு வழியாக தகவல்களை வழங்குவதன் மூலம் கடல்சார் விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறது. இந்த தளம் முதலில் 3,500 அடி ஓடுபாதையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் பெரிய விமானங்களை அதிலிருந்து இயக்க ஏதுவாக நீட்டிக்கப்பட்டது.
இந்த இடம் இந்தியாவின் "கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான பாதை" என்று விவரிக்கப்பட்டுள்ளது, இது கிரேட் சேனல் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியப் பெருங்கடலின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும், இது கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்கிறது.
அதேசமயம், இது மலாக்கா ஜலசந்திக்கு அருகில் உள்ளது.
ஐ.என்.எஸ் பாஸ் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலில் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிறது, மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பின்படி, இந்திய கடற்படையின் கடல் கண்காணிப்பு திறனை கணிசமாக மேம்படுத்துகிறது.
மருத்துவ அவசர காலங்களில் வெளியேற்றத்தை எளிதாக்குவது போன்ற சூழலில் உள்ளூர் மக்களுக்கு இந்த தளம் உதவுகிறது.
இது அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்டின் ஒரு பகுதியாகும். 2001 ல் தொடங்கப்பட்ட இந்திய ஆயுதப்படைகளின் ஒரே முத்தரப்பு சேவையாகும்.