கேரளாவில் திருச்சூரை சேர்ந்த 47 வயதான நபர், வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக 2019 ஆம் ஆண்டில், மலப்புரம் மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தான். இந்த வைரஸ் முதன்முதலாக 2006 இல் ஆழப்புழாவில் பதிவானது. பின்னர், 2011இல் எர்ணாகுளத்தில் பதிவானது. வெஸ்ட் நைல் வைரஸ் என்றால் என்ன? அது பரவும் முறையை இங்கே காணலாம்.
வெஸ்ட் நைல் வைரஸ்
வெஸ்ட் நைல் வைரஸ் என்பது கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் நோய். WHO கூற்றுப்படி, இது “ஃபிளவிவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பறவைகளிலிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. அதே நேரம் இது மனிதர்களிடமிருந்து மனிதர்களை தாக்குவதில்லை.
பாதிக்கப்பட்ட பறவையை கொசு கடிக்கும் போது, இந்த வைரஸ் கொசு பாதிக்கப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் வைரஸ், கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளில் நுழைகிறது.தொடர்ந்து பாதிக்கப்பட்ட கொசு மனிதர் அல்லது பிற விலங்குகளை கடிக்கும் போது, வைரஸ் அவர்கள் உடலுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த வைரஸ் ரத்தமாற்றம் மூலமாக பரவக்கூடும். பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து அவரது குழந்தைக்கும் அல்லது ஆய்வகங்களில் வைரஸின் வெளிப்பாடு மூலமாகவும் பரவலாம். பாதிக்கப்பட்ட மனிதர்கள் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய கூற்றுப்படி, பறவைகள் உட்பட பாதிக்கப்பட்ட விலங்குகளை சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பரவாது. ஆனால், இறைச்சியை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. எஞ்சியிருக்கும் 20 சதவீத பேருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, சரும பாதிப்புகள், உடல் வலி, வீங்கிய நிணநீர் சுரப்பிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கடுமையான நோய்தொற்றுக்கு ஆளாகும்போது மூளை அழற்சி, மூளைக்காய்ச்சல், பக்கவாதம் மட்டுமின்றி மரணம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 150 பேரில் ஒருவர், கடுமையான நோய் பாதிப்பை சந்திக்கின்றனர். அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு பல வாரங்களும் மாதங்களும் ஆகக்கூடும். மத்திய நரம்பு மண்டலத்தில் சில பாதிப்புகள் நிரந்தரமாக இருக்கலாம் என சிடிசி கூறுகிறது. பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
நைல் வைரஸ் கண்டறிந்தது எப்படி
1937இல், இந்த வைரஸ் உகாண்டா நாட்டின் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 1953 ஆம் ஆண்டு நைல் டெல்டா பகுதியில் உள்ள பறவைகளில் ( காகங்கள் மற்றும் கொலும்பிஃபார்ம் ) அடையாளம் காணப்பட்டது.
இது 1997 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பறவைகளை தாக்கும் நோய்க்கிருமியாக கருதப்படவில்லை. ஆனால் அப்போது இஸ்ரேலில் தீவிரமான திரிபு மூளையழற்சி மற்றும் பக்கவாதத்தின் அறிகுறிகளை வழங்கும் பல்வேறு பறவை இனங்களின் இறப்பை உண்டாக்கியது.
WHO இன் கூற்றுப்படி, இந்த வைரஸ் காரணமாக மனித நோய்த்தொற்றுகள் 50 ஆண்டுகள் மேலாக உலகின் பல நாடுகளில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, பறவைகள் இடம்பெயர்ந்த பாதைகளில் வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது.
இன்று, இந்த வைரஸ் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்படுகிறது.
தடுக்கும் முறைகள்
கொசுக்கள் மூலமாகத்தான் இந்த வைரஸ் பரவுகிறது. முதலில் கொசுக்கள் வராமல் நடவடிக்கை எடுப்பது அவசியம். வீடுகளில் ஜன்னல்களில் கொசுவலை பயன்படுத்துவது அவசியம்.வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்க விட வேண்டாம். கொசு கடிக்க முடியாத அளவு, நீண்ட சட்டைகள் பேண்ட் அணிந்துகொள்ள வேண்டும்.வீடு வளாகங்களில் குப்பைகள் சேர்வதை தடுக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil