What is the Sixth Schedule : லடாக் தொகுதியின் பாஜக எம்.பியான ஜம்யாங் செரிங் நம்கையால் (Jamyang Tsering Namgyal) செவ்வாய்க்கிழமை அன்று லடாக் தொகுதியின் நிலப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, கலாச்சார அடையாளங்களை பாதுகாக்கும் பொருட்டு அப்பகுதியை இந்திய அரசியல் அமைப்பு அட்டவணை 6-ன் கீழ் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். லடாக்கில், மாநில அந்தஸ்த்து கோரி ஒரு நாள் கடையடைப்பு நடைபெற்ற நிலையில் நம்கையாலின் கோரிக்கை இடம் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக் 2019ம் ஆண்டு பிரிக்கப்பட்ட பிறகு, அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி இக்கோரிக்கையை எழுப்பி வந்தனர்.
அட்டவணை 6 என்றால் என்ன?
அட்டவணை 6-ன் கீழ், இந்திய அரசியல் சாசனப் பிரிவு 244, குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு சட்டமன்ற, நீதி மற்றும் நிர்வாகம் தொடர்பான தன்னாட்சி முடிவுகளை மாநிலங்களுக்குள்ளே எடுத்துக்கொள்ள உரிமை அளிக்கும், தன்னாட்சி மாவட்ட குழுக்களை ( Autonomous District Councils (ADCs)) அமைக்க வழிவகை செய்கிறது.
இந்த குழுக்களின் பதவி காலம் 5 ஆண்டுகளாகும். 30 உறுப்பினர்கள் இதில் இடம் பெறுவார்கள். நிலம், காடு, நீர், விவசாயம், கிராம குழுக்கள், ஆரோக்கியம், சுகாதாரம், கிராம மற்றும் நகர அளவிலான பாதுகாப்பு, வாரிசு, திருமணங்கள், விவாகரத்து, சமூக பழக்க வழக்கங்கள் தொடர்பான சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை இக்குழுக்கள் உருவாக்கும். விதிவிலக்காக அசாமில் அமைந்துள்ள போடோலேண்ட் பிராந்திய குழுவில் மட்டும் 40 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் 39 விவகாரங்கள் தொடர்பாக சட்டங்களை உருவாக்குகின்றனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம் (ஒவ்வொரு மாநிலத்திலும் தலா மூன்று மாவட்ட குழுக்கள் உள்ளன), திரிபுரா (1 மாவட்ட குழு) மாநிலங்கள் அட்டவணை 6-ல் இடம் பெற்றுள்ளன.
இந்த அட்டவணையில் இடம் பெற ஏன் லடாக் விரும்புகிறது?
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வந்த பிறகு லடாக்கில், குறிப்பாக லெஹ் பகுதியில் மக்கள் இந்த முடிவுக்கு வரவேற்பளித்தனர். முந்தைய ஜம்மு காஷ்மீரின் மாநில அரசுகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக உணர்ந்த, புத்த மதத்தினர் அதிகமாக வசிக்கும், லெஹ் மாவட்டம் வெகுநாட்களாக யூனியன் பிரதேச கோரிக்கையை எழுப்பி வந்தது.
“காஷ்மீரின் கீழ் எங்களின் வளர்ச்சி, அரசியல் தேவைகள், அடையாளம், மொழி என அனைத்தும் பிரிவு 370-ஆல் அழிந்து போனது. பிரதார் நரேந்திர மோடி எங்களின் அரசியல் தேவைகளுக்கும், வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார். லடாக் மக்களின் பங்களிப்பையும் அவர் அங்கீகரித்துள்ளார்” என்று நம்கையால் நாடாளுமன்றத்தில் இவ்வாறு பேசினார்.
தமிழ்நாட்டில் 50% பழங்குடியின பெண்கள் படிப்பறிவற்றவர்கள் – மத்திய அமைச்சர் தகவல்
ஆனால் இந்த மகிழ்ச்சி, ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும் ஆனால் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இல்லை என்ற மத்திய அரசின் முடிவால் நீடிக்கவில்லை. முந்தைய ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் லடாக் பிராந்தியத்தில் இருந்து 4 மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தற்போது பிராந்தியம் முழுவதும் அதிகாரிகளின் கைகளில் உள்ளது. ஸ்ரீநகரைக் காட்டிலும் அரசு தற்போது லடாக்கில் இருந்து வெகுதொலைவில் சென்றுவிட்டதாக மக்கள் உணருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் குடியிருப்பு கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் லடாக்கின் நிலம், வேலை வாய்ப்பு, மற்றும் கலாச்சார அடையாளங்கள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் நிலவி வருகிறது.
லடாக்கில் ஹெஹ் மற்றும் கார்கில் பகுதிகளில் இரண்டு மலைக்குழுக்கள் (Hill Councils) செயல்பட்டு வருகின்றன. ஆனால் இவை இரண்டும் அட்டவணை 6ன் கீழ் இடம் பெறவில்லை. இந்த குழுக்களின் அதிகாரங்கள் சில உள்ளூர் வரிகளை வசூலிப்பதோடு நின்றுவிடுகிறது. நிலம் தொடர்பான அதிகாரங்கள் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளன.
