காந்தாரா, செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஒரு கன்னட படம். இந்தப் படத்துக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. ஐஎம்டிபியில் படத்துக்கு 10க்கு 9.3 ரேட்டிங் கிடைத்துள்ளது.
படம் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்தப் படம் தொடர்பாக சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் குமார் மீது அவரின் கருத்துகளுக்காக புகார்கள் அளிக்கப்பட்டன.
இதன் பேரில் நடிகர் சேத்தன் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 505 (2) (பகை வெறுப்பை ஊக்குவிக்கும் தீய அறிக்கைகள்) உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நடிகர் சேத்தன் குமார் மீது பஜ்ரங் தளம் (பெங்களூரு வடக்கு) ஒருங்கிணைப்பாளர் சிவ குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காந்தாரா படம் எதைப் பற்றியது?
கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கற்பனை கதையான இப்படம் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவுகள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மன அமைதி தேடி அழையும் மன்னர் 1847இல் வனத்துக்கு வருகிறார். அப்போது வன தெய்வமான பஞ்சுர்லியை தன்னுடன் அழைத்துச் செல்கிறார். தொடர்ந்து வனத்தில் அம்மக்களுக்கு உரிமையை வழங்குகிறார்.
பின்னாள்களில் (1990) வன அதிகாரி காட்டை ரிசர்வ் காடு என்கிறார். இதற்கிடையில் மன்னரின் வழித்தோன்றல் வருகிறார். காடுகளின் வாழும் மக்களின் அதிகாரப்பூர்வமற்ற தலைவனான ரிஷப் ஷெட்டி வருகிறார்.
படத்தில் காட்டப்பட்டுள்ள பூத கோலா (Bhoota Kola) மீது சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் பூத கோலா கர்நாடகாவின் கடற்கரை நகரங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய திருவிழா ஆகும்.
பூத கோலா என்றால் என்ன?
பூத கோலா என்பது ஆவிகள், குல தெய்வங்களை வழிபடும் வருடாந்திர சடங்கு நிகழ்ச்சியாகும்.சடங்கு செய்யும் நபர் தற்காலிகமாக கடவுளாக மாறிவிட்டார் என்று நம்பப்படுகிறது.
தற்போது, தட்சிண கன்னடா, உத்தர கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் துளு மொழி பேசும் பகுதிகளில் பல 'பூதங்கள்' வழிபடப்படுகின்றன.
இது பொதுவாக சிறிய உள்ளூர் சமூகங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிகழ்த்தப்படுகிறது.
என்ன சர்ச்சை
படத்தில் பூத கோலா தெய்வம் தொடர்பான காட்சிகள் பெருமளவு பேசப்பட்டுவருகின்றன. இந்நிலையில் நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் குமார், “பூத கோலாவை ரிஷப் ஷெட்டி இந்துக்களின் தெய்வம் என்கிறார்.
இது தவறு. பூத கோலா வன தெய்வம், ஆதிவாசிகளின் தெய்வம். பின்னாள்களில் இதனை ஆரியர்கள் தன்வசப்படுத்திக் கொண்டனர் எனக் கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சை ஆன நிலையில் சேத்தன் குமார் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இது தொடர்பாக பேசிய ஸ்ரீ ராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக், “காந்தாரா படம் இந்துக்களின் கலாசாரத்தை பறைசாற்றுகிறது.
சேத்தனுக்கு இந்துக்களின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் தெரியவில்லை. அவர் ஒரு கடவுள் நம்பிக்கையற்ற இடதுசாரி. நிலத்தின் கலாசாரத்தை விமர்சிக்கும் குழுவை சேர்ந்தவர். சமூகத்தின் அமைதியை கெடுக்க முயற்சிக்கிறார்” என்றார்.
இதற்கிடையில் சேத்தன் குமாருக்கு பட்டியலின அமைப்பை சேர்ந்த சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், கன்னட எழுத்தாளர் கே.எஸ். பகவானும் ஆதரவு அளித்துள்ளார். அதில், “சேத்தன் குமாரின் கருத்துகள் சரியானவை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பூத கோலா என்பது முன்னாள்களில் கிடையாது. வேத காலத்துக்கு பின்னரே உருவானது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil