Advertisment

நேட்டோ படை என்றால் என்ன? உக்ரைன் இதில் இணைவதால் ரஷ்யாவுக்கு என்ன ஆபத்து?

ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடைபெறும் எனில் அது நேட்டோ நாட்டினர் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்கிறது நேட்டோ உடன்படிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
What is NATO and why is Russia so insecure

What is NATO and why is Russia so insecure : தற்போது கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்று வரும் போரின் முக்கியமான சில காரணங்களில் ஒன்று உக்ரைன் நேட்டோ படையுடன் சேர விருப்பம் தெரிவித்தது. அமெரிக்க தலைமையிலான மேற்கு உலக நாடுகளின் ராணுவக் கூட்டணியே இந்த நேட்டோ படை. அதிபர் விளாடிமிர் புதினை பொறுத்த வரை உக்ரைன் இந்த நேட்டோ படையில் இணைவது ரஷ்யாவின் வாழ்வா சாவா என்பது தொடர்பான அச்சுறுத்தலாக உள்ளது. இந்த காரணத்தின் பேரிலும், 1945-க்குப் பின்னாள் ஐரோப்ப நாடுகள் காணாத வகையில் ரஷ்யா உக்ரைன் மீது தன்னுடைய போரை தொடுத்துள்ளது.

Advertisment

கூட்டு ராணுவப் படை

நேட்டோ படை அல்லது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு 1949ம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளால், சோவியத் ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள உருவாக்கப்பட்டது. இது மேற்கத்திய நாட்டு எல்லைகளுக்கு வெளியே அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முதல் அமைதிப்படையாக கருதப்படுகிறது.

30 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் இந்த அமைப்பு பெல்ஜியம் நாட்டின் தலைநகரம் ப்ரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது. இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள இதர நாடுகளின் கமாண்டிங் ஆப்பரேஷன் அலுவலகம் பெல்ஜியத்தின் மோன்ஸ் பகுதியில் அமைந்துள்ளது.

வெளிப்புற தாக்குதல்களை நேட்டோ நாடுகள் எதிர்க்கொள்ளும் பட்சத்தில் பரஸ்பர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்நாடுகள் ஒப்பந்தமிட்டுள்ளனர். கூட்டு பாதுகாப்பு படை என்பது நேட்டோவின் மையமாக உள்ளது. இது உறுப்பினர்களை ஒன்றாக இணைக்கும் ஒரு தனித்துவமான மற்றும் நீடித்த கொள்கை ஆகும். இதர நாடுகளை பாதுகாக்க மற்றும் கூட்டணிக்குள் ஒற்றுமை உணர்வை உருவாக்குகிறது இந்த அம்சம்.

இந்த அம்சம் தொடர்பாக விரிவான விளக்கம், நேட்டோ உருவாக்கத்தின் போது எழுதப்பட்ட உடன்படிக்கையின் பிரிவு 5-ல் இடம் பெற்றுள்ளது.

“ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடைபெறும் எனில் அது நேட்டோ நாட்டினர் மீதான தாக்குதலாகவே கருதப்படும். ஒரு நாட்டின் மீது ஏதேனும் வெளிப்புற தாக்குதல் நடைபெறும் எனில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ அந்த தாக்குதலுக்கு எதிராக, நாட்டின் பாதுகாப்பிற்காக பதில் தாக்குதலை நடத்தலாம் என்பது ஏற்கனவே ஐ.நா சாசனத்தின் பிரிவு 51-ல் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமையாக உள்ளது. இந்த உரிமையின் கீழ் பாதிக்கப்பட்ட நாட்டின், நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆயுதம் ஏந்திய தாக்குதல் உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வடக்கு அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம்” என்று பிரிவு 5-ல் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் இடையே இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தக் காரணம் என்ன?

