What is Long Covid, and how can one tackle it : லேசான கொரோனா பாதிப்புகளுடன் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட நோயாளிகள் தொற்றில் இருந்து மீண்ட வந்த பின்னும், மிதமான காய்ச்சல், உடல் வலி, மூச்சுத் திணறல், இருமல், மார்பில் கனத்தன்மை, நாட்பட்ட சோர்வு, மூட்டு வலிகள், தலைவலி, தூக்கமின்மை ஆகிய உடல் நலப் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி முதல் டோஸை மட்டும் எடுத்துக் கொண்டவர்கள், முதல் டோஸை எடுத்துக் கொண்ட பின் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என அனைவரும் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த 6 முதல் 8 வாரங்களுக்கு பிறகு தான் மீண்டும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள முடியும்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் அறிகுறிகள் எவ்வளவு காலம் நீடிக்கும்..?
மருத்துவர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற அறிகுறிகள் பொதுவாக 4 முதல் 12 வாரங்களிலிருந்து அல்லது சில சந்தர்ப்பங்களில் அதற்கு மேலும் நீடிக்கலாம். சில நேரங்களில் ஒரு நோயாளி இந்த அறிகுறிகளின் காரணமாக அவர்கள் மீண்டும் தொற்றுக்குள்ளானதைப் போல உணர்கிறார்கள். இத்தகைய நிலையையே கொரோனாவுக்கு பின்னான நோய் அறிகுறிகள் அல்லது நீண்ட கால கொரோனா பாதிப்பு என அழைக்கப்படுகிறது. இந்த சூழலில், இது போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் தங்கள் மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் தொற்று நோயியல் வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நீண்ட கால கொரோனா பாதிப்புகளுக்கு வழிவகுப்பது எது..?
கொரோனா வைரஸ் சுவாசப் பிரச்சினைகளை மட்டுமல்ல, இன்னும் பலவற்றையும் உடலில் ஏற்படுத்துகிறது. இது நுரையீரல், கல்லீரல், இதயம், நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலின் பல பாகங்களின் செயல்பாட்டை பாதிக்கும். இணை நோயுற்றவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட உறுப்புகளில் ஏற்படும் தாக்கம் அவர்களின் வாழ்க்கை முறைகள், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் அவற்றின் உறுப்புகளின் செயல்பாட்டைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடுகிறது. இதனால் தான், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பலர் நீண்ட கால கொரோனா பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த பாதிப்புகள் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும். பாதிக்கப்பட்ட உறுப்புகளை சரிசெய்ய நேரம் எடுக்கும். அதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அறிகுறிகளை அனுபவித்து வருவதாக முன்னாள் பொது அறுவை சிகிச்சை நிபுணர் அஜய் பாகா கூறியுள்ளார்.
இவற்றில் இருந்து மீள, நமது வாழ்க்கை முறை உதவுமா..?
இரண்டாவது அலைக்கு பிறகாக, தொற்றிலிருந்து மீண்ட பின், நீண்ட கால கொரோனா பாதிப்புகளுக்கு பெரும்பாலானோர் உள்ளாக கூடும் என தொற்று நோயியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தடுப்பூசி செலுத்தப்பட்டால் இந்த பாதிப்புகளை குறைக்க இயலும் என்ற போதிலும், தொற்றுக்கு உள்ளாகி மீண்ட பின் 6 முதல் 8 வாரங்களுக்கு பின்பு தான் செலுத்திக் கொள்ள இயலும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட கால கொரோனா பாதிப்பு அறிகுறிகளை கொண்ட நோயாளிகளைச் சமாளிக்க, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், இதற்கான ஒழுங்கு மையங்களைத் திறக்க பரிந்துரைத்துள்ளது. அந்த மையங்களில், சுவாசப் பயிற்சிகள், நுரையீரல் திறன் மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகள், குறுகிய மற்றும் நீண்ட நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள செய்யலாம்.
நோயிலிருந்து மீண்ட கொரோனா நோயாளிகளை முழுவதுமாக குணப்படுத்துவதும், அவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்துவதுமே அதன் முக்கிய நோக்கமாகும். ஏனெனில், இதுபோன்ற நோயாளிகள் கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையானது லேசான மற்றும் மிதமான உடல் பயிற்சிகளை உள்ளடக்கியது ஆகும். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சரியான இரத்த விநியோகத்தை வழங்க உதவும். மேலும், இதுபோன்ற மக்கள் கோவிட் நோய்த்தொற்றின் போது குறைந்து விட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வலிமையைப் பெறத் தொடங்குவார்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பரம்ஜித் மான் கூறியுள்ளார். பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதைத் தவிர, உடற்பயிற்சி உளவியல் ரீதியாகவும் நன்றாக உணர்கிறது விளைவைக் கொண்டுள்ளது.
ஒரு செயலற்ற வாழ்க்கை முறை எதிர்மறையான எண்ணங்களுக்கு வழிவகுக்கும். இந்த நிலை, கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலங்களில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. ஆரோக்கிய உணவுகளான பச்சை காய்கறிகள், பருவகால பழங்கள் ஆகியவை சாப்பிட்டும், சத்தற்ற பாஸ்ட் ஃபுட், வறுத்த உணவு அகியவற்றை தவிர்க்வும் வேண்டும். சரியான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றன
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”