பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தைத் திங்கள்கிழமை தொடங்கினார். இது இந்தியாவின் பொது சுகாதாரத் துறையில் உள்ள மூன்று முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய முயல்கிறது: சிகிச்சைக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்; நோயைக் கண்டறிவதற்காக ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களை அமைத்தல் மற்றும் தொற்றுநோய்களை ஆய்வு செய்யும் தற்போதைய ஆராய்ச்சி நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதாகும்.
பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் என்றால் என்ன?
நீண்ட கால பொது சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் 2005ம் ஆண்டிலிருந்து இது இந்தியா தழுவிய மிகப்பெரிய திட்டமாகும். இது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. 2021-22 நிதியாண்டிலிருந்து 2025-26 வரை இத்திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.64,180 கோடி செலவிட உள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கூறு என்ன?
இந்த திட்டத்தின் முதல் கூறு தொற்று நோய்களின் விரிவான கண்காணிப்பை நிறுவுவதாகும்.
மாவட்ட அளவில், 730 மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்படும். மாநில அளவில், நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் ஐந்து பிராந்தியக் கிளைகள் மற்றும் 20 பெருநகரப் பிரிவுகள். மேலும் தேசிய அளவில், ஒரு ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP) நிறுவப்படும்.
இந்த திட்டத்தின் இரண்டாவது கூறு என்ன?
இரண்டாவது கூறு விரிவாக நோயறிதல் மற்றும் சிகிச்சை வசதிகளை உருவாக்குவதாகும். மாவட்ட அளவில், 17,788 புதிய கிராமப்புற சுகாதார மற்றும் நல மையங்கள் அமைக்கப்படும்; 11,024 புதிய நகர்ப்புற சுகாதார மற்றும் நல மையங்கள் அமைக்கப்படும்; 602 மாவட்டங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தீவிர சிகிச்சை மருத்துவமனைக் கட்டடங்கள் நிறுவப்படும்.
மாநில அளவில், 15 சுகாதார அவசர அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். தேசிய அளவில், இரண்டு நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்; 12 இந்திய அரசு மருத்துவமனைகளில் முக்கியமான பராமரிப்பு மருத்துவமனைத் கட்டடங்கள் அமைக்கப்படும் – அவை பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வழிகாட்டி நிறுவனங்களாகவும் செயல்படும்.
இந்த திட்டத்தின் மூன்றாவது கூறு எது?
இந்த திட்டத்தின் மூன்றாவது கூறு விரிவான தொற்றுநோய் ஆராய்ச்சியாக இருக்கும். மாவட்ட அளவில், தற்போதுள்ள 80 வைரஸ் நோய் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சி கூடங்களை பலப்படுத்தப்படும். மாநில அளவில், 15 புதிய உயிர் பாதுகாப்பு IIIம் நிலை ஆய்வகங்கள் செயல்படும்.
தேசிய அளவில், வைராலஜிக்கான நான்கு புதிய பிராந்திய தேசிய நிறுவனங்கள் செயல்படும் மற்றும் உலக சுகாதார நிறுவனம், தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்திற்கான பிராந்திய ஆராய்ச்சி தளம் (டிஜிட்டல்) அமைக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“