தோற்றம் மற்றும் பின்னணி

இரண்டாம் உலகப்போரின் முடிவில், மோசமாக பாதிப்படைந்திருந்த ஐரோப்பிய நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயன்று கொண்டிருந்தன. அன்று பொருளாதார சக்தியாக கருதப்பட்ட அமெரிக்கா, கம்யூனிச சோவியத் ஒன்றிய மேற்கு நோக்கி விரிவடைவதை தடுக்க மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன், ஐரோப்பாவை மீள் கட்டமைப்பு செய்ய ஒரு திட்டத்தை முன்வைத்தது. அதன் வழியே பொருளாதார உதவிகளை அதிகப்படியாக ஐரோப்பாவிற்கு வழங்கியது அமெரிக்கா.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஹாரி எஸ் ட்ரூமனின் வெளியுறவுத்துறை செயலர் ஜார்ஜ் சி மார்ஷ் என்பவரின் பெயரில் மார்ஷல் திட்டம் அல்லது ஐரோப்பிய மீட்பு திட்டத்தை அமெரிக்கா அறிமுகம் செய்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பகிரப்பட்ட நலன்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தியது அமெரிக்கா. இந்த மார்ஷெல் திட்டத்தில் சோவியத் ஒன்றியம் பங்கேற்க மறுத்ததோடு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்க முயன்ற அமெரிக்காவின் பொருளாதார உதவியை பெற வேண்டாம் என்றும் கூறியது.

1946 - 49 காலகட்டங்களில் நடைபெற்ற க்ரீக் உள்நாட்டு போரின் போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சோவியத்தின் ஆதரவை பெற்ற கம்யூனிஸ்ட் அமைப்பு க்ரீஸை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சியை முறியடித்தது. மேற்கு நாடுகள் துருக்கிக்கு பின்னாள் நிற்க, துருக்கியோ, . போஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ஜலசந்தியை (கருங்கடல் மற்றும் மர்மாரா கடல் மற்றும் மர்மாரா மற்றும் ஏஜியன் கடல் ஆகியவற்றை முறையே இணைக்கும்) கைப்பற்ற நினைத்த சோவியத் யூனியனுக்கு எதிராக நின்றது. 1947-48 காலங்களில் துருக்கி மற்றும் க்ரீஸ் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட கம்யூனிச எழுச்சிகளை கட்டுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டது.

செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் ராணுவ ஆட்சிக்கு ஸ்டாலினின் அரசு 1948ம் ஆண்டு உதவி புரிந்தது. இது சோவியத் ஆதிக்கம் செலுத்திய கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கத்திய கொள்கைகளைக் கொண்ட மேற்கு ஜெர்மனியுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்ட நாட்டில் கம்யூனிச கட்சியின் ஆட்சிக்கு வழி வகை செய்தது. போருக்கு பிந்தைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் 1948 - 49 கால கட்டங்களில் சோவியத் மேற்கு பெர்லினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் 11 மாதங்கள் மிகப்பெரிய நெருக்கடி நிலவியது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணி அவசியம் என்ற முடிவுக்கு அமெரிக்காவை இட்டுச் சென்றது. ஐரோப்பியர்களும் ஒரு கூட்டுப் பாதுகாப்பு தேவையின் அவசியத்தை நம்பினார்கள். எனவே 1948ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் ப்ரஸ்ஸல்ஸ் ஒப்பந்தத்தில் கூட்டு பாதுகாப்பு படைக்காக கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகள் ஏதேனும் பாதிப்பை சந்தித்தால் இதர நாடுகள் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பது இந்த உடன்படிக்கையில் சிறப்பு அம்சமாக இடம் பெற்றது.

சில மாதங்களுக்கு பிறகு, ஐ.நா. சாசனத்திற்குள் ஆனால் பாதுகாப்பு கவுன்சிலுக்கு வெளியே செயல்படும் பரஸ்பர பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கும் சுதந்திரமான உலகப் பாதுகாப்பிற்கும் ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை கூறும் வான்டென்பர்க் தீர்மானம் ஒன்றை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியது. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்பதால் அந்த அமைப்பிற்கு வெளியே இத்தகைய முடிவு தேவை என்று கருதப்பட்டது.