லெஹ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நம்கையால் மக்களவையில், லடாக் மலை மேம்பாட்டு குழு சட்டத்தில் (Ladakh Hill Development Council Act) மாற்றங்களை கொண்டு வந்து மத்திய அரசு, நிர்வாகம் மற்றும் துணை நிலை ஆளுநரின் பொறுப்புகள் என்ன என்பதை வரையறுக்க வேண்டும் என்று செவ்வாய் கிழமை அன்று கேட்டுக் கொண்டார்.
உள்ளூர் அரசியல் நிலவரம் என்ன?
லெஹ் பகுதிகளில் செயல்பட்டு வரும் சமூக, மத மற்றும் அரசியல் பிரதிநிதிகள் 6வது அட்டவணையில் இடம் பெறுவதை தாண்டியும், லடாக்கிற்கு மாநில அந்தஸ்த்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். திங்கள் கிழமை அன்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் கடையடைப்பில் ஈடுபட்டனர். இதே போன்று, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் லெஹ்கிற்கு ஆகஸ்ட் மாதம் பயணம் மேற்கொண்ட போதும் பொதுமக்கள் கடையடைப்பில் ஈடுபட்டனர்.
ஷியா இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கார்கில் மாவட்டத்தைப் பொறுத்த வரை சிறப்பு அந்தஸ்த்தை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே முன்வைக்கப்படுகிறது. சட்டமன்றம் அமைப்பதற்கான அனுமதியை பெற்ற ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தோடு தங்களை இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். சமூக, மத மற்றும் அரசியல் குழுக்கள் அனைவரும் கார்கில் ஜனநாயக கூட்டணியின் (Kargil Democratic Alliance (KDA)) கீழ் அணி திரண்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரியில், முன்னாள் எம்.பி.க்கள் திக்சே ரின்போச்சே மற்றும் துப்ஸ்டன் செவாங், முன்னாள் பாஜக அமைச்சர் செரிங் டோர்ஜே, லே தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தாஷி கியால்சன் மற்றும் நம்கையால் உள்ளிட்ட குழுவினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
லடாக் அட்டவணை 6ல் இடம் பெற இயலுமா?
2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தேசிய பழங்குடியினர் ஆணையம் லடாக்கை அட்டவணை 6-ன் கீழ் கொண்டு வர பரிந்துரை செய்தது. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் 97% பழங்குடியினர் என்பதால் இந்த பரிந்துரை வைக்கப்பட்டது. நாட்டின் இதர பகுதி மக்கள் இங்கே நிலம் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியின் தனித்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
வடகிழக்கு மாநிலங்களை தவிர நாட்டின் இதர பகுதிகள் இந்த அட்டவணைக்குள் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் அதிக அளவில் பழங்குடி மக்கள் தொகையை கொண்டுள்ள மணிப்பூரும் கூட அட்டவணை 6-ன் கீழ் கொண்டு வரப்படவில்லை. அதிக அளவில் பழங்குடி மக்கள் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகலாந்து மாநிலங்களும் ஆறாவது அட்டவணையின் கீழ் இடம்பெறவில்லை.
இந்த அட்டவணையில் லடாக் இடம் பெறுவது கடினமானது. ஆறாவது அட்டவணை வடகிழக்கு மாநிலங்களுக்கானது என்பதில் இந்திய அரசியல் அமைப்பு தெளிவாக இருக்கிறது. இந்நாட்டின் இதர பழங்குடியினர் பகுதிகள் அனைத்தும் அட்டவணை 5-ன் கீழ் வருகிறது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். எவ்வாறாயினும், அது அரசாங்கத்தின் தனிச்சிறப்பாக உள்ளது. அரசு முடிவெடுத்தால், இந்த நோக்கத்திற்காக அரசியலமைப்பை திருத்துவதற்கான ஒரு மசோதாவைக் கொண்டு வர முடியும்.
அரசின் பதில் என்ன?
பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட முதலாம் ஆண்டு முடிவில் லெஹ் பிராந்தியத்தில் பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் லடாக் ஹில் டெவெலப்மெண்ட் கவுன்சில் - லெஹ் தேர்தலை புறக்கணிக்கும் அறிவிப்பை வெளியிட்ட பிறகு லடாக் பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண நிலையை கண்டு விழித்துக் கொண்டது அரசு. டெல்லியில் அமித் ஷாவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் “அட்டவணை 6-ல் வழங்கப்படும் பாதுகாப்புகள்” போன்ற பாதுகாப்புகள் லெஹ்கிற்கு வழங்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டவுடன் தேர்தல் நடைபெற்றது.
ஜனவரி மாதத்தில், உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷான் ரெட்டி தலைமையிலான கமிட்டி லடாக்கின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலம் தொடர்பான பிரச்சனைகள் அடையாளம் காணப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஜூலை மாதத்தில் கார்கில் ஜனநாயக கூட்டணியிடம் கார்கில் பிரதிநிதிகளும் கமிட்டியில் இடம் பெறுவார்கள் என்று கிஷான் உறுதி அளித்தார்.
ராய், கார்கில் மற்றும் லே பிரதிநிதிகளின் கவலைகளை கவனிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆகஸ்ட் மாதம் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய் கூறினார். ஆனால் அதன் பின்னர் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தமிழில் : நித்யா பாண்டியன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.