ரஜினிகாந்த் உடல்நிலை பிரச்னைகள் மற்றும் தொற்றுநோயைக் காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த காலங்களில் அவர் வெளியிட்ட “ஆன்மீக” அறிக்கைகளைப் போலவே, 71 வயதான அவர் தனது முடிவை கடவுளிடம் விட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்: “இதை நான் (மருத்துவமனையில் சேர்ப்பது) கடவுள் எனக்கு அளித்த எச்சரிக்கையாகவே பார்க்கிறேன். தொற்றுநோய்க்கு மத்தியில் எனது பிரச்சாரம் உடல்நலத்தைப் பாதிக்கும்.” என்று தெரிவித்தார்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவரது அரசியல் வருகை பற்றிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. 2017 டிசம்பரில் அவர் அரசியலில் நுழைவதாக முதல் அறிவிப்பை வெளியிட்டார். அவருடைய அரசியல் வருகையைப் பற்றி இந்த மாத தொடக்கத்தில் கட்சி தொடங்குவது பற்றிய மற்றொரு உறுதியான அறிக்கையை வெளியிட்டார். அதற்குப் பிறகு, ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை தனது பிரவேசம் தொடர்பான அனைத்து அரசியல் திட்டங்களையும் கைவிடுவதாகத் தெரிவித்தார்.
அவர் 2021 ஜனவரியில் தனது கட்சியைத் தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசியல் பிரவேசத்தை கைவிடும் அறிக்கை வந்துள்ளது. மே, 2021-இல் தமிழகம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது.
அவருடயை அண்ணாத்த திரைப்பட தயாரிப்பு படக்குழுவினரில் சிலருக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதற்கு முன்பே அரசியலில் இருந்து வெளியேற முடிவு செய்தது ஏன்?
தொற்றுநோய்க்கு மத்தியில் ரஜினிகாந்த்தின் உடல்நிலை அவரை அரசியலுக்குள் நுழைவதை அனுமதிக்காது என்பதை அவரது ரசிகர்கள் பலர் ஒப்புக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மற்ற அரசியல்வாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதால் அவரது அரசியல் நுழைவு குறித்து ரசிகர்களில் ஒரு பகுதியினர் ஆர்வமாக இருந்தனர். அவரது அரசியல் நுழைவு பாஜகவுக்கு மாநிலத்தில் திராவிட எதிர்ப்பு முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கு அத்தியாவசியமானதாகக் கருதப்பட்டது. ஏனெனில், நடிகர் ரஜினிகாந்த் பெரும்பாலும் தேசியவாத மற்றும் ஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நிலை மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் ஆகியவை அவரது அரசியல் நுழைவுக்கு எதிராக முடிவெடுப்பதற்கான முக்கிய காரணங்கள் என்று குறிப்பிட்டார். மேலும், அவர் எடுத்துக்கொண்டிருக்கும் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ரஜினிகாந்த் டிசம்பர் 2017 மற்றும் இம்மாத தொடக்கத்தில் தான் அரசியலில் நுழைவது குறித்து அறிவித்தபோதும் அவருக்கு இந்த உடல்நல ஆபத்துகள் இருந்தன.
அனாலும், கடந்த வாரம் இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய மாறுபாடு அவருடைய மனதை மாற்றிக்கொள்ள செய்ததா? அவரது விமர்சகர்களும், சமூக ஊடகங்களில் பலரும், இது புதுடெல்லியில் உள்ள அதிகார மையங்களைக் கையாள்வதற்கு ரஜினி மேற்கொள்ளும் ஒரு உத்தியாகவே பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் முகாமில் ஆரம்பத்தில் நடந்த விவாதங்களைப் பற்றி அறிந்த ஒருவர், தேசியக் கட்சியின் வேண்டுகோள்களிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் அவர் இப்படி செய்வதாகக் கூறினார்.
உண்மையில், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை வழக்கத்திற்கு மாறானது. ஏனெனில் அவரது உடல்நிலை குறித்து பல விவரங்களை அது வெளிப்படுத்தியது. அதே நேரத்தில் “கோவிட் -19 தொற்று ஆபத்தை அதிகரிக்கும் எந்தவொரு செயலையும் தவிர்க்க மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
“அவர் இந்த சூறாவளியிலிருந்து தப்பிக்க விரும்பினார். அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்துவிட்டார்” என்று ரஜினிகாந்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்தது.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தைக் கைவிட்டது இப்போது சட்டமன்ற தேர்தல் சூழ்நிலையை எவ்வாறு மாற்றும்?
இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளின் வாக்கு தளமே ஆட்சி அமைப்பதை தேர்ந்தெடுகிற ஒரு மாநிலத்தில், ரஜினிகாந்த் முன்மொழிந்த அரசியல் திட்டங்கள் ஒரு முக்கோண போட்டி ஏற்படும் என்ற தோற்றத்தை உருவாக்கியது. மற்றொரு நடிகரான கமல்ஹாசன் தனியாக போட்டியிடும் வாய்ப்புகள் கூட இருந்தன. மேலும், ஓ.பி.சி பிரிவில் உள்ள வன்னியர் பின்புலம் கொண்ட பாமக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க.அழகிரி ஆகியோரும் அவருடைய அணியில் இணைவதற்குகூட வாய்ப்புகள் இருந்தன.
இருப்பினும், ரஜினிகாந்த் இல்லாத நிலையில், பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் ஆளும் அதிமுக மற்றும் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியான திமுக ஆட்சியைப் பிடிப்பதற்கான தேர்தல் வழக்கமான இரு முனை போட்டியாக மாறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவரது பணியை நன்றாக செய்துள்ளபோதிலும் திமுகவுக்கு ஆதரவாக பல காரணிகள் உள்ளன.
அதிமுக அதிருப்தி தலைவரும் அமமுகவை உருவாக்கிய டிடிவி தினகரனும், சீமானின் நாம் தமிழர் கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை 10 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற வாய்ப்பில்லை என்பதால் மற்ற தனிப்பட்ட கட்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
உடல்நலக் காரணங்களை சுட்டிக்காட்டி ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தில் இருந்து விலகியிருப்பது, பாஜகவின் நோக்கம் மற்றும் இருப்பு ஆகியவற்றைக் குறைக்கும். ஏனென்றால், அதிமுக கூட்டணியில் கூட்டணி ஆட்சியைப் பற்றி பேச அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்காது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக தாக்கத்தை செலுத்த அவர்களுக்கு ரஜினிகாந்த் கட்சியும் இல்லை.
ரஜினிகாந்த் 1996 இல் இருந்ததைப் போல ஒரு நடிகராக மீண்டும் தனது அரசியல் குரலை உயர்த்துவாரா?
ஆர்.எஸ்.எஸ் முகாமினரும் அவருடைய சில ரசிகர்களும், நடிகர் ரஜினிகாந்த் அவர் ஒரு கட்சியை உருவாக்காவிட்டாலும், திராவிட முன்னணிக்கு எதிராக தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவார் என்று கூறி வருகின்றனர்.
இருப்பினும், அவர் அப்படி செய்ய மாட்டார் என்று ரஜினிகாந்த்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. “அவருக்கு கோரிக்கைகள் இருந்தன. அவர் கைகள் கட்டபட்டு கடைமைப்பட்டிருந்தார் என்பதால் விஷயங்களை தனது வழியில் செய்ய முடியவில்லை. இருப்பினும், இப்போது அவர் தனது மனதை மாற்றிக் கொண்டதால், அரசியல் நிகழ்வுகளில் அவர் தலையிட மாட்டார். அவர் இப்போது மிகவும் நிம்மதியாக இருக்கிறார். அவர் விரைவில் ஓரிரு திரைப்படத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடும்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
தேர்தல் அரசியலில் ரஜினிகாந்த்தின் முக்கியத்துவம் என்ன?
கட்சி இல்லை அல்லது அரசியல் வேலையும் இல்லை, மக்களை சந்திக்கவில்லை அல்லது மாநிலத்தில் பயனம் செய்யவில்லை. ரஜினிகாந்த் முன்மொழிந்த கட்சி செவ்வாய்க்கிழமை வரை வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்தது. அவருடைய அரசியல் பிரவேசம் மிகவும் தாமதமானதோடு மட்டுமில்லாமல், தனிப்பட்ட காரணங்கள் உள்பட அவர் அரசியலில் நுழைவார் என்று காட்டாயப்படுத்திய தோற்றம் என பல காரணங்களால் அவர் குழப்பமடைந்தார்.
கடைசியாக அவர் தனது அரசியல் திட்டங்களை நிறுத்த முடிவு செய்தபோது, அது ஒருபோதும் பிறக்காத ஒரு மிகைப்படுத்தப்பட்ட அரசியல் கட்சியை கைவிடுவதைத் தவிர வேறொன்றுமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.