வான்டென்பர்க் தீர்மானம் நாட்டோவின் முதல் படியாக கருதப்பட்டது. ப்ரஸ்ஸல்ஸ் ஒப்பந்த நாடுகள் மட்டுமின்றி இதர நாடுகளையும் இணைத்தால் இது மேலும் திறம்பட செயல்படும் என்று அமெரிக்கா நம்பியது. வடக்கு அட்லாண்டிக் நாடுகளான கனடா, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, ஐயர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளையும் உள்ளடக்கியது. இந்த நாடுகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலின் இரண்டு கரைகளை இணைக்கும் பாலமாக பார்த்தது அமெரிக்கா.

ஆரம்பத்தில் 12 உறுப்பு நாடுகளை கொண்டு நேட்டோ 1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாசிங்டனில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம், நார்வே, போர்ச்சுகல், நெதர்லாந்து, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் இதில் இடம் பெற்றன.

நேட்டோ விரிவாக்கம்

க்ரீஸ் மற்றும் துருக்கி நாடுகள் 1952-ல் இணைந்தன. ஜெர்மனியின் ஃபெட்ரல் குடியரசு (மேற்கு ஜெர்மனி) 1955லும், ஸ்பெய்ன் 1982லும் இணைந்தன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உறுப்புகளாக இருந்த செக் குடியரசு, ஹங்கேரி, போலாந்து போன்ற நாடுகள், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு 1999ல் நேட்டோவுடன் இணைந்தன.

பல்கேரியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா 2004ம் ஆண்டிலும், அல்பானியா, க்ரோசியா 2009ம் ஆண்டிலும் மோண்டேனேக்ரோ 2017ம் ஆண்டிலும், 2020ம் ஆண்டில் வடக்கு மசிடோனியாவும் நேட்டோவில் இணைந்தன.

ரஷ்யாவின் பதட்டம்

நேட்டோவின் உருவாக்கம் தான் சோவியத்தை பதட்டம் அடைய வைத்தது. 1955ம் ஆண்டு சோவியத் யூனியன் சொந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இது வர்சாவ் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. இதில் போலாந்து, செக்கோஸ்லோவாக்கியா, அல்பானியா, பல்கேரியா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி மற்றும் ரோமானியா போன்ற நாடுகள் இடம் பெற்றன.

பனிப்போரின் முடிவில் வார்சாவ் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. 1991ம் ஆண்டு ஒப்பந்தம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. இதன் உறுப்பு நாடுகளாக இருந்த சோவியத் யூனியன், செக்கோஸ்லோவாக்கியா, மற்றும் கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளின் இருப்பும் முடிவுக்கு வந்தது. இதர ஐந்து நாடுகள் நேட்டோவின் உறுப்பு நாடுகளாக மாறின.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகான சிறிது காலங்கள் கழித்து, புடினின் ஆட்சியின் கீழ் இருக்கும் ரஷ்யா தொடர்ந்து மேற்கு நாடுகள் மீதான அச்சத்தையும் சந்தேக பார்வையையும் எப்போதுமே கொண்டிருக்கிறது. ரஷ்யாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ள மூன்று பால்டிக் நாடுகளும் நேட்டோ உறுப்பினர்களாக இருக்கின்ற நிலையில் உக்ரைன் மற்றும் பெலராஸ் நாடுகள் நாடுகள் மட்டுமே மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பிற்கு வெளியே உள்ளன.

கிரெம்ளினின் கண்ணோட்டத்தில், அதன் தெற்கு மற்றும் மேற்கு எல்லையில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒரு பாதுகாக்கப்பட்ட இடைவெளியை வைத்திருப்பது ரஷ்யாவிற்கு மிகவும் முக்கியமானது. நேட்டோவின் அணு ஆயுத குடைக்குள் உள்ள உக்ரைனால் மாஸ்கோவில் இருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஏவுதளத்தை வைத்துக் கொள்ள முடியும், கருங்கடலில் சூடான நீர் துறைமுகங்களை ரஷ்யா அணுகுவதை தடுக்க முடியும் என்பது போன்ற காரணங்களால் தான் 2014ம் ஆண்டு க்ரீமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia Nato
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment