இந்திய தேசிய காங்கிரஸ் கடந்த வாரம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும், இந்த தகவலை மாநில அரசு தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியது. மேலும், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஐ.டி.,கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் சேகரிப்புடன், லட்சக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டது, தனியுரிமை கவலைகளை எழுப்புகிறது என்றும் காங்கிரஸ் கூறியது.
வாக்காளர்களின் தரவு திருட்டு மோசடி என்ன?
2018 ஆம் ஆண்டில், பெங்களூரு மாநகராட்சியான ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP), சிலுமே கல்வி கலாச்சார மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வாக்காளர் விழிப்புணர்வுக்காக முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு (SVEEP) நடத்த அனுமதித்தது. அவர்கள் 2018 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலையும் திருத்தியமைக்க இருந்தனர். மேலும், இலவசமாக கணக்கெடுப்பை நடத்துவோம் என்றும் அந்த NGO கூறியது.
இதையும் படியுங்கள்: சரக்குக்கு நோ: கத்தார் விதித்த தடையால் கால்பந்து பார்வையாளர்கள் ஷாக்
ஆனால் பின்னர், பணியமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் வாக்காளர்களின் சாதி, வயது, பாலினம், வேலைவாய்ப்பு, கல்வி விவரங்கள், ஆதார் எண்கள், தொலைபேசி எண், வாக்காளர் அடையாள எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சேகரித்தனர். ஏஜென்சியால் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட இந்தத் தரவு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பெங்களூருவில் தேர்தலில் பா.ஜ.க தலைவர்கள் வெற்றிபெறுவதற்கு வசதியாக பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது. பல இடங்களில் ஒருவர் வாக்களிப்பதைத் தடுக்க 6.73 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக BBMP தெரிவித்துள்ளது.
போலீஸ் வட்டாரங்களின்படி, முக்கிய தரவுகள் வணிக மதிப்பைக் கொண்டிருந்தன, மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் அந்த தரவுகளைப் பெற ஒரு பெரிய தொகையை செலுத்த ஆர்வமாக உள்ளன.
BBMP சொன்னது என்ன?
BBMP பெங்களூரு நகர காவல்துறையிடம் இரண்டு புகார்களை அளித்துள்ளது, ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். BBMPயின் கூற்றுப்படி, வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, வீடு வீடாகச் செல்ல மட்டுமே சிலுமே நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் நிறுவனம் நிபந்தனைகளை மீறியது. இந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி தரவுகள் சேகரிப்பதற்கான அனுமதி வாபஸ் பெறப்பட்டு, நவம்பர் 4ஆம் தேதி கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு (CEO) தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், துணை ஆணையரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நவம்பர் 17ஆம் தேதி சிலுமே நிறுவனம் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, என்றும் BBMP கூறியது.
இருப்பினும், 2018 முதல் சிலுமே அறக்கட்டளையால் சேகரிக்கப்பட்ட தரவு மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது அல்லது யாருடன் பகிரப்பட்டது என்ற தகவலை BBMP வழங்கவில்லை.
இரண்டு எஃப்.ஐ.ஆர்.,களை பதிவு செய்வதைத் தவிர, சிலுமே தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அளவைக் கண்டறிய இந்த விஷயத்தை ஆராய்ந்து வருவதாக BBMP கூறுகிறது. இதுகுறித்து BBMPஇன் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் கூறுகையில், “சிலுமே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் BBMP பேட்ஜ் அணிந்து வீடுகளுக்குச் செல்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம், இது விதிமீறலாகும். தன்னார்வ தொண்டு நிறுவனம் சேகரித்த தரவுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று கூறினார்.
BBMP இன் புகாரின்படி, டிசம்பர் 22, 2018 அன்று, ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய தொகுதி நிலை அதிகாரி (BLO) உடன் இணைந்து வாக்காளர் பட்டியலைத் திருத்த சிலுமே நிறுவனம் அனுமதிக்கப்பட்டது, மேலும் அவர்களுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நவம்பர் 2, 2022 அன்று அனுமதிக் கடிதம் ரத்து செய்யப்பட்டாலும், லோகேஷ் கே.எம் (சிலுமே நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்) தான் BLO என்று போலி அடையாள அட்டையை உருவாக்கி, நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை விவரங்களைச் சேகரித்தார். பின்னர் அவர் இந்தத் தரவை ஒரு செயலியில் சட்டவிரோதமாக பதிவேற்றினார், என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
BBMPஇன் போலி அடையாள அட்டைகள் ஊழியர்களிடமிருந்து தரவுகளை சேகரிக்க வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையின் தொடர் விசாரணை என்ன?
வாக்காளர் தரவு திருடப்பட்டது தொடர்பாக பெங்களூரில் இரண்டு எஃப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவுகள் 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 419 (நபர் மூலம் ஏமாற்றுதல்), 420 (ஏமாற்றுதல்) மற்றும் 468 (போலி செய்தல்) ஆகியவற்றின் கீழ் ஹலசூர்கேட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிலுமே இன்ஸ்டிடியூட் மற்றும் லோகேஷ் கே.எம் பெயர்களை போலீசார் எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்துள்ளனர்.
அறக்கட்டளையின் மனிதவள (HR) அதிகாரியான தரணேஷை போலீசார் கைது செய்துள்ளனர்; இயக்குநர்களில் ஒருவரான ரேணுகா பிரசாத்; மற்றும் நிறுவனர்-இயக்குனர்களில் ஒருவரான ரவிக்குமாரின் சகோதரரான கெம்பேகவுடா தலைமறைவாக இருக்கிறார். சிலுமே அறக்கட்டளையின் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தி, தரவு உள்ளிடப்பட்ட ‘டிஜிட்டல் சமீக்ஷா செயலி’க்கான அணுகல் உட்பட பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் ஒரு மென்பொருள் உருவாக்குநரைக் காவலில் எடுத்தனர்.
காங்கிரஸ் குற்றம் சாட்டியது என்ன?
நீதி விசாரணை கோரி தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதோடு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, உயர்கல்வி அமைச்சர் அஸ்வத் நாராயண் மற்றும் BBMP தலைமை ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்த நபர்களின் செயல்பாடானது, தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், ஷெல் நிறுவனங்கள், டிஜிட்டல் சர்வே அப்ளிகேஷன் உரிமையாளர்கள் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் மிக முக்கியமான பகுதியான “வாக்காளர் பட்டியலைத் திருத்துதல்” என்ற செயல்முறைக்குள் கொண்டுவருவதாகும்”, என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவாஜிநகர் சட்டமன்றத் தொகுதியின் உதாரணத்தை எடுத்துக்காட்டி, முந்தைய தேர்தல்களில் தங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களை ஆளும் பா.ஜ.க நீக்கியுள்ளது அல்லது மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் கூறியது. காங்கிரஸ் கட்சி அல்லது மற்ற எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்த தொகுதியின் உண்மையான வாக்காளர்கள் தொகுதி எல்லையில் இருந்து வெளியேற்றப்படுவதாக அல்லது அவர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் பா.ஜ.க வாக்காளர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த சட்டமன்றத் தொகுதியில் சேர்க்கப்படுவதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையம் கூறியது என்ன?
கர்நாடகா தலைமை தேர்தல் அலுவலர் மனோஜ் குமார் மீனா வியாழக்கிழமை கூறுகையில், BBMP அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரி எந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கவில்லை, ஆனால் சிலுமே அறக்கட்டளைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான அனுமதி, அவர்கள் மீது புகார் வந்தவுடன் உடனடியாக திரும்பப் பெறப்பட்டது, என்று கூறினார்.
மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரி பி.எல்.ஓ அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். விரிவான விசாரணை நடத்த BBMP மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக் கொள்ளப்ப்பட்டுள்ளது.
பா.ஜ.க சொன்னது என்ன?
காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பா.ஜ.க, சிலுமே நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதுடன், தகவல்களை சேகரிக்க அனுமதித்தது காங்கிரஸ்தான் என்றும் கூறியுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மை, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், 2013ல் (காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்) நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு சிலுமே அறக்கட்டளைக்கு சர்வே நடத்த அனுமதி வழங்கியதாக, பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil