கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதால், தக்காளி காய்ச்சலை தடுப்பதும் அதற்கான மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பாகவும் மத்திய சுகதாரத்துறை வழிக்காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான பார்வையை லான்செட் என்ற மருத்துவ ஆய்வு இதழ் வெளியிட்டுள்ளது. இது ஒரு எச்எப்எம்டி அதாவது கை-வாய்-கால் தொடர்பான வைரல் தொற்று என்று கூறிகின்றனர். இது என்டர்நோ வைரஸ் என்ற வைரஸால் பரவுகிறது.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன ?
காய்ச்சலுடன், மூட்டு வலி, மற்றும் தக்காளி போல் சிவப்பான ராஷஸ் 5 வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மேலும் கூடுதலாக வாந்தி, மயக்கம், பேதி அறிகுறிகளும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு மற்றும் சிக்கன்கொனியா பாதித்தவர்களை இது தாக்குவதாக கேரளாவில் கிடைத்த தகவல் படி கூறப்படுகிறது. காக்ஸாக்கி வைரஸ் ஏ-6 மற்றும் ஏ-16 என்ற வேரியண்டுகளால் இந்நோய் உருவாக்கப்படுகிறது.
வைராலஜி பேராசிரியர் டாக்டர் எக்தா குப்தா கூறுகையில் “ இது ஒரு புது நோய் இல்லை. இது தொடர்பாக மருத்துவ புத்தக்கத்தில் கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு காலக்கட்டங்களில் இது இந்தியா முழுவதிலும் காணப்பட்டுள்ளது” என்று அவர் கூறுகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அதிக வைரல் லாப்கள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளதால், இது போன்ற மற்ற வைரல் நோய்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படுகிறது.
இதற்கான சிகிச்சை
தக்காளி காய்ச்சலுக்கு தனியாக எந்த மருந்துகளும் இல்லை. காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை வழங்கப்படும்.
வராமல் தடுப்பது எப்படி ?
இந்த அறிகுறிகள் உள்ள நபர்கள் 5 முதல் 7 நாட்கள்வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்ற குழந்தைகளை தொடவோ, ஒன்றாக சேர்ந்து விளையாடவோ கூடாது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியாக உணவு தட்டு, உடை மற்றும் அடிக்கடி படுக்கையை சுத்தம் செய்வதும், சிவப்பு ராஷஸ்களை சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். முறையான பரிசோதனை செய்வதும் அவசியமாகிறது.